

ஆற்றங்கரை ஓரம்தான் மனித நாகரிகம் வளர்ந்ததுன்னு சொல்றாங்க இல்லையா. அதுக்கு நல்ல உதாரணம் எகிப்திய நாகரிகம். இதுக்குக் காரணமா இருந்தது நைல் நதி. இதுதான் உலகத்திலேயே நீளமான நதின்னு சொல்றாங்க.
சார்…அமேசான் ஆறுதான் மிக நீளமானதுன்னு எங்கயோ படிச்ச மாதிரி ஞாபகம். நீங்க நைல் நதின்னு சொல்றீங்க?
பரவாயில்லையே நிறைய படிக்கிறீங்க போல இருக்கு… நல்லது. ஒரு விதத்துல நீங்க சொல்றதும் சரிதான்.
அது எப்படி, அளவுங்கறது ஒண்ணாதானே இருக்க முடியும்? நீங்க சொல்றது சரிதான். விஷயம் அது இல்லை. ஆற்று நீளத்தைக் கணக்கிடும்போது சில குழப்பங்கள் இருக்கு. எந்த முனையில் இருந்து எந்த முனை வரைக்கும் அளப்பது, பிரதான ஆறு – கிளை ஆறு எங்கே பிரிப்பது இப்படி நிறைய. இது மட்டும் இல்லை… ஒரு நதியோட அடிப்படை குணம் என்ன? தண்ணி இருக்கணும்.
ஆமாம். அதுவும் ஒரே இடத்துல தேங்கி நிற்கக் கூடாது. ஓடணும். அப்படிப் பாயும்போது பெரும்பாலும் ஒரே பாதையில்தான் பயணிக்கும். ஆனால், சில சமயங்களில் இடையிலே ஏதும் தடை இருந்தால், ஆறு தனக்கான பாதையைத் தானே தீர்மானித்துக் கொள்ளும். அப்போ ஆற்றினுடைய நீளம் மாறுபடும்.
கூடலாம் அல்லது குறையவும் செய்யலாம். இன்னொரு ஆபத்து என்னெனா ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டறாங்க இல்லையா. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாமலே போயிடலாம். அப்போ, தண்ணி போகாத வழிகள்ல புதர்கள் முளைச்சிடும். வேற எதேனும் ஆக்கிரமிப்பு நடந்துரலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறந்து விடறப்ப முன்னர் இருந்த பாதையில அங்கங்கே மாற்றம் இருக்கத்தான் செய்யும். இதே மாதிரி இன்னொரு அம்சமும் பார்க்கணும்.
வெறுமனே ஆற்றினுடைய நீளம் மட்டுமே கணக்குப் பண்ணா போதாது. ஆற்றில் எவ்வளவு தண்ணீர் பாய்கிறது என்பதையும் பார்க்கணும். நமக்கு நல்லா தெரியும். இந்தியாவுல இமயமலை நதிகளில் எப்பவும் தண்ணீர் ரொம்ப அடர்த்தியா வெள்ளப் பெருக்காவே இருக்கும். இதேபோல தென்னிந்தியாவுல, நம்ம தமிழ்நாட்டுல இருக்குற ஆறுகள்ல தண்ணீர் எப்படி பாயுது? அநேகமா அடக்கமா...அமைதியா… அப்படித்தானே. அமைதியான நதியினிலே ஓடம். கேட்டு இருக்கோம் இல்லை… இதுவே உலகில் சில ஆறுகள், சத்தமா பாயும்.. வேகமும் அதிகம் இருக்கும். கொள்ளளவும் அதிகமா இருக்கும்.
நைல் நதியைப் பொருத்த மட்டும் அது நம்ம ஊரு நதியைப் போல குறைந்த தண்ணீரையே கொண்டு செல்கிறது. ஆறுகள் பற்றிப் படிக்கறப்போ, இதை எல்லாம் மனசுல வச்சிக்கணும்.
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com