தயங்காமல் கேளுங்கள் - 55:: காய்ச்சல் என்பது வியாதி அல்ல

தயங்காமல் கேளுங்கள் - 55:: காய்ச்சல் என்பது வியாதி அல்ல
Updated on
1 min read

தன் மகன் நவீனுக்கு குளிர் காய்ச்சல் வந்தது ஏன் என்கிற கேள்வியை அவரது தாயார் நம்மிடம் எழுப்பி இருந்தார். எப்போதெல்லாம் உடலின் வெப்பநிலை மாறுபடுகிறதோ, அப்போதெல்லாம் நமது உடலில் இயற்கையாக செயல்படக் கூடிய தெர்மாமீட்டர் தான், மற்ற உறுப்புகளை இயக்கியும் முடக்கியும் உடலின் வெப்பநிலையை சீராக்க முயல்கிறது. அப்போது வெளித்தெரியும் ஓர் அறிகுறிதான் காய்ச்சல் மற்றும் குளிர். ஆக, காய்ச்சல் என்பது ஒரு வியாதி அல்ல.

அது ஒரு அறிகுறி மட்டுமே. நோயின் காரணமாகவும் மற்ற தருணங்களிலும் இது வெளிப்படலாம் என்றாலும், பொதுவாக கிருமித்தொற்று தான் காய்ச்சலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. காய்ச்சலை தடுக்க முடியுமா என்றால், காய்ச்சல் என்பது நோயல்ல. நோயின் அறிகுறி என்பதால், அது வராமல் தடுக்க முடியாது. ஆனால், அது வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை தவிர்க்கலாம்.

சிறாரை அதிகம் தாக்கும் காய்ச்சல்: அடுத்து, காய்ச்சல் என்றாலே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியமா என்றால், எந்த நோய்க்கான காய்ச்சல் என்பது பொருத்தே அதை சொல்ல முடியும். பொதுவாக பள்ளி செல்லும் குழந்தைகளின் காய்ச்சலுக்கு முக்கியக் காரணமாக இருப்பவை பருவமழைக் காலத்தில் நம்மைத் தாக்கும் ஃப்ளூ, டெங்கு போன்ற வைரஸ்களும், டைபாய்டு போன்ற பாக்டீரியாத் தொற்றுகளும் தான்.

இதில் உலகெங்கும் மிக அதிகம் காணப்படும் ஃப்ளூ வைரஸ் நோய் தான், நம்மிடையேயும் மழை மற்றும் குளிர் மாதங்களில் அதிகம் காணப்படுகிறது. உண்மையில் இந்த ஃப்ளூ எனும் இன்ஃபுளூவென்சா வைரஸ் (Influenza type A, B, C) நமது சாதாரண சளி காய்ச்சல் மட்டுமன்றி பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், ஸ்பானிஷ் ஃப்ளூ போன்ற பல்வேறு பெருந்தொற்று நோய்களுக்கும் காரணியாக உள்ளது.

இந்த ஆர்என்ஏ வகை வைரஸ்கள் பொதுவாக மனிதனின் சுவாசப்பாதையில் தங்கி, அங்கு வளர்ந்து நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் நோயை ஏற்படுத்துபவை. அதாவது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தும்மல் மற்றும் இருமல் மூலமாக எளிதாகப் பரவுபவை இவை.

அப்படி ஃப்ளூ நோயுற்ற ஒருவரிடமிருந்து சுவாசப்பாதை வழியாக மற்றொருவரின் உடலுக்குள் நுழையும் இன்ஃபுளூவென்சா வைரஸ், ஓரிரு நாட்களுக்குள் மூக்கு, தொண்டை, சுவாசக்குழாய் மற்றும் நுரையீரல் ஆகிய பகுதிகளில் பல்கிப் பெருகி, பின்பு அதுவே நோயாக வெளிப்படுகிறது.

அப்போது தோன்றும் நோய் அறிகுறிகள் தான் நவீனுக்கு ஏற்பட்டது போல குளிரும் காய்ச்சலும். அத்துடன் சளி, இருமல், தொண்டை வலி, தலை பாரம், உடல் சோர்வு, மூட்டு வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சமயங்களில் மூச்சுத்திணறல் ஆகியனவும் இந்த ஃப்ளூ தொற்றில் இருக்கக்கூடும்.

(காய்ச்சல் குறித்த ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in