பூ பூக்கும் ஓசை - 24: பசுமை தொழில்நுட்பம் தீர்வுக்கான தொடக்கமே!
என்னதான் சூரிய ஆற்றல், காற்றாலை, நீர்மின் ஆற்றல், அணுமின் ஆற்றல் என கார்பன் உமிழ்வைக் குறைக்கக்கூடிய மாற்று முறைகள் இருந்தாலும் அவற்றால் கிடைக்கும் பலன் புதைபடிம எரிபொருளுக்கு இணையாக இல்லை. அதனால்தான் உலகம் இன்னமும் புதைபடிம எரிபொருளையே நாடி இருக்க வேண்டியதாக இருக்கிறது.
மேலும், புதைபடிம எரிபொருளால் விளையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பார்த்த உலக நாடுகள் பல்வேறு திட்டங்கள், மானியங்களை வழங்குவது மூலம் அந்த வழிமுறையை ஊக்குவிக்கின்றன. மேலும் அதற்காக செலவிடப்படும் உற்பத்தி விலையையும் கட்டுக்குள் வைத்துள்ளன.
இதனால்தான் அவற்றுடன் ஒப்பிடும்போது கரிம நீக்கத் தொழில்நுட்பங்கள் அதிகச் செலவுகளைக் கோருவதாக இருக்கின்றன. இதற்காக நாம் மாற்று முறைகளை முயன்றே பார்க்கக்கூடாது என்பதுஇல்லை. கரிம நீக்கத் தொழில்நுட்பங்களை அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அவற்றைப் பற்றிய ஆய்வுகளையும் தயாரிப்புகளையும் நாம் அதிகரிக்க வேண்டியதாக இருக்கிறது.
அவற்றின் உள்கட்டமைப்புகளையே மாற்ற வேண்டியதாக இருக்கிறது. இதற்கான முயற்சிகள் குறைந்த அளவில்தான் நடைபெறுகின்றன. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல கரியஅமில வாயுவைப் பிடித்து வைப்பதற்கான ஆய்வுகளையும் உலக அளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையில் பசுமை தொழில்நுட்பமான கரிம நீக்கத் தொழில்நுட்பத்தால் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் காலநிலை பிரச்சனையை சரி செய்துவிடப்போவதில்லை என்றஎதிர்ப்புக் குரலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தத் தொழில்நுட்பங்களைக் காலநிலை மாற்றத்துக்கான முழு முதல் தீர்வாக இல்லாமல் ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.
இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரிம நீக்கத் தொழில்நுட்பங்களால் மின்சாரத்தைத் உற்பத்தி செய்வதில் மட்டும் நமக்குச் சவால்கள் இல்லை. அவற்றைத் திறம்படச் சேமித்து வைப்பதிலும், விநியோகிப்பதிலும் கூட பிரச்சினைகள் இருக்கின்றன.
மின்சாரத்தைச் சேகரித்து வைத்து எப்போது மின்தேவை அதிகரிக்கிறதோ அப்போது எடுத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களும் நம்மிடம் இல்லை. அதற்கான முன்னெடுப்புகள் எந்த அளவில் இருக்கிறது? அது ஏன் நாம் நினைப்பதைவிடக் கடினமான ஒன்றாக இருக்கிறது என்பது பற்றி அடுத்து பார்க்கலாம்.
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com
