புதுமை புகுத்து - 13: உங்களுடைய உண்மையான வயதென்ன தெரியுமா?

புதுமை புகுத்து - 13: உங்களுடைய உண்மையான வயதென்ன தெரியுமா?
Updated on
3 min read

சமீபத்தில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு விழாவில் என் பள்ளி தோழர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில் வயது மூப்பினால் நரை விழுந்து, தோல் சுருங்கிய ஒருவர் எங்களைப் பார்த்து நமக்கெல்லாம் வயசாச்சு, இனி குனிஞ்சு கீழே தொடாதே, தனியாக வீட்டில் இருக்கும்போது ஏணி ஸ்டூல் எதிலும் ஏறாதீங்க என பயமுறுத்த வேறொருவரோ என் தோளை தட்டி மச்சி நாங்கெல்லாம் இமய மலையில் ட்ரெக்கிங் போறோம், நீயும் வாயேன்” என்றார்.

எல்லோருக்கும் சம வயது; ஆனால் பங்கெடுத்த பதினைந்து நண்பர்களை சேர்த்து பார்த்தால் ஒருவர் மூப்பு அடைந்து தள்ளாடும் நிலையிலும் வேறொருவன் இன்றும் இளமையாகவும் உணர்கிறார். வயது என்பது வெறும் எண் தான் என்பார்கள். இன்று அறிவியல் உலகமும் அதையே வழிமொழிகிறது.

பூமி ஒவ்வொருமுறை சூரியனை சுற்றிமுடிக்கும்போது நமக்கு ஒரு வயது கூடிப்போகிறது என்கிறோம். இதனை உடலின் முதுமைப்படுதலோடு குழப்பிக்கொள்ளக் கூடாது என்கிறர்கள் ஆய்வாளர்கள்.

முதுமை என்றால் என்ன?

நாட்காட்டியில் ஒரு ஆண்டு முடிவடைவதை வைத்து வயதை கணக்கிடுவதை நாட்காட்டி வயது என்கிறார்கள். நாள்பட வண்ண துணி நிறம் மங்குவது போல நமது உடலியக்க செயல்பாடுகளும் தளர்ந்துபோவதை உயிரியல் வயது என்கிறார்கள்.

காலவோட்டத்தை கொண்டு நாட்காட்டி வயதை கணக்கிடுகிறோம். உடலியக்க வயதை கணக்கிட பல்வேறு முறைகளை கையாள்கிறார்கள். ஷு லேஸ் முனையில் நூல் பிரிந்து விடாமல் தடுக்கும் படி உலோகத்தில் செய்யப்பட்ட காப்பு பொருத்தப்பட்டு இருக்கும். அதுபோல நமது மரபணு தொகுதியான குரோமோசோமின் நுனியில் டெலோமியர் எனும் பகுதி உள்ளது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே இயல்பு; நமது பழைய செல்கள் பிரிந்து அதற்கு பதில் புதிய இரண்டு மகவு செல்கள் பிறக்கும்.

செல் பிரிதலில் இரண்டு புதிய மகவு செல்கள் உருவாகும்போது தாய் செல்களின் டெலோமியர் நீளத்தை விட மகவு செல்களின் டெலோமியர் நீளம் சற்றே குறைந்து வரும். அவ்வாறு அடுத்த அடுத்த தலைமுறை செல்களில் டெலோமியர் நீளம் குறைந்து கொண்டே போய் குறிப்பிட்ட நீளம் வந்தடைந்ததும் புதிய செல்கள் பிறப்பது நின்றுவிடும். அதாவது நமது செல்களில் உள்ள குரோமோசோமின் டெலோமியர் நீளத்தை அளவிட்டு நமது உடலியல் வயதை அளவிடலாம். பெண்களுக்கு சராசரியாக ஆண்களைவிட டெலோமியர் நீளம் கூடுதல். எனவே தான் பெண்களுக்கு சராசரியாக ஆயுட்காலம் அதிகம்.

ஓடும் உயிரியல் கடிகாரம்

வெள்ளைவெளேர் என்று இருக்கும் காகிதம் நாள்பட மஞ்சள் நிறம் அடைவது போல காலப்போக்கில் நமது மரபணு தொடரில் மெத்திலேற்றம் எனும் வேதி வினைமாற்றம் ஏற்படும். எவ்வளவு மஞ்சள் நிறம் அடைந்துள்ளது என்பதை வைத்து காகிதத்தின் தொன்மையை மதிப்பீடு செய்வதுபோல் எவ்வளவு அளவு மெத்திலேற்றம் அடைந்துள்ளது என்பதை வைத்து அந்த உயிரி எவ்வளவு மூப்பு அடைந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். இதனை எபிஜெனெடிக் கடிகாரம் என்கிறார்கள்.

இத்தகைய உயிரியல் கடிகாரங்களை கொண்டு ஒருவரின் உயிரியல் வயதை அளவீடு செய்துள்ளனர். தலை தான் நரைத்து விட்டது, இதயம் இன்னும் இளமைதான் என்பதுபோல மொத்த உடலின் உயிரியல் வயதுக்கும் குறிப்பிட்ட உடலுறுப்பின் வயதுக்கும் வேறுபாடு உள்ளது என ஹாமில்டன் சே-ஹ்வீ ஓ, டோனி வைஸ்-கோரே முதலியோர் அடங்கிய ஆய்வுக்குழு சமீபத்தில் இனம் கண்டுள்ளனர்.

மூளை, இதயம், நோயெதிர்ப்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம் போன்ற பதினோரு உடலுறுப்புகளைக் கூர்ந்து ஆய்வு செய்தனர். ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட சில புரதங்களை உற்பத்தி செய்யும். சுமார் 850 புரதங்கள் உயிரி குறிப்பானாக விளங்குகிறது என கண்டார்கள். ரத்தத்தில் இந்த புரதங்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கொண்டு வெவ்வேறு உடலுறுப்பின் உயிரில் வயதை மதிப்பீடு செய்யலாம்.

சுமார் 5,500 நபர்களில் இந்த ஆய்வை செய்து பார்த்தபோது நாட்காட்டிபடி ஒருவருக்கு வெறும் ஐம்பது வயது; ஆனால் அவரது இதயத்துக்கு மட்டும் அறுபத்து ஐந்து வயது. வேறொருவருக்கு நாட்காட்டி வயதோ அறுபது; ஆனால் சிறுநீரக வயது வெறும் ஐம்பது. இன்னொருவருக்கு கணைய வயது ஐம்பத்து ஐந்து ஆனால் மூளையின் வயது அறுபத்தி ஐந்து.

இயல்பான இதய உயிரியல் வயது கொண்டவர்களை விட கூடுதல் இதய மூப்பு அடைந்தவர்களுக்கு இதய அடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருமடங்காக உள்ளது. கூடுதல் வேகத்தில் மூளை முதுமை அடைபவர்களுக்கு அல்சைமர் நோய் வாய்ப்பு பெருகுகிறது. சிறுநீரகம் மூப்பு அடையும் விகிதம் கூடினால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இலவச இணைப்பாக தொற்றிக்கொள்கிறது எனக் கண்டனர்.

முதுமை அடைவதை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், சீக்காளியாக முதுமை பருவத்தை கடக்க வேண்டும் என்பது தலையெழுத்து அல்ல. ஒவ்வொரு உறுப்பின் வயது மூப்பு அளவிடுவதன் மூலம் அந்த நபருக்கு என்ன நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். அவ்வாறு முன்கூட்டியே வரும் முன் காப்பு செய்தால் சீராக முதுமை அடையலாம்.

காலா, என்றன் காலருகே வாடா, அறிவியல் துணையோடு சற்றே உனை மிதிக்கிறேன்! என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் | தொடர்புக்கு: tvv123@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in