

வட கிழக்கு ஆப்பிரிக்காவில் பாய்கிறது நைல் நதி. இது மத்திய தரைக் கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் சுமார் 6700 கி.மீ. நைல் நதிக்கு ஒரு சிறப்பு இருக்கு. இதனுடைய படுகை, பல நாடுகள்ல பரந்து கிடக்கு. காங்கோ, தான்சானியா, ருவாண்டா, உகாண்டா, கென்யா, எதியோபியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளுக்குள்ள நைல் நதி பாயுது.
இங்கெல்லாம் முக்கிய நீராதாரம் இந்த ஆறுதான். அத்தோட, விவசாயம் மீன் பிடித்தலுக்கு உதவறதால அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்குது.
நைல் நதி இரண்டு பிரிவுகளாப் பார்க்கப்படுது. ஒன்று, வெள்ளை நைல். மற்றொன்று நீல நைல். நீளம் இல்லை; நீலம். ஆற்றின் தோற்றுவாய் சில சிறிய அருவிகளால் ஆனது. வெள்ளை நைல் அடுத்தடுத்த நிலைகள்ல அதிக தண்ணீரோட உகாண்டா தெற்கு சூடான் வழியே பாயுது. நீல நைல், தன்னுடைய பயணத்தை, எதியோப்பியாவுல தொடங்குது.
சூடான் தலைநகரம் கார்டூமுக்குள்ள வெள்ளை நைல் நதி மற்றும் நீல நைல் நதி இவை இரண்டும் இணையுது. நைல் நதியின் வடக்கு முனை நூபியன் பாலைவனம் வழியே கெய்ரோவின் நீளமான டெல்டா பகுதியில் பாயுது. அலெக்சாண்ட்ரியா என்கிற இடத்தில மத்திய தரைக் கடலில் கலக்குது. எகிப்து நாகரிகம் இங்குதான் ஆரம்பமாச்சு. பண்டைய எகிப்து நாட்டின் பெரும்பாலான கலைகள், சரித்திர நிகழ்வுகள், நைல் நதிக் கரையில்தான தோன்றின.
பண்டைய எகிப்து மொழியில் இதனுடைய பெயர் ‘ஹப்பி’ அப்படினா ஆறு. இதுதவிர நைல் நதிக்கு ’அமன் டாவூ’ (பெரும் நீர்), ‘நாஹல்’ இப்படிப் பல பெயர்கள் இருக்கு. ஏறத்தாழ எல்லாமே ‘நதி’ என்கிற பொருள் தருவதாகவே இருக்கு. அதாவது, ‘நதி’ன்னு சொன்னா போதும். அது நைல் நதியைத்தான் குறிக்கும்.
இந்த வாரக் கேள்வி
முன்ன ஒரு காலத்துல இருந்ததாகக் கருதப்படும் நதிகள் உலகம் முழுதும் பல உண்டு. இந்தியாவில் ‘புராண காலத்தில்’ இருந்ததாக சொல்லப்படும் ஆறு குறித்து விளக்கவும்.
(நைல் மேலும் பாயும்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com