

கருக்கலிலே எழுந்து நீதிராஜனை அழைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றார் நிலவழகன். கடும் உழைப்பாளி நாம் தான் சரியாக படிக்கவில்லை. நம் பிள்ளையை பட்டணத்தில் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவில் இருந்தார். பள்ளியில் சேர்க்க பட்டணம் புறப்பட்டார். பள்ளிக்குப் போகமாட்டேன் ஆடு, மாடு எல்லாம் அழும் என்று அடம்பிடித்தான் நீதிராஜன். ஆடு, மாடு எங்கும் போகாது. நீ படிச்சுட்டு வந்து கால்நடைகளை பராமரிக்கும் மருத்துவர் ஆகி அவற்றை நேசிக்கலாம் என்றார் அப்பா. நீதிராஜனுக்கோ மண் மீது ஆசை. வயலில் மாடுகளோடு உழ வேண்டும். ஆடு, மாடு மேய்க்க வேண்டும். அதனால் பள்ளிக்கு போகவில்லை. விலங்குகளோடு விலங்காய் சுற்ற ஆரம்பித்தான்.
ஒருநாள் அவன் வயலில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தபோது சத்தம் கேட்டு எழுந்தான். ஓ மாட்டுக்காரா எழுந்திரு என்று ஒரு குறும்பு மாணவன் சொன்னான். அதைக் கேட்டதும் மிகவும் வருந்தினான். மாணவர்கள் சீருடையில் களப் பயணமாக விவசாயம் செய்வதை பார்க்க வந்தார்கள். ஒருவரோடு ஒருவர் மகிழ்ந்து விளையாடியதைப் பார்த்து ஏங்கினான். அப்பா பள்ளிக்கு போகச் சொல்லி எவ்வளவோ கெஞ்சியும் ஆடு, மாடுகளுடன் காலத்தை கழித்து விட்டோமே என்று வருந்தி தந்தையிடம் நான் பள்ளிக்குச் செல்கிறேன் என்றான். அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது. நீ படிக்காவிட்டால் உன்னை விலங்குக்கு சமமாக நினைப்பார்கள். கல்லாதவரும் விலங்கும் ஒன்று தான் என்பதை புரிய வைத்தார். இதோ வந்து விடுகிறேன் என்று விலங்குகளிடம் விடைபெற்று வந்தான். வளர்த்த விலங்கினங்கள் ஏக்கத்தோடு பார்த்து விடை கொடுத்தன.
விலங்கோடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனை யவர். - குறள்: 410
அதிகாரம்: கல்லாமை
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்