

கதை பயிற்சி வகுப்பு ஒன்றில் கதை வரைபடம் (Story map) தயார் செய்தோம். ஊரின் வரைபடம், நாட்டின் வரைபடம்தானே வரைய முடியும். இதென்ன கதைக்கு வரைபடமா என்று தோன்றுகிறதா? கதை எழுதி பழகும் காலத்தில் கதை வரைபடம் நிச்சயம் நமக்கு உதவியாக இருக்கும். எப்படி என்பதைப் பார்க்கும் முன் கதை வரைபடம் என்பது என்ன என்று தெரிந்துகொள்வோம்.
ஒரு கதைக்கான கரு நம் மனதில் உருவானதும், அதை வைத்து கதாபாத்திரங்களை உருவாக்கி கதை எழுதுவோம். அந்தக் கதையின் மையம் எது என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். அதை வைத்துதான் மற்ற நிகழ்வுகள் நடக்கும். அதனால், எது மையம் என்பதில் தெளிவு வேண்டும். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? ஓர் உதாரணம் பார்ப்போம்.
பாட்டி வடை சுட்டு, அதை காகம் தூக்கிச் சென்ற கதை நினைவில் இருக்கிறதா? அந்தக் கதையின் மையம் எது?
பாட்டியா… காகமா… வடையா… நரியா?
வடைதான்.
கதை நடுவே வடை
விற்பனைக்காக வடையைத்தான் பாட்டி சுட்டு வைத்தார். அந்த வடையின் வாசனைதான் காகத்தை அங்கே வரவழைத்தது. அந்த வடையைப் பார்த்துதான் நரிக்கு பசி எடுத்து, காகத்திடம் பேசியது. ஆக, எல்லாவற்றுக்கும் காரணம் வடை. அதனால், இந்தக் கதையின் மையம் வடை. அதை வைத்து ஒரு கதை வரைபடம் தயார் செய்யலாம். கீழே உள்ள வரைபடத்தை நன்கு பாருங்கள்.
பாட்டி வடை சுடுதல்
காகத்தின் வருகை
வடையை காகம் தூக்கிச் செல்லல்
காகம் மரத்தில் அமர்தல்
நரியின் வருகை
வடையைப் பார்த்து நரி ஆசைபடுதல்
ஏமாற்றி வடையைப் பறிக்கும் நரி
வடை கதைக்கான வரைபடம் இப்படித் தயாரிக்கலாம். வட்டமாக இல்லாமல், நேராகச் செல்லும் விதமாகக்கூட வரைந்துகொள்ளலாம்.
ஏன் இந்த வரைபடம்? - ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிடும்போது, நிகழ்ச்சி நிரல் தயார் செய்வோம் இல்லையா? இத்தனை மணிக்கு நிகழ்ச்சி தொடங்க வேண்டும், இவர் வரவேற்பு, இவர் தலைமைஎன்று வரிசையாகக் குறிப்பிட்டு திட்டமிடுவோம். அதுபோல கதை எழுதுவதற்கான திட்டமிடலே இது. கதை என்பது கலை சார்ந்த ஒரு செயல்பாடு. அதற்கு இப்படித் திட்டம் போடுவது சரியல்ல என்று சிலர் நினைப்பார்கள். நாம் கதை எழுதும் பயிற்சியில் இருப்பதால் இந்தத் திட்டமிடல் அவசியம். கதை நன்கு எழுதிப் பழகியவர்களுக்கு இந்த வரைபடம் தேவையில்லை.
நமக்கு தோன்றும் கதையின் கருவை படிக்கும் வாசகர்களுக்கு சரியாகச் சொல்லிவிட இந்த வரைபடம் அவசியம். உதாரணத்திற்கு, வீட்டுப்பாடம் செய்து வராத மாணவரை ஆசிரியர்விசாரிக்கிறார். அதற்கு அந்த மாணவர், நேற்று மாலை பெய்த மழையால் எங்கள் வீட்டுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. அதனால், வீட்டுப்பாடம் எழுத முடியவில்லை என்று சொல்கிறார். இதை வைத்து நீங்கள் ஒருகதை எழுதுகிறீர்கள்.
மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வந்ததுதான் கதையின் மையம். அதை நோக்கி கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் எழுத வேண்டும். அதை விடுத்து என்ன வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது… யாரெல்லாம் எழுதி வந்தார்கள்… அதை எழுத எவ்வளவு நேரம் ஆகும்…. என்றெல்லாம் எழுதி கதையின் போக்கை மாற்றக்கூடாது அல்லது தேவையில்லாத பகுதிகளை எழுதக்கூடாது. அப்போதுதான் மழை பெய்து அந்த மாணவர் சிரமப்பட்டது படிப்பவர் மனதில் பதியும். கதையின் வரைபடம் போல ஒரு வரைபடம் வரைந்து பாருங்கள்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com