

வகுப்பறை கலந்துரையாடலுக்கான களமாக மாறுகிறபோது, புதிய புதிய செயல்பாடுகள் மாணவர்களாலேயே வடிவமைக்கப்படும்., மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன், தமிழ்ப்பாட ஆசிரியரைக் கூட,பாட பேதமின்றி அறிவியல் செய்திகளில் ஆர்வம் கொள்ளச் செய்துவிடும்.
தாவரங்களின் சில இலைகளில் வெளிர் மஞ்சள் நிறம் எவ்வாறு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் ஆர்வமுடைய தமிழாசிரியர், மாணவர்கள் அனைவரும் தாவரம் வளர்க்க வேண்டும் என்கிறார். குழந்தைகள் செடி நட்டு வளர்க்க உதவிகளையும் செய்கிறார். தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து, யார் செடி முதலில் பூ பூக்கிறது என்பதைப் பார்க்க மாணவர்களிடையே போட்டி எழுகிறது. நன்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தாலும் சில தாவரங்களின் இலைகள் வெளிர் மஞ்சளாக உள்ளது.
மாணவர்கள் ஆசிரியரிடம், எங்கள் செடியெல்லாம் பூக்காதா? என கேட்கவும், வெளிர் மஞ்சள் நிற இலைக்கு காரணமென்ன என்று ஆசிரியர் தேடத் தொடங்குகிறார். மாட்டுச்சாணம் , இயற்கை உரம் என்ற தேடலின் முடிவில் தாவரங்களில் மெக்னீசியம் பற்றாக்குறை குறைவு காரணமாக இலைகள் வெளிர் மஞ்சளாக மாறும் என்பதை புத்தகம் படித்து அறிகிறார். மாணவர்களுக்கு அவர்களின் தமிழாசிரியர் அறிவியல் ஆசிரியராக மாறிவிட்டதைப் போல, சிறப்பாக அறிவியல் விளக்கம் தருகிறார்.
தாவரங்கள் ஓசோனை வெளியிடுமா? - அறிவியல் பாடத்தில் ஓசோன் பற்றிய விளக்கம் அறிவியல் ஆசிரியரால் கொடுக்கப்படுகிறது. அடுத்த பாடவேளைக்கான ஆசிரியர் வகுப்பறைக்கு வருமுன், மாணவர்கள் உற்சாகமாக One O alphabet! Two O oxygen!Three O ozone! Come on! come on! Susan! என்று ராகத்துடன் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கரும்பலகையில் தாவரத்திலிருந்து ஓசோன் வெளிவருவது போல படம் வரையப்பட்டிருந்தது. ஆசிரியர் விளக்கம் கேட்கிறார். ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதாக அறிவியல் ஆசிரியர் சொன்னார். தாவரத்திலிருந்து ஓசோன் கிடைத்தால் விரைவில் ஓட்டையை நிரப்பிவிடலாமே என்று வரைந்து வைத்தோம் என்கிறார்கள் மாணவர்கள்.
மாணவர்களின் சுற்றுச்சூழல் அக்கறையை மெச்சுகிறார் ஆசிரியர். கூடவே தாவரங்களிலிருந்து ஓசோன் பற்றியும் அறிவியல் ஆசிரியரிடம் கேட்கிறார் மற்றும் அறிவியல் நூல்களில் தேடுகிறார். நல்ல ஓசோன், கெட்ட ஓசோன் பற்றி அறிகிறார்.
காற்று மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன், சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களால் வெப்பமடைந்து இரு மூலக்கூறுகளாக பிரிகிறது. உடைந்த ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறு உடையாத மற்றொரு ஆக்ஸிஜனுடன் சேர்ந்து ஓசோனாகிறது. இது நல்ல ஓசோன். புறஊதாக் கதிர்களைத் தடுக்கிறது.
பூமியில் தாவரங்களின் மூலம் கிடைக்கும் ஆக்ஸிஜன், வாகனங்களின் புகை மற்றும் பூமியின் வெப்பத்தால், இரு மூலக்கூறுகளாகப் பிரிந்து, உடையாத ஆக்ஸிஜனுடன் சேர்ந்து ஓசோனாகிறது. இவை நேரடியாக மனிதனால் சுவாசிக்கப்படும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நல்ல ஓசோன், கெட்ட ஓசோன் பற்றி அறிந்ததும் மாணவர்கள் பூமியின் வெப்பத்தை குறைக்கும் செயல்களில் நாம் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.
கண்ணப்பன் கேட்ட கேள்வி: மாணவன் கண்ணப்பன் வகுப்பறையில் ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் வித்தியாசமாக கேள்விகளைக் கேட்பவன். கண்ணப்பனுக்கு முழங்காலில் அடிபட்டதால், அறுவை சிகிச்சைக்கு பிறகு பிளேட் வைக்கப்பட்டிருந்தது . சந்திக்கச் செல்லும் ஆசிரியரிடம், சாதாரண இரும்பு பிளேடு கையில் கீறியதற்கு ஊசி போட வேண்டும் என்றீர்களே சார். இப்போது என் காலில் இரும்பு பிளேட் வைத்திருக்கிறார்களே எனக்கு பாதிப்பாகாதா? என்கிறான். ஆசிரியரின் தேடல் தொடங்குகிறது.
கண்ணப்பன் கேட்ட கேள்வி புத்தகம் பதினான்கு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியரின் அக்கறையான விடை தேடலும், அதுசார்ந்த வகுப்பறைக் கலந்துரையாடலும் என புத்தகம் முழுவதும் அறிவியல் செய்திகள் நிரம்பியுள்ளன. மாணவர்களின் கேள்விகள் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் நாடகமாக்கி, அறிவியல் செய்திகளை மாணவர்களுக்கு எளிதில் புரியவைக்கவும் முயற்சி செய்யலாம்.
புதுச்சேரி ஆசிரியர் அன்பழகன் ஏற்கனவே 'கரும்பலகைக் கதைகள்' என்ற அவருடைய புத்தகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலை பகிர்ந்திருக்கிறார். இப்புத்தகத்திலும் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை போதுமான வகுப்பறை சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார். மாணவர்களோடு சேர்ந்து பதில் தேடும் புதுமையான ஆசிரியராக நம்முன் நிற்கிறார். வாசித்துப் பாருங்கள்.
- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்; தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com