

புகழ்பெற்ற வீணை இசைக் கலைஞரும், தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர், இயக்குநர், பாடகர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவருமான எஸ்.பாலசந்தர் (S.Balachander) பிறந்த தினம் இன்று (ஜனவரி 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# சென்னையில் பிறந்தார் (1927). இசையிலும் கலைகளிலும் நாட்டம் கொண்டிருந்த இவரது தந்தை மயிலாப்பூரில் உள்ள தன் வீட்டிலேயே இசை நிகழ்ச்சிகளுக்கான ஒரு பெரிய கூடத்தை ஒதுக்கியிருந்தார். இங்கு அரியக்குடி ராமானுஜம், மதுரை மணி, முத்தையா பாகவதர், பாபநாசம் சிவன் உள்ளிட்ட ஜாம்பவான்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு.
# இசையும், சங்கீதமும் மற்ற கலைகளும் கொண்ட பின்னணியில் வளர்ந்த இவரும் தனது ஐந்தாவது வயதிலிருந்தே கர்நாடக இசையில் நாட்டம் கொண்டார். தானாகவே கஞ்சிரா வாசிக்கக் கற்றார். விரைவில் சபாக்களிலும் கோயில்களிலும் நடைபெறும் கச்சேரிகளில் பக்கவாத்தியம் வாசித்தார்.
# 10-வது வயதில் திரையுலகில் கால் பதித்தார். 1933-ம் ஆண்டு வெளியான ‘சீதா கல்யாணம்’ படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்தார். தொடர்ந்து ‘ஆராய்ச்சி மணி’, ‘காமதேனு’, ‘ரிஷ்யஸ்ருங்கர்’, ‘நாரதன்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வீணை, தபலா, மிருதங்கம் உள்ளிட்ட பல இசைக்கருவிகளை தானாகவே இசைக்கக் கற்றுக் கொண்டார்.
# 12-வது வயதிலேயே சிதார் கருவியில் தனிக் கச்சேரி நடத்துமளவுக்கு வல்லமை பெற்றார். வீணை இசையில் விசேஷ பயிற்சி பெறத் தொடங்கினார். இரண்டே ஆண்டுகளில் இதிலும் குருவின் துணையின்றி கச்சேரி நடத்துமளவுக்குத் திறன் பெற்றார்.
# கர்நாடக இசையைத் தவிர இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் இசைக் கச்சேரிகள் நடத்தினார். இசைத் தட்டுகளை வெளியிட்டார். இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது.
# ‘மேஜிக் ம்யூசிக் ஆஃப் இந்தியா’, ‘சவுன்ட்ஸ் ஆஃப் வீணா’, ‘இம்மார்ட்டல் சவுண்ட் ஆஃப் வீணா’ உள்ளிட்ட பல இசைத் தட்டுகளை வெளியிட்டுள்ளார். இவை உலகம் முழுவதும் விற்பனையாகின. 1948-ல் ‘இது நிஜமா’ என்ற படத்தில் ஹீரோ வேடம் கிடைத்தது. முதல் படமே பேய்ப்படம்தான்.
# தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தன. ‘தேவகி’, ‘ராஜாம்பாள்’, ‘ராணி’, ‘இன்ஸ்பெக்டர்’, ‘பெண்’, ‘கோடீஸ்வரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 1960களில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். தான் இயக்கிய படங்களுக்குத் தாமே இசையமைத்தார்.
# ‘இது நிஜமா’, ‘என் கணவர்’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘பூலோக ரம்பை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி, இசையமைத்து, நடித்தார். இவர் இயக்கிய ‘அந்த நாள்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். பிறகு ‘அமரன்’, ‘அவனா இவன்’, ‘பொம்மை’, ‘நடு இரவில்’ உள்ளிட்ட திகில் படங்களையும் இயக்கினார்.
# திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணிப் பாடகர், இயக்கம் என அத்தனைக் களங்களிலும் முத்திரை பதித்தார். பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.
# தமிழ்த் திரையுலகில் அரை நூற்றாண்டு காலம் வெற்றிகரமாக இயங்கிவந்தவர். அசாதாரணமான பன்முகத் திறன் படைத்த இசைக் கலைஞர், இயக்குநர், இசை இயக்குநர், பாடகர், நடிகருமான இந்தச் சாதனையாளர், 1990-ம் ஆண்டு 63-ம் வயதில் மறைந்தார்.