

கபிலன் வெளிநாட்டில் இருந்து பணம் சம்பாதித்து விட்டு மனைவி மக்களைப் பார்க்க ஊருக்கு திரும்பி வருகிறான். பார்ப்பவர்களை எல்லாம் வாடா போடா என்று மரியாதை இல்லாமல் பேசுவான். அவனிடம் உதவி கேட்டு வருபவர்களை பார்க்க வைத்து உண்பான். அடுத்தவரை கசக்கி பிழிந்து வேலை வாங்குவான். அதனால் எல்லோரும் அவனைக் கண்டாலே ஓடி ஒளிவார்கள். என்ன தான் தகுதி இல்லாமல் நடந்தாலும் அவன் பக்கம் ஒரு கூட்டம் ஆதரித்தது.
ஒருநாள் சமையல் அம்மாவின் மகள் தமிழினி கபிலன் வீட்டுக்குச் சென்றாள். அவன் கட்டுக்கட்டாய் பணத்தை செலவு செய்வதைப் பார்த்தாள். தாயிடம் அவர் பணம் நிறைய வைத்து இருக்கிறார் என்றாள். அவரிடம் உள்ள பணம் நமக்கென்ன பயன் என்றாள்?
நம் அப்பாவுடைய குடிப்பழக்கத்தை நிறுத்த பணம் இல்லாமல் கஷ்டபடுகிறீங்களே, அதனால் அவரிடம் கடனாக கேளுங்கள் என்றாள். நான் படித்து முடித்து கடனைக் கட்டுகிறேன் என்று சொன்னாள். அந்த அளவிற்கு பண்பு எல்லாம் அவரிடம் கிடையாது.
வீடு, வயலில் வேலை செய்பவர்களை விரட்டு விரட்டு என்று விரட்டுவார். பணம் இருப்பதால் திமிராக நடந்து கொள்வார். ஏழை என்றாலே அடிமையாக நடத்துவார். பணம் இருந்தும் பயன் இல்லை. ஊரே கண்மூடித்தனமாக மதிப்பதற்கு காரணம் அவரிடம் உள்ள பணமே என்று வேதனையோடு தாய் கூறினாள்.
இதைத்தான் வள்ளுவர்
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
அதிகாரம்: 76, குறள்: 751
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்