

காலைல தூங்கி எழும்போதே நவீனுக்கு நல்ல குளிர் காய்ச்சல் டாக்டர். உடனே ஒரு காய்ச்சல் மாத்திரையைக் குடுத்துட்டு, அவனோட ஸ்கூல் மிஸ்ஸுக்குப் ஃபோன் பண்ணா அவனை மூணு நாள் லீவ் எடுக்க சொல்றாங்க. ஆனா அரையாண்டு தேர்வு நடக்கறதால ஸ்கூலுக்குப் போயே தீரணும்னு நவீன் அடம் பிடிக்கறான். உண்மையில இந்தக் காய்ச்சல் நோய் எதனால வருது டாக்டர்? இது வராம தடுக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நவீனின் தாயார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தாலே பருவமழையும் அதன் தொடர் தாக்கத்திற்குப் பிறகு திரும்பிய பக்கமெல்லாம் காய்ச்சல், சளி, இருமலும் என்பது எழுதப்படாத விதி எனலாம். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி செல்லும் குழந்தைகள்தான். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன், காய்ச்சல் என்றால் என்ன, அது உண்மையிலேயே ஒரு வியாதி தானா? அது எப்போது, ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
மனித உடலின் வெப்பநிலை ஃபாரன்ஹீட்(°F) அல்லது செல்சியஸ் (°C) என்ற அளவீடுகளைக் கொண்டு அளக்கப்படுகிறது. நமது உடலின் இயல்பு வெப்பநிலை 98.6°F அல்லது 37°C. உடலின் வெப்பநிலை இந்த அளவைக் காட்டிலும் அதிகரிப்பதைத் தான் காய்ச்சல் என பொதுவாக அழைக்கிறோம். இயல்பாகவே நமது உடலின் வெப்பநிலை அதிகாலையில் (6 மணியளவில்) அதாவது நல்ல ஓய்வுக்குப் பிறகு சற்று குறைந்தும், மாலைப்பொழுதில் (4-5 மணியளவில்) அதாவது விளையாட்டு அல்லது பணிகளுக்குப் பிறகு, சற்று அதிகமாகவும் காணப்படும்.
உடலின் இந்த வெப்பநிலையை, நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் செரிமானம், அத்துடன் தைராய்டு, அட்ரீனலின், கார்டிசோல் போன்ற நமது நாளமில்லா சுரப்பி ஹார்மோன்கள், நமது தசைகளின் பயன்பாடு, உடலின் கொழுப்புச்சதையின் அளவு மற்றும் நமது உடலின் Basal Metabolic Rate எனப்படும் வளர்சிதை மாற்றங்கள் நிர்ணயிக்கின்றன. உடல் வெப்பத்தை இவையெல்லாம் நிர்ணயித்தாலும், நமது மூச்சு, வியர்வை, சிறுநீர் மற்றும் தோலின் பரப்பளவு போன்றவை உடல் வெப்பத்தை சமமாக வைக்க உதவுகின்றன.
அதாவது, உடலின் கூலிங் சிஸ்டங்களான இவை அனைத்தும், தனியாகவோ, ஒன்றோடு ஒன்று இணைந்தோ, நம் உடலின் வெப்பநிலை அதிகமாகும்போது அதிகம் இயங்கியும், வெப்பநிலை குறையும்போது குறைவாக இயங்கியும், Conduction, Convection Radiation என நாம் நன்கறிந்த வெப்பம் கடத்துதல், வெப்பச்சலனம் மற்றும் வெப்பம் ஆவியாதல் ஆகியவற்றின் வாயிலாக உடல் வெப்பத்தை ஒருசீராக வைக்க உதவுகின்றன. ஆனால், இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் வைத்திருப்பது எது தெரியுமா?
நமது மூளை என்ற தலைமைச் செயலகத்தின் ஹைப்போதலாமஸ் பகுதியில் உள்ள வெப்பநிலை சென்சார்கள் தான் (Thermal Sensors). இதன் காரணமாகவே இந்த ஹைப்போதலாமஸ் உயிரியல் வெப்பமானி (Biological Thermometer) என்றே அழைக்கப்படுகிறது.
(காய்ச்சல் குறித்த ஆலோசனை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com