

பெற்றோரை இழந்த பூங்கொடி அதன் பிறகு மீண்டும் மகிழ்ச்சியாக வாழ பழகியது எப்படி என்பது குறித்து கடந்த முறை பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு முக்கிய காரணம் பூங்கொடி தடையின்றி கல்வியைத் தொடர்வதற்கு சாதகமான சூழல் அமைந்தது. அதனால் அவள் பாதுகாப்பாக உணர்ந்தாள். அவளின் மனஅழுத்தம் நீங்கியது. இத்தகைய சாதகமான சூழல் எல்லோருக்கும் அமையுமா? என்று வினவினாள் மணிமேகலை.
அமையாமலும் போகலாம் என்றார் ஆசிரியர் எழில். அப்படியானால் சாதகமற்ற சூழலை எவ்வாறு கையாள்வது என்றான் முகில். மகிழ்நனுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே, ’நீ மருத்துவராக வேண்டும். அதற்கு நீதான் பள்ளியிலேயே முதல் மாணவராக வர வேண்டும்’ என்று நாள்தோறும் அவனது பெற்றோர் கூறுவர். அதுவேமகிழ்நனுக்கு மனஅழுத்தமாக மாறியது. ஒவ்வொரு தேர்வையும் அவன் மனஅழுத்தத்தோடே எதிர்கொள்வான். ஒரு மதிப்பெண் குறைந்தாலும் பதற்றமடைந்து விடுவான்.
படி படி எனும் அழுத்தம்: அவன் பிளஸ் 2வில் சேர்ந்ததுமே பெற்றோர் அவனை, ‘படி, படி, எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இரு’ என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். மருத்துவ நுழைவுத்தேர்விற்கான பயிற்சி வகுப்பிலும் சேர்ந்துபயின்றான். பொதுத்தேர்வை மிகக்கவனத்தோடு எழுத முனைந்தான்.
முடிவு வெளியாயிற்று. ஆனால், மகிழ்நன் மருத்துவக் கல்லூரியில் சேர தேவையான அளவிற்கு மதிப்பெண்களைப் பெறவில்லை. அவன் பெற்றோர் தங்களது கனவு கலைந்துவிட்டதாகவும் செய்த செலவுகள் வீணாகிவிட்டதாகவும் புலம்பினர். இந்நிலையில் மகிழ்நனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று வினவினார் எழில்.
புலம்பாதீர்கள் என்பேன் என்றாள் நன்மொழி. இனி படிப்பே வேண்டாம் என வேலைதேடுவேன் என்றான் தேவநேயன். ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என எண்ணிமறுகுவேன் என்றாள் தங்கம். மருத்துவரானால் கிடைக்க வாய்ப்புள்ள புகழையும் பொருளாதார வளத்தையும் எண்ணியெண்ணி ஏங்குவேன் என்றான் சாமுவேல்.
ஏன் எனக்கு மட்டுமே இப்படி நடக்கிறது என நினைப்பது தன்னிரக்கம். அதேபோல எண்ணியது கிடைக்கவில்லை என்னும் ஏக்கம் மெல்லமெல்ல தன்னிரக்கமாக மாற வாய்ப்புள்ளது. எனவே தன்னிரக்கத்தையும் ஏக்கத்தையும் தவிர்க்க வேண்டும் என்றார் எழில் .
நடந்தது நடந்துவிட்டது என என்னை நானே தேற்றிக்கொண்டு, ஏதாவது ஒரு பட்டப்படிப்பை மேற்கொள்வேன் என்றாள் கயல்விழி. இது உடன்பாட்டுப் பார்வை என்று அவளைப் பாராட்டினார் ஆசிரியர். மகிழ்நன் அந்தச் சூழலில் என்ன செய்தார்? என்று வினவினான் சுடர்.
தோல்வியிலிருந்து வெற்றி: தேர்வின் முடிவாலும் பெற்றோரின் புலம்பலாலும் மகிழ்நன் முதலில் மனவுளைச்சலுக்கு உள்ளனான். சிறிது நாட்கள் சென்றதும் கைநழுவிப்போனதை எண்ணிக் கவலைப்படுவதில் பயனில்லை என்பதை உணர்ந்தான். மருத்துவர் ஒருவருக்குக் கிடைக்கும் புகழையும் பொருளாதார வளத்தையும் வேறு துறையில் ஈடுபட்டுப் பெற முடிவுசெய்தான்.
கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். அப்பொழுது அவருக்கு புதிய வணிகச்சிந்தனையொன்று தோன்றியது. அதனைச் செயல்படுத்த முனைந்தார். சிறிய முதலீட்டில் சொந்தத்தொழிலைத் தொடங்கினார்.
விடாமுயற்சியோடு உழைத்தார். பத்தாண்டுகளில் நகரின் முதன்மையான வணிகராக வளர்ந்து மருத்துவருக்கு இணையான புகழையும் பொருளாதார வளத்தையும் பெற்றிருந்தார். அந்த நிலைக்கண்டு அவர் பெற்றோர் மகிழ்ந்தனர் என்றார் எழில்.
அதாவது, சாதகமற்ற சூழலில் மனஅழுத்தத்திற்கு ஈடுகொடுத்து ஏற்றிசைய அச்சூழலை உடன்பாட்டு நோக்கில் வேறுபட்ட கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் எனப் புரிகிறது என்றாள் இளவேனில். அதற்கு சிக்கலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றான் அழகன்.
அதற்கு தனது இலக்கு எது என்பதில் தெளிவுவேண்டும் என்றாள் அருட்செல்வி. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக வெற்றி, தோல்வி என்பன பற்றிய நமது வழக்கமான கருத்தையே மீளாய்வு செய்ய வேண்டும் என்றான் அருளியன். அருமை என்றார் ஆசிரியர்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com