

பெண்கள் மயக்குவதில் வல்லவர்கள் என்று பெண்களைப் பொதுவாக பழி சொல்பவர்கள் பலர் நம்மிடையே உண்டு. ஆனால், உண்மையில் மருத்துவத்தில் ஒரு பெண் மயக்க வருவதற்கு பல நூறு வருடங்கள் பிடித்தது என்பதுடன், அதன் பின்னே ஒரு பெரிய வரலாறே இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?
மருத்துவம் அறிவியலாக மாறுவதற்கு முன், மனிதனின் ஆரம்பகால சிகிச்சைகள் இயற்கையுடன் சேர்ந்து இலை, கொடி, தளைகளுடன் தான் இருந்தது. ஆனால், அந்த சமயத்திலேயே மனிதன் அறுவை சிகிச்சைகளையும் அதற்கென சதைகளை அறுத்து தையல் போடவும் கற்றுக் கொண்டான் என்றாலும், அப்போது அந்த சிகிச்சைகளின்போது வலி தெரியாமல் இருக்க வழங்கப்பட்ட மயக்க மருந்துகளும் இயற்கை சார்ந்ததாகத் தான் இருந்துள்ளது.
இயற்கை மயக்கமா... கலக்கமா... ஆம்...அப்போது அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்துகளுக்குப் பதிலாக, போதையூட்டும் அல்லது வலியை லேசாக மரத்துப்போகச் செய்யும் தாவரங்களான ஓப்பியம் (கசகசா), ஊமத்தை, மூலிகை இலைகள், வேர்கள் மற்றும் வைன் போன்றவற்றைப் பயன்படுத்தியும், வசிய சக்தியைப் பயன்படுத்தியும் தான் இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொண்டதாக குறிப்புகள் கூறுகின்றன.
காலங்கள் செல்லச் செல்ல, மருத்துவம் தனி அறிவியலாக வளர ஆரம்பிக்க, மயக்க மருந்துகளும், வலி நிவாரண முறைகளும் புதிய வடிவங்களை எடுத்தன. அந்த மயக்க மருந்து ஆரம்பங்களின் முக்கியமான ஒன்றுதான் ‘Inhalation Anesthetics' எனப்படும் சுவாசிக்கும் மயக்க மருந்துகள்.
பொதுவாக நமது பழைய சினிமாக்களில் எல்லாம், ஒரு கர்ச்சீஃப் கொண்டு கதாநாயகியை வில்லன் மயக்கமுறச் செய்யும் காட்சிகளைப் பார்த்திருப்போம். ஞாபகம் இருக்கிறதல்லவா? உண்மையில் சினிமாவில் வருவது போல் அப்படி சுலபமாக கர்ச்சீஃப் கொண்டெல்லாம் எப்போதுமே மயக்கமடைய வைக்க முடியாது என்றாலும்,
அப்படி சுவாசம் மூலமாக ஆவியாகும் திரவங்களை நிதானமாக செலுத்தி, மருத்துவத்திற்காக மயக்கமடையச் செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்தார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
அப்படி, மயக்கத்தைத் தருவிக்கும் நைட்ரஸ் ஆக்சைட், ஈத்தர், குளோரோஃபார்ம் போன்ற பொதுவான திரவ ஆவிகளை, அவற்றுக்கான பிரத்தியேக கருவிகள் மூலம் நுரையீரலுக்குள் செலுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்வது எளிதாக இருந்தது என்பதால் பிரபலமடைந்தது. என்றாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
தனித்துறை எப்போது? - பெரும்பாலும் குளோரோஃபார்ம் மற்றும் ஈத்தர் ஆகிய சுவாச மயக்க மருந்துகள் அறுவை சிகிச்சைக்கு நன்கு உதவின. இருந்தாலும் அவை ஏற்படுத்திய அதீதப் பக்கவிளைவுகளால் அவை நிறுத்தப்பட்டு, அடுத்தகட்ட மயக்க மருந்துகளான தொல்லைகள் குறைவான Halothane, Isoflurane, Sevoflurane போன்றவை கண்டறியப்பட்டன. அவை இன்றுவரை உலகெங்கும் பல கோடி அறுவை சிகிச்சைகளுக்கு உதவியும், உயிர்காத்தும், நோயாளிகளுக்கு வலி நிவாரணம் அளித்தும் வருகின்றன.
இப்படி மயக்க மருந்துகள் வழங்குவதே ஒரு பெரிய வேலையாக இருந்தாலும், இது நீண்ட நெடுங்காலம் தனித்துறையாக மாறவில்லை. பெரும்பாலும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவரே அந்த நோயாளிக்கு மயக்க மருந்தை அளித்துவிட்டு, அவரே அறுவை சிகிச்சையை மேற்கொள்வது தான் அன்றைய வழக்கமாக இருந்தது. ஆனால், அதிலும் சிக்கல்கள் உருவாக, உண்மையில் 18 ஆம் நூற்றாண்டில் தான் மயக்கவியல் துறை தனியாக உருவெடுத்தது.
முதல் பெண்: இப்படி, மருத்துவம் வளர்ந்து நீண்ட நெடுங்காலம் கழித்துதான் மயக்கவியல் என்று ஒரு தனித்துறை உருவானது என்றாலும், அதிலும் உலகம் முழுவதும் ஆரம்பத்தில் ஆண் மருத்துவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர். அவர்களை எல்லாம் புறம் தள்ளி உலகின் முதல் பெண் மயக்கவியல் நிபுணராக வந்தவர் ஓர் இந்தியர் என்பதுதான் இங்கு சிறப்பு. அவர் தான் டாக்டர் ரூபா பாய் ஃபர்தோன்ஜி.
பெண்களுக்கு பள்ளிக்கல்வி பயில்வதே பெருங்கனவாக இருந்த ஒரு காலகட்டத்தில், ஒரு பெண் மருத்துவம் பயின்றதோடு மட்டுமல்லாமல், அப்போது புதிதாக உருவாகியிருந்த மயக்கவியல் துறையைத் தேர்ந்தெடுத்து, தன்னை வெற்றிகரமான உலகின் முதல் பெண் மயக்கவியல் நிபுணர் என்று நிரூபித்ததோடு, மக்களையும் காப்பாற்றி, தனக்குப் பின் பல மருத்துவர்களையும் உருவாக்கிச் சென்றவர் தான் நமது டாக்டர் ரூபா பாய் ஃபர்தோன்ஜி.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்த இவர் பார்சி இனத்தவர் என்பது தவிர இவரைப் பற்றிய தனி வாழ்க்கைக் குறிப்புகள் எதுவும் பெரிதாக இல்லையென்றாலும், மருத்துவத்தில் இவர் புரிந்த சாதனைகள் பல நமது வரலாற்றில் காணக் கிடைக்கிறது.
(ரூபா மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com