

இன்னொருவரிடம் வேலை செய்வதில் எனக்கு விருப்பமில்லை. நல்ல தொழிலாக செய்ய வேண்டும். நாலு பேருக்கு வேலை கொடுத்து பெரிய பிசினஸ்மேன் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? - மு.அழகப்பன், தேவகோட்டை.
நாலு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்கிற உங்களின் எண்ணம் உயர்வானது. வரவேற்கிறேன். இதற்கு முதலில் படிப்பை முடித்துவிட்டு உங்களுக்கு என்ன தொழில் செய்ய விருப்பம் என கண்டறிந்து அதற்கான அனைத்து தகவல்களையும் சேகரித்து விடுங்கள். பின்னர் அத்தொழில் சார்ந்த நிறுவனங்களில் சிறிது காலம் பணிபுரிந்து தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். பின்னர் அனுபவத்தைக் கொண்டு வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
அதற்கு முன்னர் தொழில்சார் படிப்புகளில் குறைந்தபட்சம் கல்வித் தகுதியிருப்பின் நன்று. அல்லது மாவட்ட தொழில் மையம் அல்லது மத்திய அரசின் சிறு மற்றும் குறு தொழில் மையங்களில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஏராளமான திட்ட அறிக்கைகள் உள்ளன. அதனை நன்குஆராய்ந்து படிக்கவும். அவற்றில் உங்களுக்கு உகந்ததைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (Entrepreneurship Development Institute) அல்லது அதன் மாவட்ட மையங்களை அணுகுங்கள். அங்கு புதிய தொழில் தொடங்குவோருக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அவற்றில் உங்களுக்கு உகந்த பயிற்சியை பெற்றால் நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும். பின்னர் வங்கிக் கடன் பெற்று சிறு அல்லது குறு தொழில் தொடங்க முயலவும். தொடங்கும் தொழிலில் சிறிதேனும் அனுபவ அறிவு இருப்பின் நலமே.
மத்திய, மாநில அரசுகள் இளைஞர்கள், தொழில்முனைவோர்க்கென பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திவெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றனர். எனவே இத்தகைய முன்னெடுப்புகளை சரிவர மேற்கொண்டு முதல் அடியினை வைக்க வாழ்த்துகள்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முன்னாள் இணை இயக்குநர்.