இவரை தெரியுமா? - 25: தூரிகையும் உளியும் ஏந்தி போரிட்ட ஓவிய வீரர்கள்

இவரை தெரியுமா? - 25: தூரிகையும் உளியும் ஏந்தி போரிட்ட ஓவிய வீரர்கள்
Updated on
2 min read

லியொனார்டோ டாவின்சி மைக்கலாஞ்சலோவுக்கு 23 ஆண்டுகள் முன்பு பிறந்தவர். சிற்பக்கலைக்கு மைக்கல் என்றால், ஓவியக்கலைக்கு டாவின்சி என்று ப்ளோரன்ஸ் மக்கள் கொண்டாடினர். அரண்மனை வளாகத்தில் டாவின்சி வரைந்த போர்க்கள ஓவியம் தன் சிற்பத்தை விஞ்சியும் ரசிக்கப்படுவதாய் மைக்கல் உணர்ந்தார். எனவே அதற்குப் போட்டியாக தானும் ஒரு போர்க்கள ஓவியத்தை வரைய விரும்பினார். 1512ஆம் ஆண்டு இவ்வாசை நிறைவேறியது.

ப்ளோரன்ஸ் மற்றும் பீசா மாகாணத்து வீரர்களுக்கிடையே போர் ஏற்பட்டது. தகிக்க முடியாத வெம்மையால் ப்ளோரன்ஸ் வீரர்கள் ஆற்றோரமாகக் குளித்தார்கள். அச்சமயம் எதிர்பாராவிதமாக பீசா வீரர்கள் தாக்குதல் தொடங்க, ஆற்றிலிருந்து விரைந்து ஆயுதமெடுக்க விரையும் வீரர்களை அத்தனைத் தத்ரூபமாக வரைந்தார் மைக்கல். ஓவியமா சிற்பமா என்று பார்வையாளர்கள் மருண்டார்கள். இவ்வாறு டாவின்சிக்கும் மைக்கலுக்கும் பலகாலம் போட்டி நீடித்தது.

போப்பாண்டவருக்குக் கல்லறை: கிறிஸ்தவ மதத்தின் அதிகாரமிக்க போப்பாண்டவர் இரண்டாம் ஜூலியஸ், தனக்கான கல்லறைச் செதுக்கித்தரும்படி மைக்கலை விண்ணப்பித்தார். எட்டு அடுக்கில் பிரம்மாண்ட சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தன் திட்டத்தை, போப்பிடம் வெளிப்படுத்தினார் மைக்கல்.

தேவாலயம் அருகிலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து, அன்றாடம் ரகசிய வழியில் சென்று சிற்ப வேலைகளை போப் கண்காணித்தார். நாட்கள் செல்லச் செல்ல கல்லறை பணியில் போப் ஆர்வமிழந்தார். மைக்கலுக்கு வழங்கும் ஊதியம் நிறுத்தப்பட்டது.

கோபித்துக்கொண்ட மைக்கல், ரோம் நகரைவிட்டு வெளியேறினார். பலமுறை முயற்சி செய்தும், போப் ஆண்டவரால் சமாதானம் செய்ய முடியவில்லை. இறுதியில் மைக்கல் ஒப்புக் கொண்டார். ஆனால், இம்முறை கல்லறைச் சிற்பத்திற்குப் பதில் சிஸ்டைன் சிற்றாலயத்தின் உட்கூரையில் சுதை ஓவியங்களால் அலங்கரிக்க வேண்டுமென்று போப் நிர்பந்தித்தார்.

“உலகில் வேறெந்த மனிதனைக் காட்டிலும், நான் பெரும் துன்பம் அனுபவிக்கிறேன்” என்று இந்தப் பணி குறித்து தன் தம்பிக்கு எழுதிய கடிதமே மைக்கலின் அசாத்திய உழைப்புக்குச் சாட்சி.

நிறைவேறாத ஆசை: உலகப் புகழ்பெறக் காத்திருந்த சிஸ்டைன் ஓவியங்கள் மைக்கலின் பொறுமையைச் சோதித்தன. அந்தரத்தில் வரைவதால் பெயிண்ட் துளிகள் கண்ணில் விழுந்தன; அவர் முதுகுத் தண்டு மோசமாக வலியெடுத்தது; இருட்டிவிட்டால் தொப்பியில் மெழுகுவர்த்தி ஏந்தி வரைய வேண்டும்.

இதற்கிடையில் அவரின் வயது முதிர்ச்சியும் பாடாய்ப் படுத்தியது. போப்பின் கல்லறைச் சிற்பங்களை பலகாலம் முயன்றும் முடிக்க முடியாததால், வேறொருவர் தொடரும்படி அனுமதி கொடுத்து விலகி விட்டார். தனக்கொரு கல்லறைச் செதுக்க வேண்டும் என விரும்பிய மைக்கல், இறுதிவரை அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளவில்லை. அவரின் கல்லறைச் சிற்பங்களை நான்குபேர் கொண்டு வடிவமைத்தார்கள்.

இறுதி நாட்கள்: தன் 89ஆவது வயதில், “என்னால் உறங்க முடியவில்லை. உழவோட்டிய நிலத்தில் உள்ள சோளக்காட்டுப் பொம்மையைப் போல், தூக்கமின்றி தவிக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். நிறைவு செய்யாத சிற்பங்கள் அவரை உறங்கவிடாமல் உறுத்தின. தன் மரணத்தை முன்பே உணர்ந்த மைக்கல், படுக்கையில் வீழ்ந்தபோது நால்வரை அழைத்து ‘கிறிஸ்து மரணம்’ பற்றி உரக்கப் படிக்கச் சொன்னார்.

அடுத்த ஐந்தாவது நாள் மாபெரும் கலைஞன் உலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார். உயிரோட்டமுள்ள ஓவியங்களிலும் சிற்பங்களிலும் மைக்கலாஞ்சலோ நம்மோடு இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காற்றோடு காற்றாக, கல்லோடு கல்லாக!

(தொடரும்)

- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in