

உடலுக்குள் எண்ணிக்கையா? ஆமாம். என்ன எண்ணிக்கை இருந்துவிடப் போகிறது? இரண்டு கண்கள், ஒரு மூக்கு, இரண்டு கைகள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு வயிறு, இரண்டு கால்கள். அதிகபட்சம் இரண்டு தான் எண்ணிக்கை. இல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகலாமா?
ஒரு கையில் ஐந்து விரல்கள். ஆக கைகளில் மொத்தம் 5 X 2 = 10 விரல்கள். கால்களிலும் 10 விரல்கள். ஆக உடலில் விரல்களின் எண்ணிக்கை 20. 20 தான் அதிகபட்ச எண்ணிக்கை என வைத்துக்கொள்வோமா? இதைவிட எது அதிகமாக இருக்கும்? வாயிற்குள் இருக்கும் பற்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமோ? சராசரியான ஒரு மனிதனுக்குப் பற்களின் எண்ணிக்கை 32.அதெப்படி உலகம் முழுக்க எல்லா மனிதர்களுக்கு இப்படி மிகச்சரியாக 32 பற்கள் வளர்கின்றது? ஒரு மனித உடலில் எத்தனை உடல் உறுப்புகள் (organs) மொத்தமாக இருக்கும் தெரியுமா? கண், காது, மூக்கு, வாய், உதடு, இதயம், கைகள் என்றுதான் குழந்தையாக இருக்கும்போது ஆரம்பித்து இருப்பார்கள். அதன்மொத்த எண்ணிக்கை 78.
சண்டைக்காட்சிகளின் போது இந்த வசனத்தைக் கேட்டிருக்கலாம். ”பல்லைப் பெயர்த்து கையில கொடுத்திடுவேன், எலும்பை எண்ணிடுவேன்”. நம் உடலில் இருக்கும் எலும்புகளை (bones) எண்ணியதுண்டா? தோராயமாக எவ்வளவு இருக்கும்? வளர்ந்த ஒவ்வொருவருக்கும் தோராயமாக எல்லாம் இல்லை குறிப்பாக 206 எலும்புகள் இருக்கும். பிறந்ததும் இதன் எண்ணிக்கை 270. வளர வளர சில எலும்புகள் இணைந்து 206 ஆக மாறிவிடும்.
மனித எடையில் இதன் சதவிகிதம் 15% மட்டுமே. அதாவது ஒரு மனிதன் 100 கிலோ கிராம் எடை உள்ளவராக இருப்பின் அவரது எலும்பின் எடை 15கிலோ கிராம். எலும்பினைப் பற்றிச் சொல்லும்போது அதை இணைக்கும் கூட்டுகளின் (joints) எண்ணிக்கை பற்றியும் சொல்லியாக வேண்டும். அதன் எண்ணிக்கை 360.
இதுவரையில் எல்லா எண்ணிக்கையும் மிகக் கச்சிதமாக எல்லோருக்கும் எவ்வளவு எனச் சொல்லிடமுடியும். இனி தோராயமாகத்தான் போக முடியும். குறிப்பிட்ட வரம்பில் இருக்கும் என்று கூறலாம். உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கையும் அப்படி வரம்பிற்குள் வந்துவிடும். 600-ல் இருந்து 840 வரையில் தசைகள் உள்ளன. தசைகளை மூன்று வகையாக பிரிக்கின்றனர். இதைவிட இன்னும் அதிகமான எண்ணிக்கையில் எதுவும் இருக்காது எனத் தலையில் கை வைத்துவிடவேண்டாம்.
தலை என்றதும்தான் முடி நினைவிற்கு வருகின்றது. தலைமுடியின் எண்ணிக்கை எவ்வளவு? வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையையும் தலையில் இருக்கும் முடிகளின் எண்ணிக்கையும் எண்ண முடியாது என்று சொல்வார்கள்.
ஆனால் துல்லியமான கணக்கு போட்டு ஒரு பயனும் இல்லை. தோராயமான கணக்கே போதும். தோராயமாக 90,000-ல் இருந்து 1,50,000 வரை இருக்கும். தினமும் 50 முதல் 100 முடிகளாவது உதிரும் அதே அளவிற்கு வளரவும் செய்யும். ஒவ்வொரு மனிதருக்கும் இந்த எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் மனித மண்டையின் நிறத்திற்கு ஏற்ப இந்த எண்ணிக்கையும் மாறுபடும் என்கின்றார்கள்.
சில சமயம் நமக்கு கச்சிதமான எண்ணிக்கை தேவைப்படும், சில இடங்களில் தோராயமான எண்ணிக்கை போதுமானது. ஓரளவிற்கு மீறிச் சென்றால் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கும். இதை விடவும் நமக்குள் பெரிய எண்ணிக்கையில் சில இருக்கின்றன. உடலுக்குள் இவ்வளவு எண்ணிக்கைகளா? சரி உடலுக்குள் அளவீடுகள் உள்ளனவா? ஆமா இருக்கே இருக்கே..
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்; தொடர்புக்கு: umanaths@gmail.com