வாழ்ந்து பார்! 55: பொன்னிலவன் என்ன செய்தார்?

வாழ்ந்து பார்! 55: பொன்னிலவன் என்ன செய்தார்?
Updated on
2 min read

ஒருவர் தனக்கு சாதகமான சூழலிலும் சாதகமற்ற சூழலிலும் ஏற்படக்கூடிய மனஅழுத்தத்தை ஏற்றிசையும் வழிகளை கடந்த வாரங்களில் பூங்கொடி, மகிழ்நன் கதைகளின் வழியே அறிந்துகொண்டோம். இவை ஒருவரின் தனிவாழ்வில் ஏற்படும் மனஅழுத்தத்தை அவரே திட்டமிட்டு, பொறுமையாகவும் விடாமுயற்சியோடும் ஏற்றிசைந்து வெல்லும் வழிகளைப் பேசுகின்றன. ஆனால், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களோடு கலந்து பழகும்போது நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள்வது? என்று வினவினாள் மணிமேகலை.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் பொன்னிலவன் தன் அம்மாவோடும் எழுந்து நடமாட முடியாத பாட்டியோடும் வாழ்கிறார். அவர் தந்தை வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். இந்நிலையில் பொன்னிலவன் அம்மாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஒரு மாதம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர் கூறிவிட்டார். அங்கு அம்மாவோடு தங்கி அவரைக் கவனித்துக்கொள்ள பொன்னிலவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதேவேளையில் பாட்டியை தனியே வீட்டில் விடமுடியாது. பொன்னிலவனுக்கோ ஆண்டிறுதித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன. எனவே, அவர் நாள்தோறும் பள்ளிக்குச் சென்றாக வேண்டிய சூழல். இதனால் அவர் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானார். பொன்னிலவன் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?

வேறு வழி உண்டா?: அழுவேன் என்றான் கண்மணி. அழுவதால் சிக்கல் தீர்ந்துவிடுமா? என்றாள் அருட்செல்வி. சிக்கல் தீராது; ஆனால், மனஅழுத்தம் குறையும் அல்லவா? என்றாள் அருட்செல்வி. மனஅழுத்தம் குறையும், ஆனால் சிக்கல் தீராதே என்றான் அழகர். மனஅழுத்தம் குறைந்தால்தான், சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகளை மனம் சிந்திக்கத் தொடங்கும் என்றான் அருளினியன். அருமை என்று அனைவரையும் பாராட்டிய எழில், பொன்னிலவனின் மனஅழுத்தம் குறைய வேறு ஏதேனும் வழியிருக்கிறதா? என்று வினவினார்.

தன்னுடைய சிக்கலை தனக்குநெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்றாள் இளவேனில். அவ்வாறு பகிர்ந்தால் முதலில் மன பாரம் குறையும். அந்த நெருக்கமானவர் அச்சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவக்கூடும் என்றாள் கயல்விழி. அவர் உதவாவிட்டாலும், நமது மனதில் உள்ள அழுத்தம் குறைந்ததால், நமது சிக்கலைத் தீர்ப்பதற்கான வழியை நாமே சிந்திக்க இயலும் என்றான் காதர். நன்று தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள் என்று பாராட்டினார் எழில்.

படிப்பா? அம்மாவா?- பொன்னிலவன் எவ்வாறு அந்தச் சூழலில் மனஅழுத்தத்தைக் கையாண்டார்? என்று வினவினாள் தங்கம். “பொன்னிலவன் தனது சூழலை அவர் அம்மாவுக்குத் தோழியும் அவரது வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்பவருமான கார்குழலியிடம் பகிர்ந்தார். பாட்டியை தான் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். மருத்துவமனையில் அவர்அம்மாவின் படுக்கைக்கு அடுத்த படுக்கையில் இருப்பவரை கவனித்துக்கொண்டிருந்தார் ஒருவர். இரண்டொரு நாட்களில் பொன்னிலவனுடன் பேசிப்பழகிய அவர்,பொன்னிலவனின் இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்டார். பகற்பொழுதில் பொன்னிலவன் அம்மாவைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். அதனால் பொன்னிலவன் உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று திரும்பினார் என்று விளக்கினார் எழில்.

ஒருவேளை, பக்கத்து வீட்டுக்காரரும் பக்கத்துப் படுக்கையிலிருந்த நோயாளியைக் கவனிப்பவரும் உதவவில்லை என்றால் பொன்னிலவன் எப்படி மனஅழுத்தத்தைக் கையாள்வார்? என்றான் சாமுவேல். படிப்பா? அம்மாவா? என அவர் முடிவெடுக்க வேண்டும் என்றாள் நன்மொழி. தேர்விற்கு மருத்துவமனையில் இருந்துகூடப் படிக்க முடியும் என்றான் சுடர். ஆனால், ஆண்டிறுதித் தேர்வை அங்கிருந்து எழுத முடியாதே என்றாள் பாத்திமா. முடியாதுதான். ஆனால், தேர்வை மறுமுறை எழுத வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அம்மாவின் உடல்நிலை அவ்வாறு அல்லவே. எனவே, அம்மாவை பேணும் முடிவையே அவர் எடுக்க வேண்டும் என்றான் தேவநேயன். உரையாடலைக் கவனித்த எழில், இத்தகு இக்கட்டான நிலையில் மனஅழுத்தத்தைக் கையாள சில சூழல்கள் யாருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார் எழில்.

(தொடரும்)

கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்.

தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in