போவோமா ஊர்கோலம் - 24: வர்ணஜாலம் காட்டி திகைப்பூட்டிய தால் ஏரி
# நகரின் கொள்ளை அழகு நம்மை பிரமிக்கவைத்தது. காஷ்மீர் என்றதும் பனி படர்ந்த பிரதேசம்தான் நினைவுக்கு வரும். ஆனால், நாம் சென்றது ஆகஸ்ட் மாதம், மொத்த காஷ்மீரும் பச்சைப் பசேலென காட்சியளித்தது.
# நகரில் எத்தனையோ சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் நமக்குத் பிடித்திருந்தது தால் ஏரிதான். ஸ்ரீநகரில் மத்தியில் அமைந்துள்ளது இந்த ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி செய்வதும், அங்கு படகிலேயே விற்கப்படும் காஷ்மீர் கைவினைப் பொருட்களும் ரொம்ப பிரபலம்.
அழகிய படகுகள்: ஒரு மாலை நேரம் தால் ஏரியில் படகு சவாரி செய்ய சென்றோம். மிகப்பெரிய ஏரி, அதன் பின்னால் மலைத்தொடர்கள். அவ்வளவு ரம்யமாக இருந்தது. காஷ்மீரைப் பொறுத்தவரை சுற்றுலா மிகப்பெரிய வருமானம். அப்படித்தான் இங்கும், சுற்றுலாப்பயணிகளை கவர விதவிதமான படகுகள். அத்தனையும் அழகாக இருந்தது. படகு சவாரி செய்வதோடு மட்டுமல்லாமல், அங்கேயே படகு வீடுகளும் இருக்கின்றன. பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் நாள் வாடகைக்கு இந்த படகு வீட்டில் தங்கி ஏரியின் அழகை ரசித்து வருகின்றனர். சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டே படகு சவாரி செய்யவேண்டும் என்ற ஆசை அன்று நிறைவேறியது.
வானத்தில் ஏற்பட்ட வர்ணஜாலங்களுக்கு ஏற்ப ஏரியின் நிறமும் மாறியபடியே இருந்தது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. சூரியனை மேகம் மறைக்கும் போது, அடர் ஊதா நிறத்திலும், சூரியன் வரும்போதெல்லாம் அந்த மாலை வேளையில் பொன் நிறத்தில் மொத்த ஏரியும் ஜொலித்துக்கொண்டு இருந்தது. இந்த தால் ஏரி நன்னீர் ஏரியாம். அதனால் அந்தப்பகுதி மக்கள் இந்த ஏரியை அசுத்தப்படுத்தாமல் பாதுகாத்து வருகிறார்கள். ஒரு மணி நேரப் படகு சவாரியில், பயணம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மொத்த ஏரியின் அழகும் வித்தியாசமாகத் தெரிந்தது. சின்ன சின்ன மரங்களும் ஏரிக்கு மேலும் மெருகூட்டின.
மிதக்கும் தேநீர் விடுதி: உள்ளூர் வாசிகளின் வீடுகளும் இந்த ஏரியிலேயே அமைந்திருக்கிறது. அவர்கள் தங்களது அன்றாட விஷயங்கள் அனைத்துக்கும் இந்த படகைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது இந்த ஏரி. ராணுவத்தின் ஒரு அலுவலகமும் ஏரியின் நடுவே உள்ளது. அதுபோல ராணுவ படகும் பாதுகாப்புப்பணியில் எந்நேரமும் ஈடுபட்டிருக்கிறது. படகிலேயே சிலர் காஷ்மீர் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சில படகுகள் நடமாடும், இல்லை இல்லை ‘மிதக்கும்’ டீ கடையாகவும் இருந்தன. காஷ்மீர் நினைவாக சில கைவினைப் பொருட்களை அங்கேயே வாங்கிக் கொண்டோம். சூரியன் அஸ்தமித்ததும் கரை வந்து செந்தோம்.
தால் ஏரி சுமார் 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஏரியின் கரை மட்டுமே பதினைந்து கிலோமீட்டருக்கு மேல் இருக்கிறது. கரை எங்கும் பூங்காக்கள், அந்த கரையில் அமர்ந்து பலர் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவரின் மூன்று வயது மகள் அடீபா எங்களோடு பாட்டுப்பாடி விளையாடத் தொடங்கினாள். குழந்தைக்கு மொழி தடையேது. அவளோடு சேர்ந்து நாங்களும் அந்த பூங்காவில் கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தோம். தால் ஏரியின் அழகைச் சொல்லிமாளாது. பச்சைப் படர்ந்த தால் ஏரியை ரசித்தாகிவிட்டது. அடுத்துப் பனி போர்த்திய காஷ்மீரை விரைவில் பார்க்கவேண்டும் என்று லடாக் நோக்கி புறப்பட்டோம்.
(பயணங்கள் முடிவதில்லை...)
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை. தொடர்புக்கு: bharaniilango@gmail.com
