

தனிநபர் நிதி மேலாண்மையில் மிக முக்கியமானது வருமானம். செலவு, சிக்கனம், சேமிப்பு, முதலீடு, காப்பீடு, கடன் ஆகிய அனைத்திற்கும் அடிப்படை அஸ்திவாரமே வருமானம் தான். அதை வைத்துதான் நம்முடைய நிதி கோட்டையை உறுதியாக கட்ட முடியும்.
வருமானம் வரும் வழிகளை கண்டறிந்து அந்த வழியில் பயணிக்க தவறினால், நமது நிதி இலக்கை அடைய முடியாது. குறிப்பாக இளம்வயதிலே வருமானம் வரும் வழிகளை பெருக்கிக்கொண்டால், நிதி இலக்கை எளிதாக எட்டிவிடலாம். உழைத்தால் மட்டுமே வருமானம்பொதுவாக வருமானம் 2 வழியாக வருகிறது. முதலாவது, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அலுவலகத்தில் வேலை செய்தால் சம்பளமாக வருமானம் கிடைக்கிறது. இரண்டாவது, சொந்தமாக தொழில் தொடங்கி அதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
அலுவலக வேலையில் நம்முடைய உழைப்பை ஒரு நிறுவனத்திடம் விற்று பணம் சம்பாதிக்கிறோம். சுய தொழிலில் நமது பொருட்களை விற்று பணம் ஈட்டுகிறோம். இந்த இரண்டிலும் அடிப்படையாக நாம் செலவழிக்கும் நேரத்தை அடிப்படையாக வைத்து வருமானம் வழங்கப்படுகிறது.இந்த 2 வருமானமும் நம்முடைய கடைசி காலம் வரை வந்துகொண்டே இருக்கும் என உறுதியாக கூற முடியாது.
20 வயதில் கடுமையாக உழைக்கும் அளவுக்கு 60 வயதில் உழைக்க முடியாது. அப்போது வருமானம் குறைந்துவிடும். ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலையால், நாம் வேலைக்கு செல்லா விட்டாலோ, தொழில் செய்யாமல் விட்டாலோ வருமானம் முற்றிலுமாக நின்றுவிடவும் வாய்ப்பு இருக்கிறது.
வருமானத்தை அதிகரிக்க வழி: இந்தியாவில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் அலுவலகத்துக்கு செல்வதன் மூலமாகவே வருமானம் ஈட்டுகின்றனர். வேலையின்மை அதிகரித்திருக்கும் இன்றைய பொருளாதார சூழலில் அலுவலக வருமானத்தை அதிகரிக்க வழி இருக்கிறதா? அலுவலகத்தில் நமக்கு நியாயமான வருமானம் வழங்கப்படுகிறதா? வருகிற வருமானம் நமது தகுதிக்கும், திறமைக்கும், உழைப்புக்கும், நேரத்துக்கும் ஏற்றவாறு இருக்கிறதா? என பலரும் யோசிக்கின்றனர்.
நெருக்கடியான பொருளாதார சூழலிலும் கூடுதலாக வருமானம் பெற சில வழிகள் இருக்கின்றன. குறிப்பாக நிறுவனங்கள் பணியாளர்களின் ஆற்றலை ஆண்டுக்கொரு முறை மதிப்பீடு செய்து அதற்கேற்ற ஊதிய உயர்வை வழங்குகின்றன.
அதற்கு முன்னதாக பணியாளர்கள் தாங்களாகவே தங்களின் ஆற்றலை காலாண்டு, அரையாண்டுவாரியாக சுய மதிப்பீடு செய்ய வேண்டும். நிறுவனத்தின் மனித வளத்துறை உங்களின் குறையை சுட்டிக்காட்டுவதற்கு முன்பாக நீங்களே உங்களது குறையை சரி செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மனித வள நிபுணர்கள். ஒருவேளை உங்களின் உழைப்புக்கு, செலவிடும் நேரத்துக்கு ஏற்ற வருமானம் கிடைக்கவில்லை என்றால் துவண்டுவிடக்கூடாது. எவ்வளவு வேலை செய்தாலும் இவ்வளவுதான் என சலித்துக்கொள்ளக்கூடாது.
இதனால் இனிமேல் கடுமையாக உழைக்க மாட்டேன் என சபதம் எடுத்துக்கொண்டு, கடமைக்கு வேலை செய்பவராக மாறிவிடக்கூடாது. ஏனென்றால் அந்த குணாம்சம் உங்களது வருமானம் ஈட்டும் சக்தியை நிரந்தரமாக குறைத்துவிடும்.மாறாக, முன்பைக் காட்டிலும் 10 மடங்கு வேலையில் தீவிரத்தை காட்ட வேண்டும்.
உழைப்பு, ஈடுபாடு, ஆர்வம் எல்லாவற்றையும் 10 மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும். உங்கள் திறன்களை அதிகரித்து, நிபுணத்துவத்தை மேம்படுத்த வேண்டும். இதற்காக கூடுதலாக படித்து சான்றிதழ்களை பெறுவது, சிறப்பு பயிற்சி எடுத்துக்கொள்வது போன்றவற்றிலும் கவனம் செலுத்தலாம்.
இதன் பின்னர் நீங்கள் செய்யும் பணிகளின் முக்கியத்துவம், உங்களது சாதனைகள், அதன் மூலம் நிறுவனம் அடைந்த பலன்கள் ஆகியவற்றை மாதவாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு உங்களது நிறுவனத்தின் ஊதிய உயர்வு நேரத்தில், அந்த பட்டியலை உங்களது மேலாளரிடம் வழங்கி, கூடுதலான ஊதியத்தை பெறலாம். இவ்வாறு செய்தால் உங்களது உழைப்புக்கும் நேர செலவினங்களுக்கும் ஏற்றவகையில் கூடுதலான வருமானத்தை பெற முடியும் என நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு:vinoth.r@hindutamil.co.in