கழுகுக் கோட்டை 22: தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்

கழுகுக் கோட்டை 22: தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்
Updated on
2 min read

அரண்மனையிலிருந்து குணபாலனைப் பிடிக்க வந்த வீரர்கள் கையில் இருந்த தீப்பந்தங்களிலிருந்து வந்த ஒளியில் அவர்களது ஈட்டி மின்னிக்கொண்டிருந்தது. அது கட்டிலில் படுத்திருந்த உருவத்தைக் குறிவைத்து நின்றிருந்தது. ஒரு வீரன் மட்டும், ‘இவனுக்கு என்ன துணிச்சல்? இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறான்…’ என்று தனது ஈட்டியால் போர்வையை விலக்கினான்.

அட, அங்கு குணபாலன் படுத்திருக்கவில்லை. மாறாக சில தலையணைகளும் போர்வைகளும் யாரோ படுத்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட வீரர்களுக்கு ஏமாற்றமும் கோபமும் ஒன்று சேர்ந்து வெளிப்பட்டது.

வீரர்கள் எழுப்பிய சத்தம் கேட்டு குணபாலனின் பெற்றோரும் எழுந்து வந்து பார்த்தார்கள். அக்கம் பக்கதில் வசித்தவர்களும் தூக்கம் கலைந்து எழுந்து அங்கே வந்து கூடினார்கள். அப்போது அங்கே இருந்த வீரர்களின் தலைவன் குணபாலனின் பெற்றோரிடம் வந்து, ‘பெரியவரே உமது மகன் எங்கே என்று சொல்லும்.

இன்று எங்களை ஏமாற்றி உமது மகனைக் காப்பாற்றி விட்டோம் என்று இறுமாந்து இருந்துவிடாதீர்கள். இந்த அரசாங்கததை எதிர்த்து எத்தனை நாள் தப்பிக்க முடியும்? என்றைக்கு இருந்தாலும் உமது மகனுக்கு எங்களது கைகளால்தான் முடிவு ஏற்படும் என்பதை அவனிடம் கூறுங்கள்’ என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

நமக்கே கூட குணபாலன் எப்படி அவர்களிடம் சிக்காமல் தப்பித்தான் என்று தோன்றுகிறது அல்லவா? அது ஒன்றுமில்லை. எப்படியும் தன்னைத் தேடிப்பிடிக்க அரண்மனை ஆட்களை திருச்சேந்தி அனுப்பி வைப்பார் என்று முன்கூட்டியே கணித்திருந்த குணபாலன் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தான்.

எனவே, வீரர்கள் வந்தபோது அவனால் எளிதில் தப்பிக்க முடிந்தது. அப்படி அவர்களிடமிருந்து தப்பிய குணபாலன் இப்போது அடர்ந்த காட்டின வழியே ஒரு குதிரையில் பயணித்துக்கொண்டிருந்தான். அந்தஇரவு வேளையில் நிலவின் ஒளியில் குதிரையும் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

அப்போது குணபாலன் மனதில் ஒரு திட்டத்தை வகுத்துக்கொண்டிருந்தான். அதன்படி முதலில் தான் தத்தனிடம் விட்டுச்சென்ற கழுகுக் குஞ்சுகளைப் போய்ப் பார்க்க வேண்டும். அடுத்ததாக மக்கள் புரட்சிப்படைத் தலைவனை சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

காட்டைத் தாண்டி பல கிராமங்களையும் கடந்து சென்றுகொண்டிருந்தான் குணபாலன். அவனுக்குத் தூக்கமும் களைப்புமாக வந்தது. குதிரையும் சோர்ந்துபோய்த்தான் இருந்தது. அப்போது ஒரு நாலுகால் மண்டபத்தைக் கண்டான். உடனே குதிரையை விட்டு இறங்கி, அங்கேயே ஓய்வெடுக்கத் தொடங்கினான்.

எவ்வளவு நேரம் தூங்கினானோ தெரியாது. தூக்கத்திலும் வீரர்கள் விரட்டிக்கொண்டே வந்தார்கள். திடீரென விழிப்பு வந்தது. கண்களைத் திறந்து பார்த்தான். அட, பொழுது நன்றாக விடிந்துவிட்டதே என்று நினைத்தான். குதிரை இருக்கிறதா என்று பார்த்தான். அது அருகிலேயே மேய்ந்துகொண்டிருந்தது.

எவ்வளவோ வேலைகள் இருக்கிறது. நாம் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறோமே என்றெண்ணி உடனே தனது பயணத்தைத் தொடர்ந்தான். சூரியன் உச்சியிலிருந்து சாயத்தொடங்கிய நேரத்தில் தத்தன் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான் குணபாலன். அவனைக் கண்ட தத்தன் ஓடி வந்து கட்டிக்கொண்டான். ‘என்ன குணபாலா, ஊருக்குச் சென்றாயா? உன் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் நலம்தானே? உன்னைக் கண்டதும் அவர்கள் அனைவரும் மகிழ்ந்திருப்பார்களே?’ என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றான். குணபாலனும், ‘ஆமாம் தத்தா, ஊருக்குத்தான் சென்றேன். அங்கு அனைவரும் நலமாக உள்ளனர்.

ஆமாம், நான் வளர்த்துவரச் சொன்ன கழுகுக் குஞ்சுகள் எப்படி இருக்கின்றன? வளர்ந்துவிட்டனவா?’ என்று பதில் கேள்வி கேட்டான். அதற்கு தத்தன், ‘இப்போது அவை குஞ்சுகளல்ல. முழுதாய் வளர்ந்துவிட்டன. பார்த்தால் உனக்கே ஆச்சரியமாக இருக்கும். வா காட்டுகிறேன்’ என்று ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு சென்றதும், ‘குணபாலா, நீ கொஞ்சம் மறைந்து நில், புதியவர்களைக் கண்டால் அவற்றுக்கு அச்சமாகஇருக்கும். சில நாட்கள் தீனி போட்டால், அவற்றுக்கு நீயும் பரிச்சயமாவாய்’ என்று சொல்லிவிட்டு, ‘க்வேய்…. க்வேய்…’ என்று கத்தினான். குணபாலனும் சற்றுத்தொலைவில் ஒளிந்துகொண்டு ஆவலுடன் பார்த்தான்.

அடுத்த நொடியே ஆறு கழுகுகள் போட்டி போட்டுக்கொண்டு பறந்து வந்து தத்தனின் தோள்களிலும் கைகளிலும் அமர்ந்து அவனுடன் மவுன மொழியில் பேசின. அந்தக் காட்சியைக் கண்ட குணபாலனுக்கு வியப்பாக இருந்தது. அட, நாம் விட்டுச் சென்ற கழுகுக் குஞ்சுகளா இவை? இப்படி வளர்ந்துவிட்டனவே! என்று ஆச்சரியம் நீங்காதவனாக தத்தனை நோக்கிச் சென்றான்.

குணபாலனைக் கண்ட கழுகுகள் விருட்டென மேலெழும்பிப் பறந்து சென்றன. ‘அற்புதம் தத்தா! அற்புதம்… இவற்றை இந்த அளவுக்கு வளர்த்துவிடுவாய் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை’ என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.

தொடரும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in