முத்துக்கள் 10 - ஆங்கிலேயரை வீழ்த்தி முடிசூடிய வீரமங்கை வேலு நாச்சியார்

முத்துக்கள் 10 - ஆங்கிலேயரை வீழ்த்தி முடிசூடிய வீரமங்கை வேலு நாச்சியார்
Updated on
2 min read

தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கை சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் (Velu Nachiyar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் (1730) பிறந்தார். விஜயரகுநாத செல்லதுரை சேதுபதி மன்னரின் ஒரே மகள் இவர். சிறு வயதிலேயே துணிச்சலும் எதற்கும் அஞ்ஞாத நெஞ்சுரமும் கொண்டிருந்தார்.

# கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்றறிந்தார்.

# சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16-வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார். வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையின் உதவியோடு நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்தன. காளையார்கோவிலில் இருந்த மன்னர் வடுகநாதரை திடீரென்று தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை தங்கள் வசப்படுத்தினர்.

# சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார் ராணி. இவரது வீரம், விவேகத்தை மெச்சிய ஹைதர் அலி அவருக்கு உதவினார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சி கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி முகாமிட்டு ஆங்கிலேயரை அடித்து விரட்ட தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்.

# ஆங்கிலப் படையை அழித்து, நவாபை வீழ்த்தி, சிவகங்கை சீமையில் தங்கள் அனுமன் கொடியை மீண்டும் பறக்க விடுவது என்று சபதமேற்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, சேனாதிபதிகள் மருது சகோதரர்களை அழைத்துக்கொண்டு குறுநில மன்னர்களை ஒன்றுசேர்த்துப் போராடப் பல இடங்களுக்கும் சென்றார்.

# எப்படி அவர்களைத் தாக்கி வீழ்த்த வேண்டும் என்ற உத்திகளை வகுத்தார். 1780-ல் ஹைதர் அலியின் படையைத் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். தன் படைகளை மூன்றாகப் பிரித்து, மும்முனைத் தாக்குதல் நடத்தி வாகை சூடினார்.

# விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தினர். கோட்டையைக் கைப்பற்றினர்.

# சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான்! ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.

# இவரது ஆட்சியில் சிவகங்கை பல்வேறு வகையிலும் வளர்ச்சி அடைந்தது. படையெடுப்புகளால் சிதைந்த கோட்டைகளைச் சீரமைத்தார். விவசாயத்தை விரிவுபடுத்தினார். ஆறுகளைஅகலப்படுத்தினார். துணைக் கால்வாய்கள்தோண்டப்பட்டன. கோயில்களைச் செப்பனிட்டார்.

# இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உடல்நலக் குறைவால் 66-வது வயதில் (1796) மறைந்தார். இவரது பெயரில் 2008-ல் தபால் தலை வெளியிடப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in