

கடந்த அத்தியாயங்களில் 'பனிப்பந்து வழி' (Snow Ball Method), 'அவலாஞ்சி வழி' (Avalanche Method) ஆகிய இரு உத்திகளின் மூலம் கடனை எவ்வாறு அடைப்பது என பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அடுத்த சில உத்திகளை அலசுவோம். சிறிய கடனில் தொடங்கி படிப்படியாக பெரிய கடனை அடைக்கும் உத்தியை ’பனிப்பந்து வழி’ என்கிறார்கள். பெரிய வட்டியை வசூலிக்கும் கடனில் தொடங்கி சிறிய தொகை கொண்ட கடனை அடைப்பதை அவலாஞ்சி வழி என்கிறார்கள். இந்த இரண்டு உத்திகளையும் கலந்து உருவாக்கிய உத்திதான் ’பனிபுயல் வழி’ (Blizzard method).
அதாவது முதலில் பனிபந்து வழியை பின்பற்றி சிறிய கடனை அடைக்க வேண்டும். அதில் கிடைக்கும் உத்வேகம், நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய நல்ல ஆற்றலை பயன்படுத்தி கொண்டு, அவலாஞ்சி உத்தியில் பெரிய கடனை அடைக்க வேண்டும். பின்னர் மீண்டும் சிறிய கடன், அதனை பெரிய கடன் என மாறி மாறி கடனை அடைக்கும் உத்திக்கு பெயரே ’பனிபுயல் வழி’ ஆகும்.
திட்டமிடலும் கடன் பட்டியலும்: இந்த வழியை பின்பற்றுவதற்கு முன்பாக, முதலில் கடன் பட்டியலில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கடன் பிரச்சினைக்கு மூல காரணமே அலட்சியமும் முறையான திட்டமிடல் இல்லாததும் தான். எனவே கடனை அடைக்க முதலில் தெளிவான திட்டங்களை யோசிக்க வேண்டும்.
பின்னர் அவரவர் பிரச்சினைகளுக்கு ஏற்ப கடனை அடைக்கும் வழிகளை வகுக்க வேண்டும். அதற்கடுத்து அனைத்து கடன்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியலை உருவாக்க வேண்டும். கடனாக செலுத்த வேண்டிய தொகை, வட்டி விகிதம், காலக்கெடு ஆகியவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து அந்த பட்டியலை தயாரிக்க வேண்டும்.
இந்த பட்டியலின் அடிப்படையில் பனிப்பந்து மற்றும் அவலாஞ்சி வழிகளை ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறி பின்பற்ற வேண்டும். சிறிய கடனை அடைக்கும்போது கிடைக்கும் உற்சாகத்தை பயன்படுத்தி, கவலையை விரட்டி கடனை விரைவில் அடைக்கலாம். இந்த பாணியை பின்பற்றினால் கடனை முன்கூட்டியே எளிதாக அடைத்து விடலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
கடன் ஒருங்கிணைப்பு: ஒரு சிலர் ஒரு கடனை அடைக்க, இன்னொரு கடனை வாங்குவார்கள். அது முற்றிலும் தவறு என சொல்ல முடியாது. ஏனென்றால் அதிக வட்டியை உறிஞ்சும் கடனை அடைக்க குறைந்த வட்டியுள்ள கடன் கிடைத்தால் வாங்கலாம். அதேவேளையில் கடன் தொல்லை தாங்க முடியாமல், அதனைவிட அதிக வட்டியை உறிஞ்சும் வட்டி கொண்ட கடனை வங்குவது மிகவும் தவறானது.
ஒருவருக்கு பல வகையான கடன்கள் இருந்தால், அதற்கு பல விகிதங்களில் வட்டி செலுத்த நேர்ந்தால், அவற்றை அடைக்க 'கடன் ஒருங்கிணைப்பு' (Debt consolidation) என்ற உத்தியை பின்பற்றலாம். ஏனெனில் பல வங்கிகளில் பல விதமான வட்டி விகிதங்கள் கொண்ட கடன்கள் இருப்பின் அவற்றில் குழப்பம் ஏற்படும். வட்டி விகிதத்தில் இழப்பும் அதிகமாக இருக்கும்.
இந்த பிரச்சினையை தீர்க்க இன்னொரு வங்கியில் குறைந்த வட்டிக்கு ஒட்டுமொத்த கடனுக்கும் ஏற்ப பெரிய தொகையை கடன் வாங்கி அடைக்கலாம். அவ்வாறு செய்தால் வட்டி விகிதம் குறைவதுடன், இழப்பும் குறையும். பல விதமான கடன் தொல்லை ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். கடன் ஒருங்கிணைப்பிற்காக குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகளும் இருக்கின்றன.
கடனில் இருந்து நிவாரணம்: வாங்கிய கடனை அடைக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்றால் ஓடி ஒளிய கூடாது. செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட கூடாது. மாறாக, கடன் கொடுத்த வங்கியையோ/நபரையோ சந்தித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தன்னால் ஏன் அந்த கடனை கட்ட முடியவில்லை என்பதற்கான நியாயமான காரணங்களை கூற வேண்டும். அவ்வாறு செய்தால், சம்பந்தப்பட்டவரின் பிரச்சினையை புரிந்துக்கொண்டு கடன் கொடுத்த வங்கி/நபர் அவருக்கு சில சலுகைகளை வழங்க முன்வருவார்கள். சில நேரங்களில் கடனை தள்ளுபடி செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in