

லடாக் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதையும் இந்த இந்தியப் பயணத்தில் சாத்தியப்படுத்தினோம். காஷ்மீரில் இருந்து லடாக் நோக்கிய நம் பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. சாலைகள் மோசமாக இருந்தன, பல இடங்களில் சாலைகளே இல்லை. இமய மலையின் பல சாலைகள் ரொம்பவே ஆபத்தானவை. கொஞ்சம் கவனம் சிதறினாலும் விபத்து நடக்க நிறைய வாய்ப்பிருக்கும். கடல் மட்டத்தில் இருந்து மேலே செல்ல செல்ல நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு சிரமப்படும். அதனால் தேவையான ஓய்வு எடுத்து, நிறைய தண்ணீர் குடித்து பயணத்தில் போது உடலை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
லடாக் நிறைய மலைகளால் ஆனபாலைவனம் என்று தான் சொல்ல வேண்டும். நூறடிக்கு ஒரு முறை அந்த மலைகளின் நிறமும் குணமும் மாறிக்கொண்டே இருக்கும். உறையவைக்கும் குளிர், ஆள் அரவமற்ற சாலைகள், பல கிலோ மீட்டர்களுக்கு நடுவே வந்து போகும் கிராமங்கள்என லடாக் நமக்கு ரொம்பவே வித்தியாசமான இடமாக இருந்தது. லடாக்கில் நாம் முதலில் சென்ற இடம் கார்கில்.
வணக்கத்துக்குரிய வீரர்கள்: 1999-ல் நடந்த கார்கில் போர் இந்திய வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும். எத்தனையோ ராணுவத்தினரின் உயிர் தியாகத்தால் கார்கில் போரில் இந்தியா வென்றது. அதை நினைவுகூரும் விதமாக போர் நடந்த கார்கில் பகுதியில் போர் நினைவுச் சின்னம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.
மலைகளுக்கு நடுவே இந்தியக் கொடி பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்க மறுபக்கம் வீரர்களுக்கான நினைவு சின்னங்கள் இருந்தன. போரின்போது பயன்படுத்திய பொருட்கள், துப்பாக்கிகள், டாங்கிகளின் மாதிரிகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
1999-ம் ஆண்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் திராஸில் நடக்கும் விழாவில் முன்னாள் போர் வீரர்கள், மறைந்த வீரர்களின் மனைவிகள், மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள்.
கார்கில் நினைவுச் சின்னப்பகுதியில் இருந்தபோது தவிர்க்கமுடியாத பெயராக நம் நினைவுக்கு முதலில் வந்தது மேஜர் சரவணனுடைய பெயர் தான். அவரது வீர தீரச் செயல்களைப் பாராட்டி இந்திய அரசு ‘படாலிக் நாயகன்' என்றும் நம் நாட்டின் உயரிய விருதான ‘வீர சக்கரா’ என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது.
கார்கில் ஜோதியில் அவரது முகம் நினைவுக்கு வந்துபோனது. கொஞ்ச நேரம் தமிழகத்தை சேர்ந்த ராணுவத்தினரிடம் பேசிவிட்டு கார்கில் நகரை நோக்கி பயணித்தோம்.
அமைதியின் புன்னகை: லடாக்கில் நிறைய புத்த மடாலயங்கள் உள்ளன. இந்த பழமையான புத்தகோயில்களை காணவே வெளிநாடுகளிலிருந்து பலரும் வந்து செல்கிறார்கள். கார்கில் நகருக்கு நாற்பது கிலோமீட்டருக்கு முன்பே முல்பெக் எனும் கிராமத்தில் கொம்பா புத்த மடாலயம் இருக்கிறது.
இந்த பழமையான புத்த கோயிலில் முப்பது அடி உயரத்தில் மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட மைத்ரேய புத்தரின் சிலை பிரம்மாண்டமாக புடைக்கப்பட்டிருந்தது. அமைதியான அந்த கோயிலில் மற்றொரு பகுதியில் பாடல்பாடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்.
கார்கில் பழமையான ஊர். மலைகளுக்கு நடுவே அமைதியாக இருந்த கிராமத்தில் அன்பான மனிதர்களையும் இயற்கை வளத்தை தவிர வேறு எதுவும் இல்லை. நாளை லடாக்கில் இன்னொரு முக்கியமான பகுதிக்கு செல்ல வேண்டும்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com