

மனஅழுத்தத்தைக் கையாள அதன் காரணத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் அறிந்து, அதனைக் குறைக்கலாம் என்று கடந்த வாரம் சொன்னீர்கள் சார். நேரமேலாண்மை போன்ற நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற சிக்கல்களுக்கு நீங்கள் கூறியது பொருந்தும். உறவுகளை இழத்தல் போன்ற நமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளவற்றால் ஏற்படும் மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள்வது? என்று வினவினாள் அருட்செல்வி. பூங்கொடி அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தை. கல்லூரியில் படிக்கிறாள். மாலையில் கல்லூரி முடிந்ததும் தணிக்கையர் அலுவலகம் ஒன்றில் கணினியில் தட்டச்சராகப் பணியாற்றுகிறாள். வேலை செய்து முடித்ததும் தான் தங்கியிருக்கும் இடத்திற்குத் திரும்பி பாடம் படிப்பாள், தனது தனிப்பட்ட வேலைகளிலும் ஈடுபடுவாள்.
துக்கத்தை கடந்தவள்: இவ்வாறு, ஒரு நாளில் குறைந்தது 16மணிநேரம் உழைக்கும் பூங்கொடி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பாள். முகத்தில் புன்னகை இருக்கும். அவளோடு பழகுகிறவர்களுக்கு, கரோனா பெருந்தொற்றில் தன் பெற்றோரை இழந்தவள் அவள் என்பது தெரியாது. அந்த இழப்பைப் பற்றி யாரிடமும் எப்பொழுதும் அவள் பேசியதே இல்லை. எப்படி பூங்கொடியால் அவ்வாறு இருக்க முடிகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று வினவினார் ஆசிரியர் எழில். பூங்கொடி தன் பெற்றோர்களை மறந்துவிட்டாள் என்றான் அழகன் சற்று கோபமாக. மறந்திருக்க மாட்டாள். அவர்கள் இப்பொழுதும் தன்னுடனேயே இருப்பதாக நினைத்துக்கொள்கிறாள் என்றாள் மதி.
மதி, நீ நிறையக் கதைகள் படிக்கிறாய் என நினைக்கிறேன் என்று அவளைக் கிண்டல் செய்தான் முகில். காலம் அவளது காயத்திற்கு மருந்திட்டு இருக்கிறது என்றாள் மணிமேகலை புன்னகையோடு. நடந்தது நடந்துவிட்டது எனத் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றான் சாமுவேல். இக்கட்டு வரும்பொழுதெல்லாம் என் பாட்டி, ‘இதுவும் கடந்து போகும்’ என்று அந்த இக்கட்டை ஏற்றுக்கொள்வார். அதேபோல, பூங்கொடியும் தன் பெற்றோரின் இழப்பையும் ஏற்றுக்கொண்டு, அதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தைக் கையாண்டிருக்கிறாள் என நினைக்கிறேன் என்றாள் பாத்திமா சற்று விளக்கமாக. இவர்கள் சொன்னதெல்லாம் சரியா என்பதை பூங்கொடிதான் சொல்ல வேண்டும் என்றான் சுடர் ஆசிரியர் எழிலைப் பார்த்து.
பாரத்தைக் குறைத்தது எது? - பூங்கொடி தன் பெற்றோர் இருவரையும் குறுகிய கால இடைவெளியில் இழந்ததால் மனமுடைந்துவிட்டாள். இறப்புகளின்பொழுது உடனிருந்து ஆறுதல் கூறியவர்கள், சிறிது நாள்களில் அவரவர் பிழைப்பைப் பார்க்கப் போய்விட்டனர். தனித்துவிடப்பட்ட பூங்கொடி, சாமுவேல் சொன்னதைப்போல இறந்துபோன தன் பெற்றோர் இனி மீண்டுவர மாட்டார்கள்; தனது வாழ்க்கையை தான் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தாள். பாத்திமா சொன்னதைப்போல, ‘இதுவும் கடந்துபோகும்’ என்று தனக்கு ஏற்பட்ட இழப்பை ஏற்றுக்கொண்டாள். அது அவளுக்கு பெரும் பாரத்தை இறக்கி வைத்ததைப்போல் இருந்தது.
தனது படிப்பை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக் கூடாது என முடிவுசெய்தாள். தனது வாழ்க்கைக்கும் படிப்பிற்கும் தேவையான பணத்தை தானே உழைத்துத் திரட்டுவதற்காக தணிக்கையர் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தனது ஊதியத்திற்குள் வாழ, தனது தேவைகளைச் சுருக்கிக்கொண்டாள். தனது காலில் நின்று, தன்னைப்பற்றிய தன் பெற்றோரின் கனவுகளையும் தனது கனவுகளையும் நிறைவேற்ற முனைகிறாள். அதனால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றார் எழில். அதாவது, தனது மனஅழுத்தத்திற்குக் காரணம் தன் பெற்றோரின் இழப்பு என்பதை அறிந்து அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாள். அந்த இழப்பு தன்னை ஆழமாக பாதிக்க அனுமதித்தால் கல்வியை கைவிடும் நிலை உண்டாகும் என்பதை உணர்ந்திருக்கிறாள். அதனைக் குறைக்கபகுதிநேர வேலைக்குச் சென்று மனஅழுத்தத்தைக் கையாண்டிருக்கிறாள். இல்லையா என்று வினவினான் அருளினியன். ஆம் என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர். தொடர்புக்கு: ariaravelan@gmail.com