

கீழையூர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் முகேஷ் என்றால் மிகவும் பிடிக்கும். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். ஒருநாள் வெளியூர் சென்றாலே எல்லோரும் முகேஷை தேடி தேடி வருவார்கள். இதைக் கண்டு பக்கத்து வீட்டு மாதேஷ்க்கு பொறாமை தீ பற்றி எறியும். முகேஷை பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொண்டு செல்வான்.
இருவர் வயலும் அருகருகே இருக்கும். முகேஷ் கால நேரம் பார்க்காமல் வேலை செய்து நெல்லை அறுவடை செய்தான். வருடந்தோறும் ஊரில் இருக்கும் ஏழை குடும்பத்திற்கு உதவி செய்தான். ஒவ்வொரு ஆண்டும் தனது கிராமத்தில் உள்ள ஏதோவொரு குடும்பத்தின் திருமண செலவை ஏற்றுக்கொண்டு அதனை முன்னின்று நடத்திவைப்பான் முகேஷ்.
நல்லவற்றையே சிந்திக்கும் முகேஷை ஏன் மாதேஷ் வெறுக்கிறான் என்பது புரியாத புதிராகவே இருந்தது. ஒரு பகைவன்கூட இருக்கக்கூடாது என்பது அவன் கொள்கையாகவே இருந்தது. எப்படியாவது அன்பைஅரணாக்கி பகைவரை காக்கும் கோட்டையான அறிவை கருவியாக்கி மாதேஷை நண்பனாக்கி கொள்ள ஆசைப்பட்டான். வயலை கடந்து செல்லும் போது மாதேஷ் விஷம் தீண்டிமயங்கி கிடப்பதைக் கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தக்க சமயத்தில் காப்பாற்றினான். அவன் குடும்பத்தில் எல்லோரும் நன்றி சொன்னார்கள்.
எப்போதும் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் மாதேஷ் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி முகம் புதைத்து கண்ணீர்விட்டான். பகைவரையும் காப்பதற்கு அறிவே துணையாக இருந்ததை தான் அறிவு அற்றம் காக்கும் கருவி என்கிறார் வள்ளுவர்.
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
சென்று அழிக்கலாகா அரண்
அதிகாரம்:அறிவுடைமை (குறள்:421)
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்