

ஓவியா தன்னம்பிக்கையும் துணிச்சலும் சகிப்புத்தன்மையும் நிறைந்த நந்திமங்கலம் அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி. பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட தயாராகுமாறு, தலைமையாசிரியர் சொன்னதிலிருந்து ஓவியாவும் அவளுடைய நண்பர்கள் பவித்ரா, பிரின்ஸி, முகிலன், சாதிக் ஆகியோரும் ஆண்டுவிழாவுக்கு வருகைதரும் சிறப்பு விருந்தினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியாய் தங்கள் நிகழ்ச்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக திட்டமிட்டு பயிற்சி செய்கிறார்கள். பள்ளியில் மாலை மணி அடித்ததும், வீட்டிற்கு துள்ளி ஓடுவார்கள் மாணவர் கள். ஆனால் இன்று இவர்கள் ஐவரும் நாடகம், நடனம் என பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கதிரேசன் தாத்தா அந்தப் பள்ளியின் அலுவலக ஊழியர். பள்ளி மணியை அடித்த பின்பு, ஒவ்வொரு வகுப்பாகச் சென்று, குழந்தைகள் யாரேனும் வகுப்பறையில் உள்ளனரா என்று சோதித்துக் கொண்டே வருகிறார். ஏழாம் வகுப்பில் இவர்கள் ஐந்து பேரும் இருப்பதை பார்த்த கதிரேசன் தாத்தா, 'ஏ பிள்ளைகளா என்ன இன்னும் வீட்டுக்குப் போகாம இங்கே இருக்கீங்க' என்று வினவ, ஆண்டுவிழாவில் அருமையான நிகழ்ச்சி தந்து, அசத்த விரும்பும் தங்களின் ஆசையை பகிர்ந்துக் கொள்கிறார்கள் நால்வரும். ஓவியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே, "ஏன் ஓவியா நீ மட்டும் அமைதியாக இருக்கிறாய்?" என்று தாத்தா கேட்கிறார்.
மந்திர சிறகு: ஓவியா வீட்டில் அதிகமாக பொருள் செலவு செய்து ஆண்டுவிழாவுக்கான ஆடை ஆபரணங்களை வாங்கித் தர இயலாதாம் என்று தோழி பவித்ரா கூறுகிறாள். 'ஏன் நம்மிடம் இருக்கும் பொருட்களில் சிலவற்றை ஓவியாவுக்கு பரிசளிக்கக்கூடாது? அவளையும் நிகழ்ச்சியில் பங்குபெற வைக்கலாமே?" என்று யோசனை சொல்கிறான் சாதிக் அவனது யோசனையை ஏற்று ஓவியாவுக்கு தலைக்கு கிரீடம், இலை மாலை, இலை மோதிரம், அழகான கவுன், பளபளக்கும் செருப்பு, ஒற்றைச் சிறகு ஆகியவற்றை ஒவ்வொருவரும் பகிர்ந்து தருகின்றனர்.
அப்போதே அவற்றை அணிந்து கொள்கின்றாள் ஓவியா. ஒற்றைச் சிறகை அணிந்த பின்பு, ஓவியா கைகளை சிறகு போல அசைத்துப் பார்க்கிறாள். திடீரென பறக்கிறாள். நண்பர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. மறுநாள் காலை பள்ளிக்கு சீக்கிரமாக வருகை புரிகிறாள் ஓவியா. முந்தைய நாள் இரவில் தனக்கு தூக்கத்தில் கனவு வந்ததையும்,அந்த கனவில் நடந்தது போல நடப்பது சாத்தியமா என்றும் நண்பர்களுடனும், தாத்தா கதிரேசனுடம் கலந்துரையாடுகிறாள். மாலை பள்ளி முடிந்த பிறகு, கனவில் நடந்ததை சோதித்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
மாய காட்சி: மாலை அனைவரும் மைதானத்தில் கூடுகின்றனர். ஓவியா கனவில் கண்ட விதமாக பள்ளி மணியின் நாக்கை கழற்றிவிட்டு, பச்சை நிற மடிந்த நாக்கை மாட்டுகிறாள். தனக்கு நண்பர்கள் கொடுத்த ஒற்றைச் சிறகு, இலை மாலை, இலை மோதிரம், அழகிய கவுன், செருப்பு, கிரீடம் என அனைத்தையும் அணிந்துகொண்டு, ஒற்றைச் சிறகை நீவி விடுகிறாள். பறக்கிறாள். பறந்து கொண்டே சென்று மணியை ஓங்கி ஒலிக்கவும், மஞ்சள் ஒளியில் மைதானம் மின்னுகிறது. மைதானத்தில் உள்ள நந்தியாவட்டை மரம் மேல் மஞ்சள் ஒளிபடருகிறது. மரத்தில் பூக்கள் ஒளிர்கின்றன.
பூத்த பூக்கள் அப்போதே உதிர் கின்றன. ஓவியா அந்தப் பூக்களை பறவை வடிவில் சேகரிக்கிறாள். பறவை வடிவிலான பூக்கள் ஒரு பறவையாகவே உயிர்பெறுகின்றன. பறந்து செல்லும் அந்தப் பறவை, தன்னைப் போன்றே பத்து பறவைகளுடன், பறந்து வந்து மைதானத்தில் உள்ள நந்தியாவட்டை மரம் மேல் அமருகின்றன. ஓவியாவும், அவள் நண்பர்களும், தாத்தாவும் ஆச்சரியப்படுகின்றனர். கனவில் நடந்தது அப்படியே நடப்பதை எண்ணி மகிழ்கின்றனர். ஆண்டுவிழாவில் இந்த நிகழ்ச்சியையே, சிறப்பாக செய்து, சிறப்பு விருந்தினரான மாவட்ட ஆட்சியரை மகிழ்ச்சியுறச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்றனர்.
இவர்களின் செயல்களை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். அவன் ஓவியா குழுவினரின் திட்டங்களை மழுங்கடிக்க முயல்கிறான். அந்த மாணவன் ஏற்படுத்தும் சவால்களை ஓவியா குழுவினர், தாத்தாவின் உதவியுடன் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்த சவால்கள், கற்ற பாடங்கள் என நீண்டதொரு நாவலாக விரிகிறது ஒற்றைச் சிறகு ஓவியா புத்தகம். சிறார் இலக்கியத்தில் முக்கிய புத்தகமான கயிறு புத்தகம் எழுதியுள்ள விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச் சிறகு ஓவியா, மற்றொரு சிறகை நமக்களித்து உடன் பறக்க வைக்கிறாள்.