

எழுதுதல் என்பது குழந்தையின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் முக்கியமான அடிப்படை திறன் ஆகும். ஏனெனில், குழந்தைகளின் எண்ணங்கள், யோசனைகள் மற்றும் உணர்வுகளைத் திறம்பட வெளிப்படுத்த அனுமதிக்கும் ஓர் அடிப்படைத் திறன் ஆகும். இத்தகைய எழுத்துத் திறனை ஆரம்பப்பள்ளியில் இருந்தே வளர்ப்பதற்கு ஊக்குவிப்பதும் ஆதரவளிப்பதும் அவசியம். எப்படி? அன்றாட அனுபவங்கள் அல்லது எண்ணங்களைப் பற்றி எழுதக்கூடிய ஒரு நாட்குறிப்பை பராமரிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஆக்கபூர்வமாக தங்களை வெளிப்படுத்தவும் உதவும். இது சுயவெளிப்பாட்டை வளர்ப்பதுடன், அவர்களின் திறன்களில் நம்பிக்கையை வளர்க்கவும் அனுமதிக்கிறது.
குழந்தைகளின் டைரிகள் சுவாரஸ்யமானவை. குழந்தைகளின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை அறியச் செய்பவை. " நான் காலை வணக்கம் சொன்னேன். எங்க சார் யோசனையில் இருந்தார். சார் வழக்கமான சிரிப்புடன் எனக்கு வணக்கம் சொல்லவில்லை. கடவுளே,நாளை எப்போதும்போல் சிரித்தமுகத் துடன் எங்களுக்கு சார் வணக்கம் சொல்லணும். சாருக்கு கவலை இருந்தா, நீக்கிடு. நல்லா ஆக்கிடு. எங்க சார் மனசுக்கு கவலையே வரக்கூடாது. கடவுளே சாருக்கு கவலையைக் கொடுக்காதே."
இந்தமாதிரியான நாட்குறிப்புகள் குழந்தைகளின் மனசை அறியச் செய்பவை. குழந்தையை முந்திக் கொண்டு சிரித்த முகத்துடன் வணக்கம் கூற வழிகாட்டியவை. குழந்தைகளிடையே எழுதும் திறனை வளர்த்தெடுக்கப் பள்ளி அளவில் பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்யலாம். அதன்மூலம் தங்கள் கற்பனையை ஆராய்ந்து கதை, கவிதை, கட்டுரை போன்ற பலவகை எழுத்து வடிவங்களை எழுதப் பழகுவார்கள். இதன் தொடர்ச்சியாக வகுப்பளவில் ஒரு சிறு இதழை வெளிக்கொணரலாம். ஒரு வகுப்பில் தொடங்கப்படும் இதழ், ஒவ்வொரு வகுப்புக்கும் பரவும். பின்பு, பள்ளியிலுள்ள படைப் பாளிகள் அனைவரையும் இணைத்து பள்ளிக்கெனத் தனி இதழை உருவாக்க வழிகாட்டலாம். எழுதும் திறனை வளர்ப்பது என்பது அவர்கள் மீதான சுயவிமர்சனம் மற்றும் சமூகத்தின் மீதான விமர்சனத்தை ஆழமாக வெளிப்படுத்தும் திறனை வளர்த்தெடுக்க உதவும்.
செம்மையாகும் எழுத்துத் திறன்: மாணவர் படைப்புகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்ப மின்னஞ்சல் உருவாக்குவது குறித்து கற்றுத்தரலாம். இது குழந்தைகள் எழுதுதல் திறனை செம்மையாக்கும். தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கு வார்த்தை புதிர்கள் மற்றும் வார்த்தைகளை உருவாக்குதல் போன்ற விளையாட்டு முறைகள் வழியாக எழுத்துவதற்கு கற்றுத் தருதல் வேண்டும். இது, ஆரம்ப நிலை குழந்தைகளை ஈடுபாட்டுடன் எழுதச் செய்வதற்கு ஊக்குவிக்கும். வகுப்பறைகளில் பாடக் கருத்துக் களை நாடகமாகவோ, கதையாகவோ எழுத செய்வதன் வழியாக எழுத்துத் திறனை மேம்படுத்தலாம். நாடகம் அல்லது கதை உருவாக்கத்தை குழு செயல்பாட்டாகச் செய்யலாம். இதனால் எழுத்துத் திறன் மேம்படு வதுடன், எதிர்கால கல்வி தேவைகள் மீதான பற்றையும் அதிகரிக்கலாம்.
மேம்படும் விமர்சன திறன்: இப்படி எழுதும் திறனை வளர்த் தெடுப்பதன் வழி, அனைத்து பாடங்களிலும் வலுவான வெற்றியை பெறச் செய்யலாம். குழந்தைகள் தங்கள் எண்ணங்களை ஒழுங்கமைத்து, விமர்சன சிந்தனையுடன் திறம்பட பல்வேறு தலைப்புகளை புரிந்து கொண்டு எழுதுவதற்கு எழுத்துத் திறன் உதவுகிறது. இதனால், அவர் களின் விமர்சன சிந்தனை திறன் மேம்படுகிறது. எழுதும் திறன் ஆனது குழந்தைகளின் சிக்கலை தீர்க்கும் திறன்களை ஒருமைப்படுத்தும், நினைவகத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும், பாடக்கருத்தின் மீது புரிதலை அதிகப்படுத்தி, புரிதலை ஆழமாக்கி செழுமையாக்கும். ஆகவே, குழந்தைகளை எழுதுவதற்குப் பழக்கப்படுத்துவோம் அன்பாசிரியாராக உயர்வோம்.
- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.