கற்றது தமிழ் - 26: இப்படியும் நண்பர்கள் இருப்பாங்களா!?

கற்றது தமிழ் - 26: இப்படியும் நண்பர்கள் இருப்பாங்களா!?
Updated on
2 min read

சுடர்: குழலி, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா...

குழலி: நட்புக்கு எடுத்துக்காட்டா அவங்களச் சொல்வாங்க. ஏன் திடீர்னு அவங்களப் பத்திக் கேட்குற.

சுடர்: என்னையும் கதிரையும் பெரிய கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்னு எங்க ஆசிரியர் கிண்டல் செஞ்சாங்க குழலி... அவங்க யாருன்னு கேட்டதுக்கு, நீங்களே போய்த் தேடிப் படிச்சிட்டு வந்து சொல்லுங்கன்னாங்க.

குழலி: ஓ... அவ்வளவு நல்லவங்களா நீங்க ரெண்டு பேரும்... அவங்க நட்பு எவ்வளவு உயர்வானது தெரியுமா...

சுடர்: சொல்லு குழலி.

குழலி: கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையாரோட அறிவையும் தமிழ் ஆளுமையையும் கேள்விப்பட்டு அவர் மேல அளவில்லாத அன்பும் மரியாதையும் வச்சிருந்தாராம். பிசிராந்தையாரும் சோழனோட நல்ல பண்புகளையும் அவனோட ஆட்சித் திறத்தையும் கேள்விப்பட்டு அவன் மேல அதே அளவுக்குஅன்பு வச்சிருந்தாராம்.

கோப்பெருஞ்சோழனோட மகன்கள் அரசாட்சி தனக்குத்தான் வேணுங்கிற போட்டியில தந்தைக்கு எதிராகவே செயல்பட ஆரம்பிச்சாங்களாம். இதைப் பார்த்த சோழன் கோவத்துல தன் பிள்ளைகளுக்கு எதிராப் போர் செய்ய நினைச்சாராம்.

ஆனா, அவனைச் சுத்தியிருந்த பெரியவங்க, பிள்ளைகளுக்கு எதிராத் தந்தை போர் செய்றது பெருமை தரக்கூடிய விஷயம் இல்லைன்னு சொன்னாங்களாம். தன் பிள்ளைகளோட தீய எண்ணங்கள நினைச்சி வருந்தி, வடக்கிருக்க முடிவு செய்துட்டாராம்.

சுடர்: வடக்கிருக்கிறதா...

குழலி: அந்தக் காலத்துல போர்ல தோற்ற மன்னர்கள், முதுகுல விழுப்புண் பட்ட வீரர்கள், அதைத் தங்களோட வீரத்துக்கு இழுக்குன்னு நினைச்சு வடக்கு திசை பார்த்துஉட்கார்ந்து உண்ணாநோன்பிருந்து உயிரைப்போக்கிப்பாங்களாம்.

அதைத்தான் வடக்கிருத்தல்னு சொல்வாங்க. தன் புகழுக்கோ, மானத்துக்கோ களங்கம் ஏற்படுறதைப் பொறுத்துக்காம தாமாகவே உயிரை விடத் துணிஞ்சிருக்காங்க அந்தக் காலத்துல. அப்படி வடக்கிருந்து உயிர் துறந்தா சொர்க்கத்துக்குப் போகலாம்ங்கிறது நம்பிக்கையாம்.

சுடர்: ஆனா, சோழன் தோற்கலையே... ஏன் வடக்கிருந்தாரு...

குழலி: தன் பிள்ளைகளே தனக்கெதிரா செயல்பட்டத நினைக்கிறப்போ, தன்னைத் தானே நொந்து, ஏதும் செய்ய முடியாத கையறு நிலையில எடுத்த முடிவா இருக்கலாம்.

சுடர்: பிசிராந்தையார்...

குழலி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்க இடத்தைத் தீர்மானிச்சாரு. அவரோடு நெருக்கமாயிருந்த சில புலவர்களும் நலம் விரும்பிகளும் அவர்கூடவே இருக்க, சோழனோ தனக்குப் பக்கத்துலேயே பிசிராந்தையார் அமர ஒரு இருக்கையைப் போடுங்கன்னு சொன்னாராம்.

என் நண்பர் பிசிராந்தையார் நிச்சயமா என்னப் பார்க்க வருவார், அவரும் என் அருகே வந்து அமர்வார்னு சொல்ல, அத்தனை பேருக்கும் திகைப்பு. அரசே ரொம்ப நாள் பார்த்துப் பழகினவங்களே கூட நண்பனுக்காக இப்படி ஒரு முடிவ எடுக்க மாட்டாங்க. பிசிராந்தையார் நேரில் பார்த்து உங்ககிட்ட ரொம்ப நாள் பழகினவர்கூட இல்லையேன்னு சொல்றாங்க.

சுடர்: பிசிராந்தையார் வந்தாரா இல்லையா...

குழலி: வந்தாரு. தன் நண்பனான சோழனுக்கு அருகிலே அவரும் அமர்ந்து வடக்கிருந்தாரு.

சுடர்: என்ன குழலி... இப்படியும் நண்பர்கள் இருப்பாங்களா... ஆனா, அவங்க ரெண்டு பேரும் நேர்ல பார்த்ததுகூட இல்லைன்னு சொல்றியே...

குழலி: ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்/நட்பாங் கிழமை தரும்'னு திருவள்ளுவர் சொன்னத இங்க நினைச்சிப் பாரு.

சுடர்: சரிதான். பார்த்துக்கறதோ, நிறைய நாள் பக்கத்திலிருந்து பழகறதோ மட்டும் நட்புக்கான நெருக்கத்தைக் கொடுக்காது. ஒத்த சிந்தனையும் ஒரே மாதிரியான உணர்வுகளும் இருந்தாலே போதும். அப்படித்தான.... இவங்க நட்பை யார் பாடியிருக்காங்க.

குழலி: கோப்பெருஞ்சோழனே பாடிய பாட்டு. புறநானூற்றுல 216 வது பாட்டு. பாடாண்திணையில, இயன்மொழித் துறையில வருது. இன்னும் சில பாடல்கள்ல கூட இவங்க ரெண்டு பேரைப் பற்றின குறிப்புகள் இருக்கு.

சுடர்: சரி குழலி. எனக்குஇரோம் சர்மிளா தான் நினைவுக்கு வர்றாங்க. நேரமாச்சு. நாளை பேசுவோம்

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in