

சூரிய ஆற்றல், காற்றாற்றல்போல் நாம் பயன்படுத்தும் மற்றொரு தொழில்நுட்பம் நீர்மின் சக்தி தொழில்நுட்பம். இந்த முறையில் நாம் நீர்த்தேக்கங்களை உருவாக்கி அதில் நீரைச் சேகரிக்க வேண்டும். பின் அந்த நீரினை அருகே அமைக்கப்பட்டுள்ள டர்பைன்கள் வழி செலுத்துவதன் மூலம் அதனைச் சுழல வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இந்த முறையிலும் நமக்குக் கார்பன் பெரிய அளவில் உமிழப்படுவதில்லை. தமிழ்நாட்டிலேகூட இதுபோன்று கிட்டத்தட்ட 20 நீர்மின் நிலையங்கள் இருக்கின்றன.
இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு 8.4% மின் உற்பத்தி கிடைக்கிறது. உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையம் சீனாவில் உள்ள மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையில் அமைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு நெதர்லாந்து நாடு அளவுள்ள பகுதி முழுமைக்கும் தேவையான மின்சாரம் அதிலிருந்து உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் நீர்மின் ஆற்றலின் மூலம் 16% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது.
நீர்மின் ஆற்றல் உற்பத்திக்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்குவது ஏகப்பட்ட செலவுகளைக் கோரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் அதற்காகக் கட்டப்படும் நீர்த்தேக்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன. சீனாவில் நாம் பார்த்த அணையைக் கட்டுவதற்கு 20 ஆண்டுகள் ஆனது. 28 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. இதைவிடக் கொடிய விஷயம் அந்த அணைக்காக 13 லட்சம் மக்கள் அவர்கள் வீடுகளை இழந்து புலம் பெயர்ந்தனர். அதைச் சுற்றி இருந்த 600 கிலோ மீட்டர் இயற்கைச் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
இது எல்லாவற்றையும் தாண்டி போதுமான நீர் இருந்தால்தான் இந்த நீர்மின் நிலையங்களையும் இயக்க முடியும். அதற்கு வேண்டிய மழை எந்நேரமும் பொழிந்துகொண்டே இருக்குமா என்ன? இதனால்தான் இந்தப் பாதையையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
மின்சக்தியை உற்பத்தி செய்ய இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் அணுமின் நிலையங்கள். அணுமின் நிலையங்களில் யுரேனியம் அணுக்களைப் பிளப்பது மூலம் வெளியாகும் ஆற்றலை மின்சாரமாக மாற்றுகிறார்கள். இந்த உற்பத்தி முறையிலும் கார்பன் வெளியாகாது. மேலே அணுஉலைகளைக் கவனமாக கட்டுப்பாட்டுடன் இயக்குவது மூலம் நமக்கு வேண்டிய மின்சாரத்தை எளிமையாகத் தயாரித்துவிடலாம். இன்றைக்கு உலகம் முழுவதும் 10% மின்சாரம் அணுசக்தியால்தான் கிடைக்கிறது.
இதிலும் இருக்கும் பாதகங்கள் என்னவென்றால் யுரேனியமும் நமக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் அல்ல. மேலும் அணுமின் ஆற்றலுக்காக நாம் ஏற்கெனவே நிறைய விலையைக் கொடுத்திருக்கிறோம். செர்னோபில், ஃபூகுஷிமா, மூன்று மைல் தீவு என உலகம் மூன்று கொடிய அணு உலை விபத்துக்களைச் சந்தித்துள்ளது. அத்துடன் இதில் உற்பத்தியாகும் கழிவும் சுற்றுச்சூழலை வெகுவாகச் சீரழிக்கக்கூடியது.
தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் அணுமின் நிலைய உற்பத்தியால் ஏற்பட்டுள்ள மரண விகிதம் 0.03%தான். இதுவே புதைபடிம எரிபொருள் மூலம் ஏற்படும் காற்று மாசு உள்ளிட்ட காரணிகளால் ஏற்படும் மரண விகிதம் 83.22சதவிகிதம். (ourworldindata.org/energy).இருப்பினும் ஒரு தலைமுறையின் பலனுக்காக எதிர்காலத் தலைமுறைகளை நாம் காவு கொடுக்க வேண்டுமா என்ன?
(தொடர்ந்து விவாதிப்போம்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர். தொடர்புக்கு: tnmaran25@gmail.com