கழுகுக் கோட்டை 22: இரவில் வந்த புரவி வீரர்கள்

கழுகுக் கோட்டை 22: இரவில் வந்த புரவி வீரர்கள்

Published on

அரண்மனைக்குத் தூதுவனாக சென்று, திருத்தோன்றியின் ஆட்களின் கண்களில் மண்ணைத் தூவி, காட்டிற்குள் புகுந்து தப்பித்துத் தன் சொந்த ஊருக்குச் சென்றான் குணபாலன். அங்கு அவனைக் கண்ட அவனது பெற்றோர், தங்கை, உறவினர், ஊராருக்கு ஒரு கணம் திகைத்துப் போனார்கள். அவனை திருச்சேந்தியின் ஆட்கள் கொன்று போட்டிருப்பார்கள். அவன் திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென அவன் அங்கு சென்றதும் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.

அங்கு கூடி இருந்த கூட்டத்தினரைப் பார்த்து குணபாலனின் தந்தை, எனது மகன் குணபாலன் உயிருடன் வருவான் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. எல்லாம் இறைவனின் திருவிளையாடல். அத்துடன் உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் கூட. உங்கள் நல்ல எண்ணங்களே அவனை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. மேலும் குணபாலன் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இப்போதுதான் வந்துள்ளான். எனவே பரபரப்பைக் கூட்டாமல் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றார். அவரது பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட குணபாலன், என் மேல் நீங்கள் அனைவரும் இத்தனை அன்பு வைத்துள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படிப்பட்ட உங்களுக்காக நான்சாகத் துணிந்ததில் தவறு ஏதும் இல்லைதான்.

மேலும் ஒரு விஷயத்தை உங்களிடம் அன்புக் கட்டளையாக நான் வைக்கிறேன். தென்திசைப் பாளையத்துக்காரரான திருச்சேந்தியின் பார்வை என்மேல் விழுந்துள்ளது. சொல்லப்போனால் அவரது ஆட்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்துள்ளேன். எனவே, நான் இங்கு வந்துள்ளது ரகசியமாகவே இருக்கட்டும். இன்னும் சில நாட்களில் நான் இங்கிருந்து சென்றுவிடுவேன். எனக்கு செய்யவேண்டிய கடமைகள் இன்னும் நிறைய இருக்கிறது என்றான். குணபாலனின் தந்தையும் குணபாலனும் அவ்வாறு பேசியதைக் கேட்டதும் அங்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். மேலும், குணபாலன் அங்கு வந்ததை ரகசியமாக வைத்திருப்போம் என்றும் உறுதியளித்துச் சென்றனர்.

அங்கு எஞ்சியிருந்தவர்கள் குணபாலனின் நண்பர்கள் ஆவர். அவர்களில் ஒருவன், குணபாலா, நீ என்ன சொல்கிறாய்? நீ திரும்பி வந்ததும் எங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது! ஆனால், அந்த மகிழ்ச்சியை நீடிக்கவிடாமல் இப்படி ஒரு செய்தியை சொல்கிறாயே? என்றான். அவனுக்குப் பதிலளித்த குணபாலன், சுந்தரா, கவலைப்படாதே எனக்கு ஒன்றும் ஆகாது. இப்போது மக்கள் புரட்சிப்படை இயக்கத்துடன் தொடர்பில் உள்ளேன். தொடக்கத்தில் அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்றே நினைத்து வெறுத்திருந்தேன். ஆனால், எனது உயிரைக்காத்து, எனக்குப் பல உதவிகள் செய்தவர்கள் அந்த புரட்சிப்படை இயக்கத்தினரே. எனவே, அவர்களுக்கு எனது உதவி தேவைப்படுகிறது.

அவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்துவிட்டு விரைவில் நான் ஊர் திரும்பி வருவேன். அப்படி நான் வரும் வேளையில் இப்போது இருக்கும் பல கொடுமையான சட்டங்களை ஒழித்துவிட்டுத்தான் திரும்பி வருவேன் என்றதும் அவனது நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இப்படியாக நாட்கள் உருண்டோடி சில மாதங்களும் கடந்தன. ஓர் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான் குணபாலன். வானத்தில் முழு நிலா அவனிடம் ஏதோ பேசியது போல உணர்ந்தான். ஒரு நிமிடம் அந்த நிலவில் சிலரது முகம் வந்துபோனதாக உணர்ந்தான். அது இளவரசியின் முகமா? அல்லது அவளது தோழியின் முகமா? என்று குழப்பமாகவும் இருந்தது. ச்சீச்சீ… இது என்ன கற்பனை என்று தன்னைத் தானே கடிந்துகொண்ட குணபாலனுக்கு மக்கள் புரட்சிப்படை இயக்கமும் கழுகுக்குஞ்சுகளும் அதை வளர்த்துவர தான் நியமித்து வந்த செப்படிவித்தைக்காரன் தத்தனும் நினைவில் வந்து சென்றனர்.

அந்தக் கழுகுக்குஞ்சுகள் இப்போது வளர்ந்து பெரிய கழுகுகளாய் ஆகி இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். அவனது சிந்தனையைக் கலைத்தவாறு நான்கு திசைகளில் இருந்தும் குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. குணபாலனுக்கு திக்கென்று ஆகிவிட்டது. குணபாலனின் வீட்டை நான்கு புறங்களிலிருந்தும் குதிரைகளில் வந்த வீரர்கள் சூழ்ந்தனர். அனைவர் கையிலும் இருந்த தீப்பந்தங்கள் அந்தப் பகுதியையே வெளிச்ச வெள்ளத்தில் மூழ்கடித்தது. வீட்டின் வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் நன்றாகப் போர்த்தித் தூங்கிக்கொண்டிருந்த உருவத்தை நெருங்கிச் சூழ்ந்து நின்றனர். குதிரையிலிருந்த அனைவரது கூர் வேலும் கட்டிலில் படுத்திருந்த உருவத்தைக் குறிவைத்து நின்றது.

- தொடரும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in