கற்றது தமிழ் - 25: அள்ள அள்ளக் குறையாம உணவைக் கொடுத்த அமுதசுரபி

கற்றது தமிழ் - 25: அள்ள அள்ளக் குறையாம உணவைக் கொடுத்த அமுதசுரபி
Updated on
2 min read

கடும் மழை வெள்ளத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ரயில் பயணிகளுக்கு கிராம மக்கள் உணவு வழங்குகிற காட்சியும், மீட்கப்பட்ட பயணிகள் அந்தக் கிராம மக்கள் எங்களுக்கு உணவளிக்கவில்லை என்றால், எங்கள் நிலை என்னவாகியிருக்குமோ என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசியதும் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது.

குழலி: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்னு இலக்கியங்கள் சொன்னது எவ்வளவு உண்மை பார்த்தியா...

சுடர்: மணிமேகலைக் காப்பியத்துல தான இந்த வரி வருது...

குழலி: ஆமா சுடர். அள்ள அள்ளக் குறையாம உணவைக் கொடுத்த அமுதசுரபி, இப்ப நம்ம கையில இருந்தா எப்படி இருக்கும்... யாருக்கும் இல்லேன்னு சொல்லாதபடி உணவு கிடைச்சிக்கிட்டே இருக்கணும்...

சுடர்: ரொம்ப நல்ல ஆசைதான் குழலி.... ஒரு படைப்பாளியோட கற்பனை எவ்வளவு உயர்வா இருக்கு பார்த்தியா...

குழலி: அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின் / மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம் / உண்டியும் உடையும் உறையும் அல்லது / கண்டது இல்” ன்னு சொல்ற மணிமேகலை, ‘எவ்வுயிர்க் காயினும் இரங்குதல் வேண்டும்ன்னும் சொல்லுது.

சுடர்: உணவு, உடை, இருப்பிடம் கொடுப்பது அறம்.

குழலி: புறநானூற்றுல, குடபுலவியனார் என்கிற புலவர் எழுதின ஒரு பாட்டு. பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் புலவர் அறிவுறுத்துவதா வருது. பொதுவியல் திணையில, முதுமொழிக்காஞ்சித் துறையில அமைஞ்ச பாட்டு..

சுடர்: முதுமொழிக்காஞ்சித் துறையும் கிட்டத்தட்ட பொருண்மொழிக்காஞ்சித் துறை போலத்தான். இல்லையா குழலி...

குழலி: உலகத்தோட இயல்ப, உண்மைகளக் கற்றுத் தேர்ந்த புலவர்கள் அதை எடுத்துச் சொல்லி, அறிவுறுத்துறதுதான் இந்தத் துறையும். புறநானூற்றுல 18ஆவது பாட்டு. முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் ன்னு தொடங்கும்.

குழலி, பாடலை வாசிக்கத் தொடங்குகிறாள்... இடையே

“நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே…” (புறம் -18)

இந்த அடிகள்தான் ரொம்பவே முக்கியமானது. ஒரு அரசன் என்ன நினைப்பான்... எல்லா அரசர்களையும் போர்ல வென்று, வீரத்தில சிறந்தவன்னு தன் புகழை நிலைநிறுத்தணும் அல்லது வீரமரணம் அடைஞ்சு சொர்க்கத்துக்குப் போகணும்னு நினைக்கலாம். வாழும் காலத்துலயும் வாழ்ந்து முடிச்சதுக்குப் பிறகும் தன் புகழை நிலைநிறுத்திக்கணும்னு நினைக்கிற அரசனுக்குன்னு ஒரு தகுதி வேணும். அது என்ன தெரியுமா...

நம்ம உடம்பால நீர் இல்லாம வாழ முடியாது. உடம்புக்கு உணவு தந்தவங்கள உயிர் தந்தவங்களா மதிக்கிறோம். அப்ப உடம்புங்கிறது உணவினால ஆனது. உணவுங்கிறது என்ன? நிலமும் நீரும் சேர்ந்து நமக்குத் தந்த கொடை. அப்ப நீரையும் நிலத்தையும் பாதுகாக்குறவங்க இந்த உடம்மையும் உயிரையும் படைச்சவங்க தானே.

மன்னனே, நீ உன் புகழை நிலைநாட்ட விரும்பினா, நான் சொல்றதக் கேளு. இந்த வானம் கொடுக்கிற மழை நீரைத் தடுத்து, நிலம் எங்கெல்லாம் வழிகொடுக்குதோ அங்கெல்லாம் நீர்நிலைகளை உருவாக்கு. நீரைச் சேமி. நீர்நிலைகளைப் பெருகச் செய்... அப்படிச் செய்தா இந்த உலகத்துல உன் பெயரையும் புகழையும் யாராலும் அழிக்க முடியாது. உன் பெயர் நிலைச்சிருக்கும்னு அறிவுறுத்தினாராம் புலவர்..

சுடர்: எவ்வளவு உண்மை... கல்லணை கட்டின கரிகாற் சோழனை நாம இன்னும் கொண்டாடிக்கிட்டுத்தான இருக்கோம். முல்லைப் பெரியாரு அணையைத் திட்டமிட்ட ஆங்கிலேய பொறியாளர் பென்னி குயிக்க சாமி மாதிரில நம்ம மக்கள் கும்பிடுறாங்க...

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in