

வகுப்பறையில் பல வாய்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. அதற்குப் பயம் ஒரு காரணமாக இருக்கலாம். தவறாகப் பேசி விடுவோம் என்ற அச்சத்தால், வாய்கள் தானாக பூட்டிக் கொள்கின்றன. கூச்ச சுபாவமும் பல குழந்தைகளின் பேசும் திறன் வெளிப்பட சவாலாக இருக்கிறது.
ஆசிரியர்கள் கேட்கும் வரையறைக்கு உட்படாத உரையாடல்களில் கூட பேசுவதற்கு சிலர் சிரமப்படுகின்றார்கள். இன்னும் சிலர் உச்சரிப்பதற்குப் பயந்து பேச தயக்கம் காட்டுகின்றார்கள். பல சமயங்களில் பயமுறுத்தும் வகுப்பறைச் சூழலும் பேசும் திறனை வளர்ப்பதற்குத் தடையாக உள்ளது.
பேசுதல் அடிப்படைத் திறன்களில் முக்கிய மானது. கொஞ்சம் சவாலானது என்றாலும் எளிய கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்திப் பேச வைத்துவிட முடியும். புதுமையும், வித்தியாசமும் வகுப்பறையை கலகலப்பாக்கிவிடும்.
வீட்டில் இருந்து குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருளைக் கொண்டு வரச் செய்யுங்கள். அதை அனைவரிடத்திலும் காண்பிக்கச் செய்யவும். இது வகுப்பறைச் சூழலை பேசுவதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கும். குழந்தைகளின் தயக்கம் உடைக்கும்.
பின்பு, ஒவ்வொருவராக கொண்டு வந்த பொருள் குறித்துப் பேச வாய்ப்பு அளிக்கவும். இப்படி ஆரம்பிக்கும் பேச்சுத்திறன் நம்பிக்கையை ஊக்குவிக்கும். இது வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்குகிறது. புதிய சொற்களைப் பயன்படுத்தவும் இடமளிக்கிறது.
வீட்டுச் சூழலில் வளரும் விலங்குகளின் படங்களைச் சிறிய அளவில் வண்ணத்தில் நகல் எடுக்கவும். அப்படங்களைச் சார்டில் ஒட்டவும். பின், தனியாக வெட்டி எடுக்கவும். அதன் பின்புறம் குழந்தைகளின் விரலில் மாட்டுவதற்கு தகுந்த அளவில் சிறிய நீள்வடிவ சார்ட்டை வளைத்து ஓட்டவும். விரல் பொம்மை தயார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு விரல் பொம்மையைக் கொடுக்கவும். முன்பு போல், பேச வாய்ப்பு அளிக்கவும். தங்கள் சூழலில் பார்த்த விலங்குகள் கைகளில் இருக்கு, அவற்றை பற்றி விரலை ஆட்டியபடி பேசுவார்கள். ஒவ்வொருவர் பேச்சும் ஒவ்வொரு விதம்; ஆனால், ஒரே விதமல்ல.
நான்தான் பசு பேசுகிறேன். எனக்கு நான்கு கால்கள் உண்டு என ஒரு குழந்தையும். எங்கள் வீட்டில் ஆடு வளர்க்கிறோம். ஆட்டுக்குப் பெயர் ரோசி. கோவிலுக்கு நேர்ந்துவிட்டுருக்கோம் என மற்றொரு குழந்தையும். எங்க பக்கத்து வீட்டில் பூனை வளர்க்கிறாங்க. அது, அவுங்க வீட்டில் உள்ள எலியை விரட்டும் என்றும் கூறுகையில் வகுப்பு கலகலப்பாகும்.
பின்பு, இருவர் இருவராக இணைத்து அவ்விரல் பொம்மைகள் பேச வாய்ப்பளிக்கவும். இவ்விரல் பொம்மைகள் சரளமாகப் பேச வைத்திடும். குழந்தைகளின் நம்பிக்கையை வளர்த்திடும். அது அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும். சொற்களஞ்சியத்தை வளர்க்கும்.
மேலும், விரல்களிலுள்ள பொம்மைகளைப் பயன்படுத்தி நாடகம் உருவாக்கிப் பேசக் கூறுங்கள்.
ஆடு: ம்மே! ம்மே! எனப்பா இப்படி குண்டாகிட்ட!
கோழி : ஏதோ ஊசி போட்டாங்கப்பா. கொஞ்சம் நாளா சதை வச்சு நடக்க முடியலை.
பசு: இந்த மனுசங்க நல்லவிலைக்குப் போக செயற்கையா உன் எடையை அதிகரிக்கச் செய்றாங்க. இது அவுங்களுக்குதான் ஆபத்து.
கோழி : எப்படி?
பசு : உன்னை வெட்டி திங்கும்போது, உன் உடம்பில் கலந்துள்ள வேதிப் பொருள் அவுங்க உடல்நலனையும் பாதிக்கும்.
நாய்: ஆமாம். என் எதிர்வீட்டில் நாற்பது வயசு ஆள் இறந்து போயிட்டார். அவர் தினமும் பிராய்லர் கோழி சாப்பிடுபவர்.
விரல் பொம்மை தங்கள் சகாக்களுடன் உரையாடல்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கிறது. இவ்வாறு, குழந்தைகளின் பேச்சுத் திறனை வளர்த்தெடுக்க உதவும் வகையில் வாய்ப்புகள் வழங்கும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுங்கள். வகுப்பறையை கலகலப்பாக வைத்திருங்கள்.
- கட்டுரையாளர், சிறார் எழுத்தாளர், (சிவப்புக்கோள் மனிதர்கள், ஸ்பேஸ் கேம், இளவரசியை காப்பாற்றிய பூதம் உள்ளிட்ட சிறார் நாவல்களின் ஆசிரியர்).