கனியும் கணிதம் 49: உடலுக்குள் அளவீட்டியல் – உயரம்

கனியும் கணிதம் 49: உடலுக்குள் அளவீட்டியல் – உயரம்
Updated on
2 min read

உடலில் இருக்கும் எண்ணிக்கையை பார்த்தோம். அதே போல உடலுக்குள் எல்லா அளவீடுகளும் உள்ளன. அளவீட்டில் அடிப்படையான நீளம், நிறை, காலம் ஆகியவை நம் உடலிலேயே காணலாம். நீளத்தை கிலோ மீட்டர், மீட்டர், சென்டிமீட்டர், அடி போன்ற அலகுகளில் குறிப்பிடுவோம். உயரத்தை மீட்டரில் குறிப்பிடுவோம். உங்கள் உயரம் என்ன தெரியுமா? எத்தனை மீட்டரில் இருந்து எத்தனை மீட்டருக்கும் இருப்பீர்கள்? 10-20? 20-30? அல்ல ஒன்றில்இருந்து இரண்டு மீட்டருக்குள்தான் இருப்போம். நீங்கள் நேரில் பார்த்த மிக உயரமான மனிதர்கூட 2 மீட்டரை தொட்டிருப்பது அரிதானது.

ஆணின் சராசரி உயரம்: இந்திய மனிதர்களின் சராசரி உயரம் எவ்வளவு தெரியுமா? 1-2 மீட்டர் என ஏற்கெனவே சொல்லிவிட்டோம். சராசரி ஆணின் உயரம் 170 சென்டிமீட்டர் (cm). (100 சென்டிமீட்டர் = 1 மீட்டர் என்பதால்) 1.7 மீட்டர் (m). அடிகளில் சொல்வதெனில் 5 அடி (feet) 7 அங்குலம் (inch). இது உலக அளவினைக் கணக்கிடும்போது கொஞ்சம் குறைவுதான். ஏன்? ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் உயரம் மாறுபடும். சீனர்கள், ஜப்பானியர்கள் இந்தியர்களைவிட உயரம் குறைவாக இருப்பார்கள் என்பதை கவனித்துள்ளீர்களா?

கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதனுடைய உயரம் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே இந்த உயர அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. மனிதனின் பரிணாம வளர்ச்சியை கணக்கிடும்போது இந்த உயர அதிகரிப்பு மிகவும் அதிகம் என்கின்றனர். இதற்கு காரணமாகச் சொல்வது சத்தான உணவாகவும் உணவுப்பழக்கமாகவும் இருக்கலாம் என்கின்றனர். டென்மார்க் நாட்டில் ஆண்களின் சராசரி உயரம் 183 சென்டிமீட்டர். பெண்களில் சராசரி உயரமும் அங்கே அதிகம் (171 சென்டிமீட்டர்). நேபாளத்தில் ஆண் மற்றும் பெண்ணின் சராசரி உயரம் மிகவும் குறைவு.

காரணம் என்ன? - ஆணின் சராசரியைவிட பெண்ணின் சராசரி உயரம் உலகம் முழுக்கவே குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் பெண்களில் உடலில் அதிக அளவில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் (estrogen) மற்றும் குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் (testosterone). எலும்பு வளர்ச்சிக்கு உதவுவது டெஸ்டோஸ்டிரோன். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவில் பருவமடைந்துவிடுவதால் ஆண்களில் எலும்புகள் வளர இன்னும் நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் ஆண்கள் பெண்களைவிட 7% கூடுதல் உயரமாக இருக்கின்றனர். பெண்களின் உயரம் 100 சென்டிமீட்டர் எனில் ஆண்களில் உயரம் 107 சென்டிமீட்டராக இருக்கும்.

உயரம் மாறுபடுவதற்கு சில காரணங்கள் உண்டு. விளையாட்டு பயிற்சிகளால், ஊட்டச்சத்து குறைபாடுகளால், பிறக்கும்போது இருக்கும் எடையால், மரபணுவால், இதர உடல் குறைபாடுகளால் இவை மாறுபடும். ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட வயதில் என்ன உயரத்தில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உயரம் அதிகமாக இருப்பதோ உயரம் குறைவாக இருப்பதோ பிரச்சினை இல்லை. இயல்பாக அது நடக்கின்றது எனில் பெரிய கவலை இல்லை. சர்வேக்கள் என்பதே கண்காணிக்கவே. கண்பார்வை, எடை, உயரம் எனகுழந்தைகளைப் பற்றிய சர்வேக்கள் மிக முக்கியமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்ட உதவும்.

உண்மையில் மனிதர்கள் உயரம் என்பது உடல் அளவில் அல்ல, எண்ணங்களின் உயரத்திலும், செயல்களில் தூய்மையிலும்,

சாதனைகளில் வேட்கையிலும் உள்ளது. சரி, உங்க உயரம் என்ன? உங்கள் வயதிற்கு ஏற்ற உயரத்தில் இருக்கின்றீர்களா? உங்கள் வகுப்பில் இருக்கும் மாணவர்களின் சராசரி உயரத்தையும் கணக்கிடும் பயிற் சியை மேற்கொள்வோமா?

கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in