

குழந்தை மைய வகுப்பறை (Child Centered Classroom), குழந்தை நேய ஆசிரியர் (Child Friendly Teacher) போன்ற தொடர்களைப் பலமுறை கேட்டிருக்கிறோம். அதை பற்றி விளக்கும் பல கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால், ஒரு வகுப்பைக் கவனித்து அது குழந்தை மைய வகுப்பாக இருக்கிறதா என்று கேட்டால் பதில் சொல்வது அவ்வளவு எளிதல்ல. அதேபோன்று ஒரு செயல்பாட்டைக் கூறி இது உண்மையில் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று அலச சொன்னால் நமக்குத் தெரிவதில்லை. அதற்கு உதவும் தெளிவான மதிப்பீட்டுக் குறிப்புகள் இல்லை.
வகுப்பறையில் குழந்தை மைய அணுகுமுறை எப்படி செயல்வடிவம் பெறுகிறது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
குழந்தைகளின் செயல்பாடாக மாறியபோது...
சொல் கோபுரம் என்பது மிகவும் பழமையான செயல்பாடுகளுள் ஒன்று. கோபுரத்தின் உச்சியில் ஓரெழுத்து, அடுத்து இரண்டு எழுத்து, அதற்கு அடுத்து மூன்றெழுத்து என வருவது சொல் கோபுரம். செடியில் பூப்பது, பார்க்க உதவும் உறுப்பு... என்று ஒவ்வொரு கேள்வி கேட்டிருப்பார்கள். அந்தக் கேள்விக்கான பதிலை கோபுர வடிவில் தரப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எழுதுவதுதான் சொற்கோபுர செயல்பாடு.
புத்தகத்தில் தந்துள்ள வினாக்களுக்கு ஆசிரியர் விடை கூற குழந்தைகள் கட்டங்களில் எழுவது என்பது முழுக்க முழுக்க ஆசிரியர் மையச் செயல்பாடு. அதே நேரத்தில் சொல் கோபுரம் என்ற செயல்பாட்டை அறிமுகப்படுத்திவிட்டு இதுபோல் புதிதாக ஒரு சொற்கோபுரத்தை உருவாக்க முடியுமா என்று கேட்பது குழந்தை மைய அணுகுமுறை.
இப்படி புதிதாக சொல் கோபுரம்உருவாக்க குழந்தைகள் தலைப்படும்போது அதில் அவர்களுடைய குறும்புத்தனமும் இணைகிறது. அந்தக் குறும்புத்தனம் என்பது புதுப்புது சொல் கோபுரம் உருவாவதற்கு காரணமாகிறது. வா, வால், வாசல், வாகனம்... என எல்லாச் சொல்லின் முதல் எழுத்தும் ஒன்று போல் இருக்கும் சொல் கோபுரம். கை, வாகை, வாடகை... சொற்களின் இறுதி எழுத்து ஒன்று போலிருக்கும் சொல் கோபுரம். பூ, ரோஜா, முல்லை... எனப் பூக்களின் பெயர்களால் மட்டும் உருவான சொல் கோபுரம். கை, வாய், மூக்கு... என உடல் உறுப்புகளை மட்டும் உட்படுத்திய சொல் கோபுரம். பன்னிரண்டு எழுத்துகள் வரை உட்படும் மிகப்பெரிய சொல் கோபுரம் என அசத்திவிட்டார்கள் குழந்தைகள்.
வெறுமனே ஒரு செயல்பாட்டை அறிமுகப்படுத்திவிட்டு உங்களால் புதிய சொல் கோபுரம் உருவாக்க முடியுமா என்று உங்கள் மாணவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அப்புறம் பாருங்கள்,அவர்கள் எப்படி துடிப்போடு எம்பிக்குதித்து புதிய புதிய சொற்கோப்புரங்களை கட்டியெழுப்புகிறார்கள் என்று.
குழந்தைகளால் புதியனவற்றைப் படைக்க முடியும். அவர்களுக்கு ஒருசெயல்பாட்டை, ஓர் உத்தியை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதுமானது. குறைந்த அளவு உதவியே போதுமானது. குழந்தைகள் தம் படைப்புகளை வாசிக்க வாய்ப்புக் கொடுத்து பாராட்டினால் மேலும் உற்சாகத்தோடு செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. | தொடர்புக்கு: rajendran@qrius.in