கழுகுக் கோட்டை 25: பதறாத காரியம் சிதறாது

கழுகுக் கோட்டை 25: பதறாத காரியம் சிதறாது
Updated on
2 min read

செப்படி வித்தைக்காரனான தத்தனிடம் குணபாலன் கொடுத்து வளர்க்கச் சொன்ன கழுகுக் குஞ்சுகள் சிறப்பாக வளர்ந்துவிட்டதைக் கண்ட குணபாலனுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தத்தனைப் பாராட்ட வார்த்தைகளே இல்லாமல், அவனைக் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குணபாலன், ‘எங்கே, நானும் அவற்றுக்குத் தீனி போட்டு அவற்றுடன் பழகுகிறேன்’ என்றான். கழுகுக் குஞ்சுகளுக்காக ஏரி மீன்களைப் பிடிக்கத் தூண்டிலை எடுத்துக்கொண்டு சென்றான். தத்தனும் அவனோடு சேர்ந்து புறப்பட்டான்.

இருவரும் அமைதியான அந்த ஏரிக்கரையில் ஒரு பாறையின் மீதுஅமர்ந்து தூண்டிலைப் போட்டுக்கொண்டு மீனுக்காகக் காத்திருந்தார்கள். அப்போது அந்த அமைதியைக் குலைத்தவாறு ஏதோ சத்தம் தொலைவில் கேட்டது. உடனே குணபாலன், ‘தத்தா, அதென்ன சத்தம்? உனக்குக் கேட்டதா?’ என்றான். அதற்கு தத்தன், ‘ஆம், குணபாலா, எனக்கும் கேட்டது. நீ தூண்டிலைப் போட்டுக்கொண்டிரு. நான் சென்று என்ன சத்தம் என்றுபார்த்து வருகிறேன். என்றவாறு கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த காட்டினுள் நுழைந்தான்.

இப்போது யாரோ ஒருவர், ‘ஆ… ஐயோ, காப்பாற்றுங்கள்’ என்று கத்தும் சத்தம் தெளிவாகக் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்ட குணபாலன் திடுக்கிட்டு எழுந்தான். தூண்டிலை ஓரமாக வைத்துவிட்டு அவனும் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது, ‘குணபாலா, இங்கே ஓடி வா…’ என்று தத்தன் பெரிதாய்க் குரலெழுப்பிக் கத்தினான். குணபாலன் இன்னும் விரைவாக ஓடத் தொடங்கினான். அங்கே அவன் கண்ட காட்சி மிகவும் பயங்கரமாக இருந்தது. அங்கே மக்கள் புரட்சிப்படைத் தலைவனான சேரலாதனை ஒரு முதலை வாயால் கவ்விக்கொண்டிருந்தது.

இதுவே வேறொரு சமயமாக இருந்திருந்தால், மிகப் பெரும் வீரனான சேரலாதனே எவரது துணையுமின்றி அம்முதலையை வெட்டிச் சாய்த்துவிட்டு வந்திருப்பான். ஆனால், அப்போதுதான் பலரிடமும் சண்டையிட்டு, உடம்பில் ஆங்காங்கே வெட்டுப்பட்டு, உதிரம் விரயமான நிலையில் இருந்ததினால், மிகவும் சோர்வுற்றிருந்தான். அதனால் அந்த முதலையை தனியொருவனாக எதிர்கொள்ளும் திறன் குன்றி காணப்பட்டான். அந்தச் சூழ்நிலையை உடனடியாக கிரகித்துக்கொண்ட குணபாலன் அடுத்து செய்ய வேண்டிய செயலை நொடிப் பொழுதில் தீர்மானித்து, தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த முதலையை நோக்கிப் பாய்ந்தான்.

அப்படிப் பாய்ந்த குணபாலனைத் தன் பலம் மிகுந்த வாலால் அடித்துத் தூக்கிப்போட்டது அந்த முதலை. முதலையின் பலமே வாலில்தான் என்பதே அவசரத்தில் பாய்ந்த குணபாலனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவனது மனமோ, ‘பதறாதே, பதறாத காரியம் சிதறாது’என்றது. ‘இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்றவாறே முதலையின் கழுத்துப் பகுதியின் மீது பாய்ந்துஅமர்ந்தான் குணபாலன். அடுத்ததாக தனது வலது கையில் வைத்திருந்த சிறிய கத்தியை முதலையின் கழுத்துப் பகுதியில் ஆங்காங்கே இறக்கினான். முதலை தடிமனான தோலைக் கொண்டிருந்ததால், கத்திஅதன் உடம்பில் இறங்கவே இல்லை. முதலையும் தன் வாலால் குணபாலனை அடிக்க முயன்று தோற்றது. ஆனால், அதன் வாயால் கவ்விக்கொண்டிருந்த சேரலாதனை மட்டும் விடவே இல்லை.

தத்தனும் தன் பங்குக்கு கையில் வைத்திருந்த கம்பால் ஓங்கி ஓங்கிஅடித்தான். முதலையோ எதற்கும் மசியவே இல்லை. சேரலாதனோ அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் மயங்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருந்தான். குணபாலன் மட்டும் முதலையை கத்தியால் குத்தும் செயலை நிறுத்தவே இல்லை. அதில் ஒரு குத்து முதலையின் கண்ணுக்கு அருகில் விழுந்தது. உடனே முதலை தனது வாயில்கவ்விப் பிடித்திருந்த சேரலாதனை விடுவித்தது. அதைப் பார்த்த குணபாலன், ‘தத்தா, அவரை அப்பால்பிடித்து இழுத்துச் செல்’ என்று கட்டளையிட்டான். தத்தனும் அவ்வாறேசெய்தான். ‘அவரது முகத்தில் தண்ணீரை பிடித்து வந்து தெளித்து, அவரது மயக்கத்தைப் போக்கு’ என்றான். இப்போது முதலையின் கோபமும் குறியும் குணபாலனை நோக்கித் திரும்பியது.

குணபாலனைத் தன் வாயால் கவ்விப் பிடிக்கத் தாவியது. அதனிடம் மாட்டாமல் குணபாலனும் பாய்ந்து விலகிச் சென்றான். அவன் எங்கும் ஓடிவிடாதபடி தனது வாலைச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது அந்த முதலை. அதன் முன்னால் சென்றால், வாயாலும் பின்னால் சென்றால் வாலாலும் அதன் பலத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. குணபாலன் தப்பித்து ஓட முடியாமல் அதன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி இருந்தான். மேலும் அந்த முதலையோடு தொடர்ந்து சண்டையிட முடியாமலும் சோர்ந்து போக ஆரம்பித்திருந்தான். ஆனால், அவனது மனம் மட்டும் கொஞ்சம் கூட சோர்ந்து போகவில்லை. எனவே, தன்னிடமிருந்த கத்தியால்தொடர்ந்து அதனுடன் போரிட்டுக்கொண்டிருந்தான்.

(தொடரும்).

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in