

பாடப்புத்தகக் குழுவில் பங்கெடுத்து, மாநிலப் பயிற்சிகளில் கலந்துகொண்டு, பயிற்சியாளராகச் செயல்பட்டு மீண்டும் நான் பள்ளிக்கே பணிபுரிய வந்த காலம் அது. குழந்தைகளின் இயல்புகளுக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். அவர்களிடம் அன்பாகப் பழக வேண்டும். அவர்களிடம் கருத்துகள் கேட்க வேண்டும்... போன்ற சிந்தனையில் நம்பிக்கை வைத்து என் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முயன்றேன். பல வருடங்களுக்குப் பிறகு ஏழாம் வகுப்பில் தமிழ் கற்பிக்க வேண்டும். ஜூன் மாதம் முதல் நாள் பள்ளி திறந்தது. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்களைப் பற்றி விசாரித்தேன். தேவையான குறிப்பேடுகளின் தகவல்கள் கூறினேன். இரண்டாம் நாள் மாணவர்களின் பெயர்கள் எழுதிய தாள் என் கையில் இருந்தது.
ஒவ்வொரு பெயருக்கும் நேராக மோசம், பரவாயில்லை, சிறப்பு என்ற தலைப்பில் மூன்று கட்டங்களும் வரைந்து வைத்திருந்தேன். மாணவர்களுடைய வாசிப்புத் திறனை அளப்பதே என் நோக்கம். பாடப்புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து ஏதேனும் ஒரு பத்தியை வாசிக்கச் சொன்னேன். அதைக்கேட்டு... எங்களையெல்லாம் வாசிக்கச் சொல்கிறாயே! உனக்கென்ன பைத்தியமா? என்று கேட்பது போலிருந்தது அவர்களின் பார்வை. முப்பத்தியெட்டு பேரில் ஐந்தோ ஆறோ பேரைத் தவிர மீதியுள்ளவர்கள் வாசிக்க மிகவும் சிரமப்பட்டார்கள். நான் வேறு வகுப்புகளில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தேன். கரும்பலகையில் எழுதியவற்றை பார்த்து ஒரு குழந்தை ஒவ்வொரு எழுத்தாக வாசிக்க, வகுப்பிலுள்ள மொத்தக் குழந்தைகளும் அந்த எழுத்தை உரக்கக் கூவிக்கொண்டிருந்தார்கள். ஐந்தாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் இதே வேலைதான் நடந்துகொண்டிருந்தது. சென்ற வருடமும் ஜூன் மாதத்தில் இந்தச் செயல்பாட்டை நடத்தியிருப்பார்களே. அப்படியானால் அது பயனளிக்கவில்லை என்றுதானே பொருள்.
வேறு என்ன செய்வது? - என்ன இருந்தாலும் என் வகுப்பில் அப்படி செய்ய மாட்டேன் என முடிவுசெய்தேன். அவர்களுடன் சிரித்துப் பேசி, சினிமாக்கதை பேசி, அவர்களுடன் மாலை நேரத்தில் விளையாடி, சாப்பிட்டு... என அவர்களின் நம்பிக்கையைப் பெற்றேன். இவரிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம். எந்தப் பிரச்சினையும் வராது என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று பலவேளைகளில் எங்களுக்குள் நடக்கும் கலந்துரையாடலில் இருந்து புரிந்துகொண்டேன். ஒருநாள் பேச்சின் நடுவே ஏம்பா... திரைப்பட வசனங்களை அழகா பேசுறீங்க, சில திரைப்படப் பாடல்களை முழுமையாக பாடுறீங்க. அப்புறம் ஏன் எழுத்துகளை மட்டும் உங்களால் கத்துக்க முடியலை என்று எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்தோடு கேட்டேன்.
பூட்டப்பட்ட மனம்: ஒரு மாணவன் சட்டென ஒன்றாம் வகுப்பிலும் இரண்டாம் வகுப்பிலும் இப்படித்தானே சொல்லிக் கொடுத்தாங்க. அப்பவே எங்களால படிக்க முடியலையாம். இப்ப மட்டும் படிக்க முடியுமா? என்று கேட்டான். எனக்கு முகத்தில் அறைந்தாற்போலிருந்தது. அந்த பதிலைச் சட்டெனகூறியதிலிருந்தே அவர்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் என்பது புரிந்தது.எல்லாவற்றையும்விட அனுபவங்களிருந்து கருத்துகளை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதும் எத்தனை நிஜம். எழுத்தட்டவணையைப் பார்த்து எழுத்துகளை உரக்கச் சொல்வதால் எவ்விதப் பயனும் இல்லை. இதொரு பயனற்ற செயல்பாடு என்று முடிவு செய்து அதில் எவ்வித ஈடுபாடும் காட்டாமல் இருக்கிறார்கள். அல்லது ஆசிரியரின் மிரட்டலுக்கும் திட்டலுக்கும் பயந்து ஈடுபடுவது போல் நடிக்கிறார்கள். மனத்துக்கு ஒரு பெரிய பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டார்கள். ஒருவரின் புரிதல் எப்படியோ அப்படியே அவர்களின் செயல்பாடுகள் அமையும்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in