இமாலய மாற்றம் சாத்தியமா?

இமாலய மாற்றம் சாத்தியமா?

Published on

பள்ளிக்கூடம் என்பது இறைவன் உறையும் இடம். அறியாமை அகற்றி அறிவு தீபம் ஏற்றுகின்ற போற்றுதலுக்குரிய இடம். அந்தப் பள்ளி வளாகத்தினுள் யாரோ ஒருவர் குடித்துவிட்டு உள்ளே போட்ட மது பாட்டில்களுக்காக தண்டிக்கப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் பற்றிய செய்தியை படித்ததும் வேதனையுற்றேன்.

இதே நிலைமை ஏன் நமக்கும் ஒரு நாள் நேர்ந்திடாது என்று எண்ணிக்கூட அச்சமுற்றேன். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நல்ல கட்டமைப்புள்ள பள்ளி. எங்களது பள்ளிவளாகம் முழுவதும் மரங்கள் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் ரம்யமான பள்ளியில் பணியாற்றுவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

ஆனால் எங்களது பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள சுடுகாட்டில் இறந்தவர்களை எரியூட்டும் நிகழ்விற்கு பின்னர் நடக்கின்ற செயலினால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

சுடுகாட்டுக்கு அருகில் இருப்பதால் எங்களது பள்ளியின் சுற்றுச்சுவர் கிட்டத் தட்ட 12 அடி அளவிற்கு உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. அதற்குமேல் கம்பி வேலியும் போடப்பட்டுள்ளது. இருந்த போதும், ஒரு நாள் எமது பள்ளி மாணவிகள் உடற்கல்வி ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்காக மாலை நேரம் சுமார் ஐந்து மணி அளவில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளிவளாகத்தின் விளையாட்டுத் திடலில்ஒரு மதுபாட்டில் உள்ளே வந்து விழுந்து உள்ளது. எங்களது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் உள்ளே இருந்து ஒரு எச்சரிக்கை குரல் கொடுத்ததும் மது பாட்டில் எதுவும் அடுத்து வரவில்லை. இந்த நிகழ்வினைப் பற்றி கேட்டவுடன் என்னால் சாதாரணமாக கேட்டுவிட்டு கடந்து செல்ல முடியவில்லை.

இதுபற்றி யாரிடம் முறையிட முடியும்? திறந்தவெளியில் மது குடிக்காதீர்கள் என்று குடிமகன்களிடமா? உள்ளூர் மக்களிடமா? காவல்துறை யிடமா? பள்ளி நிர்வாகத்திடமா?

ஒருவேளை அந்த மதுபாட்டில் தலையில்பட்டு ஒரு மாணவனோ அல்லது மாணவியின் மண்டை உடைந்து இருந்தால் தொலைக்காட்சியிலும் you-tubeலும் வலைத்தளத்திலும் முக்கிய செய்தியாக பகிரப்படலாம். முந்தைய நாள் இரவு குடித்துவிட்டு உள்ளே தூக்கி எறியப்பட்டால் மறுநாள் காலையில் திடீரென நடத்தப்படுகின்றகல்வித் துறையின் ஆய்வில் அந்த மதுபாட்டில் தென்பட்டால், பலிகடா ஆவது தலைமை ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும்தான்.

எங்கே சென்று கொண்டிருக்கிறது நமது சமுதாயம்? இறப்பு போன்ற நிகழ்வுகளில் குடித்துவிட்டு தூக்கி எறிகின்ற மதுபாட்டில்களை குப்பை தொட்டிகளில் போடாவிட்டாலும் பள் ளிக்கூட வளாகத்திற்கு உள்ளாவது போடாமல் இருக்கலாம்.

உள்ளூர் மக்களுக்கோ, வார்டு கவுன்சிலர்களுக்கோ, பஞ்சாயத்து தலைவர்களுக்கோ இக்கட்டுரை பற்றிய தகவல் கிடைத்து இனிவரும் காலங்களிலாவது, இதுபோன்ற அநாகரீகமான செயல்கள் நிகழாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நம்புகிறேன். “இமாலய மாற்றம் நிகழாவிட்டாலும் இம்மியளவு மாற்றமாவது நிகழ்ந்திடும்!” என்ற நம்பிக்கையில் இந்த கட்டுரையினை பகிர்கிறேன்.

கட்டுரையாளர், தலைமை ஆசிரியர், பல்லோட்டி அரசு மேல்நிலைப்பள்ளி

நாகமலை, மதுரை மாவட்டம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in