

சிறுவயதில் தனக்குக் கதைச் சொல்லித் தூங்க வைத்த செவிலியரிடம் தொடங்கி, ஜெர்மனியின் மூலை முடுக்குகளில் உள்ள ஒவ்வொரு வீதிக்கும் சென்று கதைகளைக் கேட்டு அதை எழுத்தில் பதிவு செய்தனர் கிரிம் சகோதரர்கள்.
மீனவர், ராணுவ வீரர், விவசாயி என்றுகதைச் சொன்னவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போனது. கதைச் சொல்லிகளும் அதன் மகோன்னதம் புரியாமல், கூலி எதிர்பார்த்தார்கள். சிண்ட்ரெல்லா கதையை சார்ல்ஸ் பெரௌல்ட் தன் பாணியில் எழுதியிருந்தாலும், அதன் மூல வடிவம் இவர்களால் பதிவுசெய்யப்பட்டது.
சுமார் 6 ஆண்டுகால கடும் உழைப்பினால் 86 கதைகளைத் தொகுத்து ‘சில்ரென்ஸ் அண்ட் ஹவுஸ்ஹோல்ட் டேல்ஸ்’ என்ற பெயரில் புத்தகமாய் வெளியிட்டனர். சில மாதங்களில் 900 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. குழந்தைகள் அக்கதைகளை மனனம் செய்தனர். ஜெர்மன் மக்கள் தம் பழமையை எண்ணி பெருமிதம் கொண்டனர். புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், மேலும் கதைகள் சேகரிக்கச் சொல்லி பதிப்பாளர் ஒருபுறம் தொல்லை கொடுத்தார்.
இழந்த மரபை மீட்டெடுத்தல்: ஜேக்கப் கிரிம் நூலகத்தில் சில நாட்கள்வேலை செய்தார். ஃபிரெஞ்சு ஆட்சியின்போது ஜெர்மானிய வரலாற்றைச் சொல்லும் நூல்களும் ஓவியங்களும் பாரிஸ் நகரத்திற்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்டதால், அவர் வேலை பறிபோனது.
நெப்போலியன் இந்நாட்டைவிட்டு வெளியேறியதும்,ஜேக்கப்பிற்கு ஜெர்மானிய அலுவலரின் செயலர் பதவி கிடைத்தது. எனவே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொள்ளையடித்த பொருட்களை மீண்டும் ஜெர்மனிக்குக் கொண்டு வந்தார். தேவதைக் கதைகளின் இரண்டாம் தொகுதியை அடிக்குறிப்புகளுடன் வெளியிட்டார். 1823இல் அக்கதைகள் ‘புகழ்பெற்ற ஜெர்மன் கதைகள்’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஓவியங்களுடன் உலகெங்கும் பரவியது.
1829இல் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சகோதரர்கள் இருவரும் பேராசிரியராக பணியில் அமர்ந்தனர். ஆங்கிலத்தில் ‘மதர்’ எனும் சொல், ஜெர்மனியில் ‘மட்டர்’ என்றிருப்பதைச் சுட்டிக்காட்டி ஒலியியல் மாற்றத்தால் கலாச்சார பரவலை அடையாளம் காணலாம் என்று சொன்னார் ஜேக்கப்.
வரலாற்றெழுதியலில் ‘கிரிம்ஸ் விதி’என்றொரு புதிய கோட்பாடு தோன்றியது. ஜெர்மன் மன்னருக்கு அடிபணிய மறுத்ததால் ஜேக்கப்பை நாடு கடத்த தீர்மானித்தனர். அவர் மாணவர்கள் வெளிகாட்டிய வலுவான எதிர்ப்பினால் அத்திட்டம் உடைத்தெறியப்பட, தான் சேகரித்த கதைகளில் வரும் கதாநாயகன் போல மிளிர்ந்தார்.
1835ஆம் ஆண்டை நிலையாக வைத்துக்கொண்டு கிரிம் காலத்திற்கு முன்பு, கிரிம் காலத்திற்கு பின்பு எனச் சொல்லும் அளவுக்கு கிரிம் சகோதரர்கள் ஜெர்மன் வரலாற்றுக்குத் துணை செய்தார்கள். அந்நாட்டினர் வெகு காலத்திற்கு முன்பே நாகரிகம் அடைந்த பூர்வ மக்கள் என்பதை, இவர்கள் சேகரித்த கதைகள் உறுதிபடுத்தின.
ஜெர்மன் அகராதி, ஜெர்மன்இலக்கணம் போன்று தொல்லை தரும் வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டும், அயராது உழைத்து நாட்டுப்புறவியல் எனும் துறையில் வழக்காற்றியலைப் பதிவு செய்வது எத்தனை முக்கியகரமான பணி என்றும் நிரூபித்தனர்.
பைபிளுக்கு அடுத்ததாக ஜெர்மானியர்கள் அதிகளவில் வாசித்த புத்தகம் ‘சில்ரென்ஸ் அண்ட்ஹவுஸ்ஹோல்ட் டேல்ஸ்.’ உலகெங்கும் 160 மொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல நாட்டின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளனர். நாட்டார் கதைகளின் முக்கியத்துவம் முதன்முதலில் வெள்ளிடை மலையாகத் தெரிந்தது.
தமிழக நாட்டுப்புறக் கதைகள்: தமிழ்நாட்டில் கி.ராஜநாராயணன் எனும்எழுத்தாளர் கரிசல் வட்டார மக்களின் கதைகளைத் தழுவி பல நூல்கள் இயற்றியுள்ளார். ஆனால் ஆறு. இராமநாதன் போன்ற கல்விப்புல ஆய்வாளர்கள், தமிழகமெங்கும் உள்ள நாட்டார் கதைகளை உண்மைத் தன்மையோடு பதிப்பித்துள்ளார்கள். மண்ணின் கதைகளில்தான் பூர்வ வரலாற்றின் அடையாளங்கள் புதைந்திருக்கின்றன. தேவதைக் கதை கேட்கும்போதெல்லாம் இச்சகோதரர்களின் உழைப்பு நம் கண்முன்வர வேண்டும்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com