

ப்ளோரன்ஸ் மாகாண அரண்மனைத் தோட்டத்தில் இருந்த பழமையான ரோம் நாட்டு சிற்பங்களை அச்சிறுவன் ரசித்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த ஃபான் (Faun) முகமூடிச் சிற்பம் அவனைக் கவர்ந்தது. ஆட்டின் உடலும் மனிதத் தலையும் கலந்த கலவையாகக் காட்சியளிக்கும் ஃபான், ரோமத் தொன்மத்தில் வரும் மாய விலங்கு. அதைப் பார்த்த சிறுவன் என்ன நினைத்தானோ, தீடீரென அதன் பற்களை வெட்ட முயன்றான். பின்னால் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தான். அவனருகில் ப்ளோரன்ஸ் நாட்டு மன்னர் லோரன்ஸொ நின்றுகொண்டிருந்தார்.
சிற்பத்தை என்ன செய்கிறாய் என்று அவர் அதட்ட, “இந்த ஃபானுக்கு வயதானமுகத்தோற்றம் இருக்கிறது. ஆனால், இதன் பற்கள் இளமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் பொலிவாக உள்ளன. அதனால்தான் இதன் பற்களை வெட்டுகிறேன்” என்றான் அச்சிறுவன். மன்னர் அசந்துபோனார். இச்சம்பவம் நடந்தபோது வெறும் 14 வயது பாலகன் அவன். இந்த வயதில்இத்தனை முதிர்ச்சியா என்று ஆச்சரியப்பட்டார். மைக்கலாஞ்சலோ எனும் பெயர்,பிற்காலத்தில் புகழ்பெற்ற சிற்பியாகவும் ஓவியராகவும் கவிஞராகவும் நினைவுகூரப்படும் என ஊகித்து அச்சிறுவனை அரண்மனையில் வைத்துக் கொள்ள முடிவுசெய்தார் மன்னர். மைக்கல் வாழ்க்கை அந்நொடிமுதல் புதிதாகச் செதுக்கப்பட்டது.
இளமையில் ‘கல்’ - இத்தாலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில்,லுடோவிகோ என்பாருக்கு மகனாக கி.பி. 1475ஆம் ஆண்டு மைக்கலாஞ்சலோ பிறந்தார். மைக்கல் பிறந்தவுடன் தன் தாயைஇழந்தார். எனவே பராமரிக்க ஆள் இல்லாததால் ஒரு சிற்பியின் வீட்டிலிருந்து வளரத் தொடங்கினார். கல்வி கற்க வேண்டிய வயதில் கற்கள், மார்பிள், ஓவியம் எனச் சுற்றினார். சில ஆண்டுகளுக்குப் பின் வீட்டிற்குத்திரும்பினாலும் மைக்கல்மனத்தில் ஓவியங்களும் சிற்பங்களும் நீங்காமல் நிறைந்திருந்தன. இரண்டொரு ஆசிரியர்களிடம் பாடம் பயின்று, இறுதியில் மன்னர் அரண்மனையில் இருந்த பழங்காலச் சிற்பங்களைக் கண்டு தாமாக சிற்பத்திறனை வளர்த்துக் கொண்டார்.
ரோம் பயணம்: லோரன்ஸொ இறந்த பிறகு, ஆட்சிக்கு வந்த அவர் மகன் கலைஞர்களைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் அரண்மனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பினார், மைக்கல். அக்காலச் சமூகத்தில் கிரேக்க – ரோமானியப் புராதனச் சிலைகளுக்கு நல்ல சந்தை மதிப்பு இருந்தது. எனவே புராதனமாகத் தோற்றமளிக்கும்படி பண்டையச் சிலை போல ஒன்றைத் தயாரித்து தன் நண்பர் உதவியால் ரோம் நகர் கார்டினலுக்கு விற்றுப் பணம் பார்த்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்டினல், மைக்கலை தண்டிக்காமல் ரோம் நகருக்கு அழைத்து வந்து அவர் திறமையை மெச்சினார். கிரேக்கத் தொன்மத்தில் வரும் மதுவின் கடவுள் பேக்கஸ் (Bacchus) சிலையை வடிவமைத்துத் தர வேண்டினார். இவ்வொற்றைச் சிலையால் ரோம் நகர் முழுவதும் மைக்கலின் புகழ் பரவியது.
பைபிள் கதைச் சிற்பங்கள்: மைக்கலுக்குத் தொன்மக் கடவுளர்களை வடிவமைப்பது அலுத்துப்போனது. பைபிள் கதாப்பாத்திரங்களை வடிவமைத்தால் என்ன என்று யோசித்தார். குவாரிலியிருந்து சரியானகற்களைத் தேர்ந்து வந்தார். ஒருநாளைக்கு ஒரு ரொட்டி வீதம் உண்டு, எந்நேரமும் சிலை செதுக்குவதில் கண்ணாக இருந்தார். ஓராண்டு காலம் விடாமல் உழைத்து, பியேட்டா (Pieta) சிலையை வார்த்து எடுத்தார். இச்சிலையில் அன்னை மரியாவின் முகத்தில் குடிகொண்ட சோக உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாதென்று ரோம் வாசிகள் மெச்சினார்கள். 1501ஆம் ஆண்டு ப்ளோரன்ஸ் திரும்பிய மைக்கல், தன் சொந்த ஊரில் தாவீது சிலையை வடிவமைத்தார். இச்சிலை ப்ளோரன்ஸ் மாளிகையில் காட்சிக்கு வைக்கப்படும் முன், இரவுப்பகலாக காவலாளிகளைப் பாதுகாக்கும்படி மன்னர் பணித்திருந்தாராம். இதிலிருந்து மைக்கலாஞ்சலோ சிற்பத்திறன் மீது மக்கள் கொண்ட மையல் தெரிகிறது.
(மைக்கலாஞ்சலோ புகழ் தொடரும்)
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com