

தேர்வு அறையில் நிலவும் இறுக்கமான அமைதி நமக்கு ஒருவகை மனஉளைச்சலைத் தரும். அப்படியானால் அந்த அமைதி குழந்தைகளை எந்தளவுக்குத் தொந்தரவு செய்யும்? அதுவும் மொத்தக் கற்றலையும் தேர்வை நோக்கி நகர்த்தும் போது இந்த அழுத்தும் மேலும் மேலும் அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தில் இரண்டு குழந்தைகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பார்ப்போம்.
ஐந்தாம் வகுப்புக்குக் குழந்தைகளுக்கான ஆண்டுத் தேர்வு நடந்தது. அரங்கிற்கு மேற்பார்வையாளராக நான் இருந்தேன். மொழிப்பாடத்திற்கான தேர்வு. நான் வினாத்தாளை எல்லோருக்கும் கொடுத்துவிட்டுக் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தேன். ஒரு குழந்தை அடிக்கடி தலையைத் திருப்பி என்னைப் பார்ப்பதைக் கண்டேன். முதலில் கவனிக்காமல் இருந்தேன். ஆனால், நான் நடக்கும் திசையில் அவளுடைய தலை திரும்புவதைப் பார்த்ததும் அவளுடைய அருகில் சென்று நின்றேன். அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைக் கவனித்தேன்.
அமைதியை குலைத்த கேள்வி: என்னாச்சு? என்று மெல்லிய குரலில் கேட்டேன். அவளும் தேர்வு அரங்கத்தில் நிலவும் அந்த அமைதியைக் குலைக்க விரும்பாமல் பேனாவால் ஓர் வினாவைச் சுட்டிக்காட்டிவிட்டு என்னைப் பார்த்தாள். நான் அந்த வினாவை மனதுக்குள் வாசித்தேன்.
நீங்கள் பார்த்த விலங்கியல் பூங்காவைப் பற்றி ஒரு பக்கக் கட்டுரை வரைக என்பதுதான் அந்தக் கேள்வி. எனக்கு அந்தக் கேள்வியில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் அவளைப் பார்த்து அதற்கு என்ன என்பது போல் கையால் செய்கை செய்தேன்.
அவள் மீண்டும் பேனாவால் அந்த வினாவைச் சுட்டிக்காட்டிவிட்டு நான் எப்படி எழுதுவேன் என்பதுபோல் செய்கை செய்தாள். எனக்குப் புரியவில்லை என்பதுபோல் தலையை ஆட்டினேன். அவ்வளவுதான் அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தேர்வு அரங்கத்தின் அமைதியைக் குலைத்தபடி எப்போ கூட்டிட்டு போனீங்க? என்றாள் உரக்க.
குளத்தில் கல் விழுந்ததுபோல் அவளுடைய குரல் எல்லோருடைய காதுகளிலும் எதிரொலித்தது. எழுதுவதை நிறுத்திவிட்டு அனைவரும் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். விலங்கியல் பூங்காவுக்குக் குழந்தைகளைக் கூட்டிச் செல்லவில்லை.
அதைப் பற்றிய காணொளிகளைக் காட்டியதில்லை. ஏன் அதைப் பற்றிக் கலந்துரையாடியது கூட இல்லை. பிறகெப்படி குழந்தைகளால் பதில் எழுத முடியும்? எனக்குச் சுர்ரென்று உறைத்தது.
தேர்வும் சாப்பாடும்: வேறொருமுறை தேர்வு ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆனது. தேர்வெழுதி முடித்த மாணவர்கள் விடைத்தாளை மேசை மேல் வைத்துவிட்டுப் போனார்கள்.
ஒரு மாணவன் வந்தான். விடைத்தாளை வீசாத குறையாக மேசை மேல் இட்டான். கூடவே ம்ஹும் என்றோர் ஒலி எழுப்பவும் செய்தான். என்னாச்சு இவனுக்கு என்ற நினைத்தவன். கார்த்திக், என்னாச்சு? ஏன் விடைத்தாளை வீசியெறிகிறாய்? என்று கேட்டான். சற்று நடந்தவன்.
திரும்ப வந்தான். என்னை உற்றுப் பார்த்தான். முந்தா நேத்துக் காலையில என்ன சாப்பிட்டீங்க? என்று கேட்டான். நான் ஒரு நிமிடம் குழம்பிப்போனேன். அவன் என்னைப் பார்த்து தெரியுதல்ல. மூணு நாளைக்கு முன்னாடி தின்னது மறந்து போச்சு. மூணு மாசத்துக்கு முன்னாடியுள்ளதைக் கேட்கறீங்க... என்று சொல்லிவிட்டு விருட்டென்று நடந்து அகன்றான்.
மாறுவோமா? - ஏதோ ஒரு மையத்திலிருந்து சிலபேர்வினாத்தாள் உருவாக்கி, அதை அனைத்து பள்ளிகளுக்கும் கொடுத்து, அதை நடைமுறைப்படுத்தி...என்னும்அமைப்பு முறையிலான தேர்வை இனிஎத்தனை காலம்தான் நடத்தப்போகிறோம். குறைந்தது துவக்கப்பள்ளிகளிலாவது தேர்வு நடத்தும் மொத்தப் பொறுப்பை ஆசிரியர்களிடம் விட்டுவிடுவது நல்லது.
இனி வரும் காலங்களில் நினைவாற்றலைப் பரிசோதிக்கும் இந்த எழுத்துத் தேர்வு தேவையா என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். உணர்வோடு கலந்தவைதாம் நினைவில் நிற்கும். தகவல்களுக்கு உணர்ச்சி இல்லையே.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in