நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 57: குண்டூசியால் மலையை தூக்க முடியுமா?

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 57: குண்டூசியால் மலையை தூக்க முடியுமா?
Updated on
2 min read

பொதுவாக வருமானத்தை இரண்டு வகையாக பிரிக்க‌லாம். ஒன்று, செயல் சார்ந்த வருமானம் (Active Income). மற்றொன்று, செயல்சாராத‌ வருமானம் (Passive Income).

பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் ஒருவருக்கு இந்த இரண்டு வகை வருமானங்களும் அவசியம். மலைபோல‌ செலவுகள் குவிந்திருக்கும் சூழலில் ஒரு வழி வருமானம் மட்டும் வைத்திருப்பது, குண்டூசியால் மலையை தூக்குவதை போன்றது.

அதிலும் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏற்படும் அசம்பாவிதம், எதிர்பாராத செலவுகள் நிகழ்ந்துவிட்டால் அந்த குடும்பத்தின் பாடு பெரும் திண்டாட்டம்தான். ஆகையால் ஒருவர் இரு வழி மட்டுமல்லாமல், பல வழிகளில் வருமானம் வருவதற்கான பாதைகளை உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.

செயல் சார்ந்த வருமானம்: நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு வேலை அல்லது தொழில் செய்து பணம் சம்பாதிப்பதை செயல் சார்ந்த வருமானம் (Active Income) என்கிறோம். இந்த வகையில் பணம் சம்பாதிக்க, நாள்தோறும் நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்ய வேண்டும். உடல், உள்ள‌ நலத்தை பேண வேண்டும். பணியில் எப்போதும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

இந்த வகை வருமானத்துக்கு பெரிதாக முதலீடு தேவை இல்லை. நிறுவனங்களில் பணியாற்றினால் முதலீடு முற்றிலுமாக தேவை இல்லை. அதேநேரம் வருமானம் மாதந்தோறும் நிலையானதாக இருக்கும். நிறுவனங்களே பணியாளர்களுக்கு விடுமுறைகளை அளித்துவிடுவதால், விடுப்பு எடுத்தால் கூட வருமானம் குறையாது.

சுய தொழிலாக இருந்தால் குறைந்த அளவில் முதலீடு தேவைப்படும். விடுமுறை எடுப்பது சிரமமானது. அதேவேளையில் இதற்கு குறைவான‌ ரிஸ்க் என்பதால், வருமானமும் குறைவாகவே வரும்.

செயல் சார்ந்த வருமானத்தைப் பொறுத்தவரை 20 முதல் 58 வயதுவரை அதிகமாக வரும். அதன்பின்னர் முதுமை காலத்தில் வேலையை இழந்துவிடுவதால் 60 வயதுக்கு பின்னர் வருமானம் முற்றிலுமாக நின்றுவிடும். மருத்துவர், வழக்கறிஞர், ஆடிட்டர், பத்திரிகையாளர் போன்ற சில அரிதான தொழில்சார் பணிகளுக்கு ஓய்வு இல்லை. இறுதிவரை சிறிதளவேனும் வருமானம் வரும்.

செயல்சாராத‌ வருமானம்: நாம் வேலைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வந்துக்கொண்டே இருக்கும் வருமானத்தை செயல் சாராத வருமானம் (Passive Income) என்கிறோம். நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும் நமது பணம் நமக்காக வேலை செய்துக்கொண்டே இருக்கும். அந்த வகையிலான வருமான வழிகளை உருவாக்க வேண்டும்.

செயல் சாராத வருமானத்தை ஒருமுறை ஏற்படுத்திவிட்டால் ஆயுள் முழுக்க சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டே இருக்கும். புத்திசாலித்தனமான முதலீடாக இருந்தால் தலைமுறைகளை தாண்டியும் பணம் வந்துகொண்டே இருக்கும். உதாரணமாக வங்கியில் நிரந்தர பண வைப்பு, பங்கு சந்தை முதலீடு, பரஸ்பர நிதி, வீட்டு வாடகை, ராயல்டி ஆகியவற்றில் முதலீடு செய்வதை குறிப்பிடலாம்.

ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், அது நமக்காக வேலை செய்து வருமானம் சம்பாதித்துக் கொண்டிருக்கும். இந்த முதலீட்டுக்கு விடுமுறை, ஓய்வு, உறக்கம் எதுவும் கிடையாது.

இந்த வகை வருமானத்தை பெற நிச்சயம் முதலீடு தேவைப்படும். இந்த முதலீட்டைப் பெறுவதற்கு தொடக்க‌த்தில் செயல்சார்ந்த வருமானம் முக்கியமாகும். அதேவேளையில் இளமையில் குறைவாகவும், முதுமையில் 100 சதவீதம் அதிகமாகவும் வருமானத்தை ஈட்டி தரும். இதனை கண்காணிக்க குறைந்த அளவில் நேரத்தை செலவிட்டால் போதுமானது. அதேபோல பொருளாதார வீழ்ச்சி, பண வீக்கம் போன்ற சிக்கல்களில் இருந்தும் காப்பாற்றும்.

ஒருவேளை நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு, செயல் சார்ந்த வருமானம் நின்றுவிட்டாலும், செயல் சாராத வருமானம் கைக்கொடுக்கும்.

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு :vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in