முத்துக்கள் 10 - சக்கர நாற்காலியிலிருந்து அண்டத்தை அளந்த ஹாக்கிங்

முத்துக்கள் 10 - சக்கர நாற்காலியிலிருந்து அண்டத்தை அளந்த ஹாக்கிங்
Updated on
2 min read

ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக அறிவாற்றல் கொண்டவர் என புகழப்படும் இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவரது பிறந்தநாள் இன்று (ஜனவரி 8). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் பிறந்தவர். குடும்பத்தில் அனைவருமே அறிவுஜீவிகள். அப்பா மருத்துவ ஆராய்ச்சியாளர். சிறு வயதிலேயே ஆராய்ச்சித் திறன் கொண்டிருந்தார்.

# 16 வயதில் நண்பர்களுடன் சேர்ந்து,மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு கணினியை உருவாக்கினார். 1962-ல் இளங்கலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.

# ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கவுரவ பட்டங்களைப் பெற்றுள்ளார். ராயல் சொசைட்டியின் உறுப்பினர். அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

# அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்பட்டார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரைத் தாக்கியிருப்பது அவருடைய 21-ஆம் வயதில் கண்டறியப்பட்டது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.

# மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கரநாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்ந்தார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார்.

# இந்த நோய் அவரது உடலியக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக செயலிக்கச் செய்து வந்தாலும், ஆராய்ச்சிகள், எழுத்துப் பணிகள், பொதுவாழ்வு ஆகிய எதையுமே அவர் நிறுத்தவில்லை.

# ‘இறைவன் உலகைப் படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் தேவதைக் கதைகளில் வரும் கற்பனைகள்தான்’ என்ற இவரது இறையியல் கோட்பாடுகள் குறித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின.

# அண்டவெளித் தோற்றத்தையும், அதன்பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர். அண்டவியலும், குவான்டம் ஈர்ப்பும் (quantum gravity) இவரது முக்கியமான ஆய்வுத்துறைகள். கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

# கருந்துளைகளிலிருந்து துகள்கள் வெளியேறுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறு வெளியேறும் துகள்களுக்கு ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்று பெயரிடப்பட்டது. இவரது ’ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ மற்றும் ’தி யுனிவர்சல் இன் ஏ நட்ஷெல்’ ஆகிய இரண்டு புத்தகங்களும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

# ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘The Theory of Everything’ என்ற தலைப்பில் 2014-ல் திரைப்படமாக வெளிவந்தது. உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்த இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஐன்ஸ்டீனுக்கு அடுத்த ஆற்றல் மிக்க அறிவியலாளர் என்று போற்றப்படும் இவர், 2018-ம் ஆண்டில் தனது இடைவிடாத அறிவியல் ஆராய்ச்சி வாழ்க்கைக்கு விடைகொடுத்து இயற்கை எய்தினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in