மகத்தான மருத்துவர்கள் - 53: அறுவை சிகிச்சையின்போது மெல்லிய இசை ஒலிக்கச் செய்தவர்

மகத்தான மருத்துவர்கள் - 53: அறுவை சிகிச்சையின்போது மெல்லிய இசை ஒலிக்கச் செய்தவர்
Updated on
2 min read

கண்சிகிச்சைக்கு முன்னோடியான நாடு இந்தியா எனும் அளவிற்கு தேர்ந்த கண் மருத்துவர்கள் பலர் இந்தியாவில் உருவெடுக்க முழுக் காரணமாக திகழ்ந்தார் டாக்டர் பத்ரிநாத். அதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான கண் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச அளவில் வெளியிட்டு, கண் சிகிச்சையில் பல புதிய போக்குகளை மருத்துவ உலகிற்கு காட்டினார். இதனால் 'Chief' என்றே மருத்துவர்கள் அனைவரும் இவரை அன்பாக அழைத்தனர். கர்நாடக இசையிலும் பாரதியார் பாடல்களிலும் பத்ரிநாத் பெரும் ஈடுபாடு கொண்டிருந்ததால் அவரது அறுவைசிகிச்சை அரங்குகளில் எப்போதும் மெல்லிய இசை ஒலித்தபடி இருக்கும் என நினைவு கூருகின்றனர் அவரது உதவி மருத்துவர்கள்.

முந்தி இருப்பச் செயல்: ஒருபக்கம் அயராத உழைப்பு என்றால் மறுபக்கம் புதுமைகளை உருவாக்குதல் என பலவற்றுக்கு முன்னுதாரணமாக இருந்தார் டாக்டர் பத்ரிநாத். நாட்டின் முதல் கண் பரிசோதனை (ஆப்டோமெட்ரி) கல்லூரி, முதல் என்.டி. யாக் லேசர் சிகிச்சை, இஸ்ரோவுடன் இணைந்து முதல் கண் விழிப்புணர்வு வாகனம், சென்னை ஐஐடியுடன் இணைந்து முதல் நடமாடும் கண்புரை மையம், டாட்டா நிறுவனத்துடன் இணைந்து முதல் மின்னணு மருத்துவப் பதிவேற்றம் என பல புதுமைகளுக்கு வித்திட்டார்.

அதேசமயம் கண் விழிப்புணர்வுக்காக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவும், சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதவும் உதவியாளர்களை ஊக்குவித்தார். இவரது அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்நாள் முழுவதும் தோள் கொடுத்து நின்றார் டாக்டர் வசந்தி பத்ரிநாத்.

பத்ம விருது, பத்மபூஷன் விருது, பி.சி.ராய் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தன்வந்திரி விருது, மஹாவீர் விருது, சிறந்த குடிமகன் விருது, பிர்லா விருது, தாதாபாய் நௌரோஜி விருது என இந்திய தேசமும், ஹால் ஆஃப் ஃபேம், டாக்டர் ஆஃப் சயின்ஸ், கோல்டன் ஆப்பிள் அவார்ட் என உலக நாடுகளும், அவரது செயற்கரிய செயல்களைப் பாராட்டி, டாக்டர் பத்ரிநாத்துக்கு பல விருதுகளும் பட்டங்களும் வழங்கின.

இத்தனைக்கு பிறகும் இந்திய இராணுவ மருத்துவக் கல்லூரியில் கௌரவப் பேராசிரியராகவும் ஆலோசகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியதையே தனது பெருமை மிக்க தருணமாக அவர் குறிப்பிட்டார்.

இறுதி மூச்சுக்கு பின்பும் ஓயாத சேவை: தனது வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பு, நேர மேலாண்மை, நெறி தவறாமை, நல்லொழுக்கம், புத்தம்புது முயற்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து வந்த டாக்டர் பத்ரிநாத், 60 வயதில் பணி ஓய்வு பெற்று, அதன் பின் சங்கர நேத்ராலயாவின் கௌரவ ஆலோசகராக, தனது அடுத்த தலைமுறைக்கு வழிவகுத்துக் கொடுத்தார்.

யார் விருப்பத்திற்கும் இடையூறாய் இருக்க விரும்பாத அவர் இதழியல் துறை மற்றும் மரபியல் துறைகளில் தேர்ச்சி பெற்ற தனது இரு மகன்களையும் அவர்களது விருப்பப்படி வெளிநாட்டில் பணிபுரியவும் அனுமதித்தார். வயோதிகம் காரணமாக சங்கர நேத்ராலயாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற டாக்டர் பத்ரிநாத், 83 வயதில், கடந்த நவம்பர் 21ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.

அவரது மரணத்தன்றும் சங்கர நேத்ராலயாவின் பணிகள் ஒருநாள் கூட நிற்கக் கூடாது, மக்களில் ஒரு நபர் கூட காத்திருக்கக் கூடாது என முன்னமே அவர் உத்தரவிட்டிருந்ததால், அவர் விருப்பப்படியே மருத்துவப் பணிகள் தொடர்ந்தன. இராணுவ மருத்துவப் படை பங்கேற்றபோதும் அவரது இறுதி ஊர்வலம், அவரது எளிமையை பறைசாற்றிச் சென்றது. இன்று ஒரு தேசமே இந்தத் தனியொரு மருத்துவரைப் போற்றுகிறது.

இதுவரை 3000 கண் மருத்துவர்களையும், 4000 கண் சோதனையாளர்களையும், 2000கண்மருத்துவ உதவியாளர்களையும் தோற்றுவித்துள்ள சங்கர நேத்ராலயா தனக்கு பார்வை வழங்கிய தனது முதல் தலைவரை இழந்து நின்றாலும் அவர் விட்டுச்சென்ற கண்ணின் ஒளியை எந்நாளும் மறையாமல் அளித்துக் கொண்டுதான் இருக்கும். ஏனென்றால், ஒரு மகத்தான மனிதரின் பார்வை அவர் மறைந்த பிறகும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

(மகிமை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in