

குழந்தைகள் மகிழ்ச்சியானவர்கள். எளிதில் எதையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். கற்றல் செயல்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்க கூடியவர்கள். குழந்தைகள் மாறுபட்ட கற்றல் அனுபவங்களை எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் களப்பயணம் குழந்தைகளிடையே ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் அனுபவங்களை வழங்கும்.
களப்பயணம் என்பது குழந்தைகளை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வது மட்டும் அல்ல. பயணத்திற்கு முந்திய தயாரிப்பு தேவை. களப்பயணம் இலக்குகளுடன் நடைபெற வேண்டும். கல்விமதிப்பை உறுதி செய்யும் இலக்குகளைத் தேர்வு செய்ய வேண்டும். களப்பயணத்திற்கும் முன்பாக அவ்விடத்தின் வரலாற்று முக்கியத்துவம் அல்லது அறிவியல் சம்பந்தமான பின்னணி தகவல்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அது பயணத்தின் போது அவர்களின் புரிதலையும் ஈடுபாட்டையும் மேம்படுத்த உதவும்.
பால் பதப்படுத்தும்முறை மற்றும் பாலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பொருள்கள், பல்வேறு பகுதிகளுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துச் செல்லுதல் குறித்த தகவல்கள் குழந்தைகளுக்கு பால்பண்ணை அழைத்துச் செல்லும்முன்பு வழங்க வேண்டும். அதன்பின், பால்பண்ணைக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்பதையும், முழு ஈடுபாட்டுனுடன் தங்கள் கற்றலை மேம்படுத்திக் கொள்வதையும் காணமுடியும். ஒவ்வொரு முறையும் மதுரை ஆவின்பால்பண்ணைக்கு இவ்வாறே குழந்தை களை அழைத்துச் செல்கிறோம்.
களப்பயணத்தின் போது நிபுணத்துவ வழிகாட்டலுக்கு ஏற்பாடு செய்தல் குழந்தைகளின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த உதவும். ஒருமுறை பசுமைநடை முத்துகிருஷ்ணன் உதவியுடன் தொல்பொருள் ஆய்வாளர் சாந்தலிங்கம் நிபுணத்துவத்துடன் தெப்பக்குளம், காந்தி பொட்டல், பத்து தூண், விளக்குத்தூண், மன்னர் திருமலை நாயக்கர் மஹால் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம்.
அப்போது தொல்பொருள் ஆய்வாளர் சாந்தலிங்கம் அவ்விடங்களில் வரலாற்றுச் சிறப்புகளை விளக்கி கூறியபோது குழந்தைகள் ஆழமான அறிவை பெற்றனர். இப்படிப்பட்ட தனித்துவமான நுண்ணறிவுகளை வழங்குவதன் வழியாக குழந்தைகளின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தியும், பல நாட்கள் நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவ முடியும்.
முதல் வகுப்பு குழந்தைகள் இலைகளின் வடிவங்கள் பாடத்தை கற்றபின், பள்ளி வளாகத்தில் அல்லது அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் செல்லும்போது வகுப்பறையில் கற்றுக் கொண்ட இலைகளின் வடிவங்களை நிஜ உலகச் சூழலில் கிடைக்கும் இலைகளுடன் பொருத்திப் பார்த்து ஆனந்தம் அடைவார்கள். மகிழ்ச்சியான கற்றலுக்கு களப்பயணம் உதவியாக இருக்கிறது.
பல இடங்களில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு, வாய்களுக்குப் பூட்டு போட்டு மௌனமாக சுற்றி வருவதைப் பார்க்கிறேன். இது மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தை வழங்காது. களப்பயணத்தில் குழந்தைகள் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், அவர்களை விவாதங்களில் ஈடுபடுத்தவும், கேள்விகளைக் கேட்க வைக்கவும், தலைப்பு தொடர்பான செயல்பாடுகளுக்கான வாய்ப்புகளை வழங்கவும் ஆசிரியர்கள் இடம் அளிக்க வேண்டும்.
களப்பயணத்தில் குழந்தைகள் கற்றுக் கொண்டதை வலுப்படுத்தும் விவாதங்கள், கட்டுரைகள் எழுதும் பணிகள், செயல்திட்டங்கள் போன்ற பின்தொடர் நடவடிக்கைகள் அவசியம்.
களப்பயணம் சுறுசுறுப்பாக குழந்தைகள் பங்கேற்கவும், களப்பயணத்திற்குமுன்னும் பின்னும் கற்றுக்கொன்றவற் றுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் உதவுகிறது.
களப்பயணங்கள் குழந்தைகளிடம் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சமூகத் திறன்கள் மற்றும் குழு பணியை மேம்படுத்துகின்றன. கற்றலில் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் தூண்டுகின்றன. விமர்சன சிந்தனை, சிக்கலை தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகின்றன. முக்கியமாக நீடித்த நினைவு களை உருவாக்குகின்றன. ஆகவே ஆசிரியர்கள் வாய்ப்புள்ள பாடங்களுக்கு களப்பயணங்களை உருவாக்கலாம்.
ஒரு வெற்றிகரமான களப்பயணம் என்பது கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்தக்கூடியதாகவும், ஈர்க்கக்கூடிய அனுபவத்துடன் கல்வி மதிப்பையும் இணைக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு திட்டமிடப்பட வேண்டும்.
எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.