போவோமா ஊர்கோலம் - 26: இமயமலை எனும் பேரதிசயம்!

போவோமா ஊர்கோலம் - 26: இமயமலை எனும் பேரதிசயம்!
Updated on
2 min read

கார்கில் நகரில் லே நகரம் நோக்கி நம் பயணம் அதிகாலையிலேயே தொடங்கியது. ஆறுகள், மலைகள் என கண்ணுக்கெட்டிய தூரம்வரை நமக்கு தெரிந்ததெல்லாம் இமயமலையின் அதிசயம் தான்.

நீல நிறத்தில் தெளிவான வானம், கண்ணாடி போல நதி, அதன் நடுவே செல்லும் சாலை இதெல்லாம் எவ்வளவு எழுதினாலும் அந்த ஒற்றை அனுபவத்தை மொத்தமாக கடத்திட முடியாது. அத்தனை அற்புதங்களையும் அதிசயங்களையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது இமயமலை.

ஈர்த்த காந்த மலை: சிந்து நதியும் சன்ஸ்கார் நதியும் இணையும் சன்ஸ்கார் சங்கமம் நாம் பயணித்த வழியில் தான் இருந்தது. அது ஒரு குட்டி சுற்றுலாத்தலமாக மாறி 'ராஃப்டிங்' செய்யும் வசதி எல்லாம் அங்கிருந்தது. கொஞ்சம் தூரத்தில் அமைந்திருக்கிறது ‘மேக்னடிக் ஹில்' பகுதி. சுற்றி இருக்கும் காந்த மலையின் ஈர்ப்பால் சாலையிலேயே ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது, வாகனங்கள் அந்த மலைகளின் ஈர்ப்பால் தானாகவே நகர்கிறது.

இறக்கம் இருக்கும் அதனால் தான் வாகனம் நகர்கிறதென நினைத்தோம். அனால், அது மேடான பகுதி தான், அந்தஇடத்திலும் வாகனங்கள் தானாக நகர்வது ஆச்சரியமாக இருந்தது. நம் வண்டியும்அந்த காந்த ஈர்ப்பால் நகர்ந்தபோது அதிசயமாக இருந்தது. அந்த அதிசயத்துக்குப் பின் இருப்பது அறிவியலே.

லே நகரம் வந்து சேர மாலை ஆகிவிட்டது. யூனியன் பிரதேசமான லடாக்கின் தலைநகரான லே திபெத்- இந்தியாவின் வர்த்தகப்பாதையின் முக்கிய நகரம். மிகப்பழமையான அரண்மனைகள், நிறைய புத்த மடாலயங்கள் இங்குள்ளன. காஷ்மீரைவிட அதிக அளவு ராணுவத்தினரை இங்கு பார்க்க முடிந்தது.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ராணுவ அருங்காட்சியகமும் இங்கு இருக்கிறது. லே நகரை அடைவதற்கு சாலை மட்டுமே வழி கிடையாது. இங்கு விமான நிலையம் இருப்பதால், சீசன் சமயங்களில் பலர் குடும்பத்தோடு வந்து இமயமலையின் அழகை ரசித்து மகிழ்கிறார்கள்.

உச்சத்தில் உள்ள சாலை: லே வரை வருவதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால் லடாக்கில் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆகஸ்ட் 15-ம் தேதி காலை, கடல் மட்டத்தில் இருந்து 17,582 அடி உயரத்தில் இருக்கும் காக்சங்லா சென்றடைந்தோம்.

இந்தியாவில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் இதுவும் ஒன்று. இங்கு வந்து, அந்த பெயர் பலகையோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது எங்கள் வாழ்நாளுக்குமான பொக்கிஷம். அடுத்தடுத்த நாட்கள் இமயமலை எங்களுக்கு கொடுத்ததெல்லாம் பேரதிசயம்.

லடாக்கின் ஒரு பகுதி நூப்ரா. இதன்அருகே உள்ள டிஸ்கிட் பகுதியில் மிகப்பழமையான புத்த மடாலயம் இருக்கிறது. புத்த பிக்குகள் தங்கும் மிகப்பழமையான குடைவரைக் கட்டிடத்தையும் அதிலுள்ள 33 அடி உயர மைத்ரேய புத்தர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையையும் அண்ணாந்து பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

மலைகளால் ஆன பாலைவனம் லடாக். இந்த மலைகளுக்கு நடுவே ஒரு குட்டி பாலைவனப்பகுதி தான் ஹுண்டர். தார் பாலைவனத்தில் எப்படி மணல்கள் இருக்குமோ, அதைவிட மென்மையாக மணல் இங்குள்ளது. இதைவிட வியப்பாக இருந்தது அங்கிருந்த ஒட்டகங்கள். மற்ற பாலைவனங்களில் உயரமான ஒரு கூம்பு கொண்ட ஒட்டகங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கு குளிர் தாங்கும் அளவுக்கு அதிக ரோமம் கொண்ட, இரு கூம்பு ஒட்டகங்கள் கொஞ்சம் உயரம் குறைவாக இருந்தன.

குடும்பங்களை ஈர்க்க அதிக அளவில்நிறைய சாகச விளையாட்டுகள் அங்கிருந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஒட்டக சவாரி செய்தனர். நாம் அந்த மலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே அந்த ஒட்டகங்களை ரசித்துக்கொண்டு இருந்தோம். நாளை லடாக் எல்லையில் இருக்கும் பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டும்.

- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in