

சென்னை மழை வெள்ளம் குறித்த செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. மின்சாரம் தடைபட, மறுபடியும் போய்டுச்சு என்று புலம்பியவாறு வந்த சுடர், திண்ணையில் குழலியைப் பார்த்ததும், உடன் அமர்ந்தான்.
குழலி: கொஞ்ச நேரம் மின்சாரம் இல்லாததுக்கே இப்படி அலுத்துக்கிற... குடிக்கத் தண்ணியும் சாப்பாடும் இல்லாம, மின்சாரமும் இல்லாம, வீடெல்லாம் வெள்ளக்காடா இருக்கிற மக்களப் பார்த்துமா...
சுடர்: நானும் செய்திகளத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன் குழலி. ரொம்பவே கஷ்டமாஇருக்கு. தண்ணியில இறங்கி பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்யறவங்களப் பார்க்கறப்ப நெகிழ்ச்சியா இருக்கு. அந்தக் காலத்துலயும் இப்படிப் பேரிடர்கள் வந்திருக்குமா...
குழலி: ஆமா சுடர் பெரு மழையால ஏரி, குளக் கரைகள் உடைஞ்சு மக்கள் வசிப்பிடங்களுக்குள்ள தண்ணீர் நுழைஞ்சு மக்களத் துன்புறுத்திடக் கூடாது, விளைநிலங்களுக்குள்ள புகுந்து விளைச்சலை நாசமாக்கிடக் கூடாதுன்னு அஞ்சி, கண்ணும் கருத்துமா நீர்நிலைகளக் காவல் காத்தாங்களாம்.
சுடர்: சங்க இலக்கியத்துல இருக்கா இந்தச் செய்திகள்லாம்..
குழலி: அகநானூறுல வர்ற பாட்டு. நக்கண்ணையார் எழுதினது. தன்னை வெளியில போகவிடாமத் தன் தாய் எப்படிப் பாதுகாத்துக்கிட்டு இருக்கான்னு தலைவன் கிட்டச் சொல்றா தலைவி. இதுக்கு உவமையா ஒரு வரி வருது.
எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (அகநானூறு 252)
பருவ மழை தொடர்ந்து பெய்ற நள்ளிரவுல, சிறிய கரையைக் கொண்ட பெரிய குளத்தைக் காக்கிற பணியைச் செய்றவர் எப்படி உறங்காமல் காவல் காக்கிறாரோ, அதைப் போல என் அம்மா கண் தூங்காமல் என்னைப் பாதுகாக்கிறான்னு சொல்றா அந்தத் தலைவி.
சுடர்: அழகான உவமை... அக இலக்கியத்துக்குள்ள சூழலியல் பார்வையை வைச்சு எத்தனை அற்புதமாக் கவிதை எழுதியிருக்காங்க.
குழலி: நம்ம இலக்கியங்கள் இயற்கைக்கு, சூழலியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருக்கு. சிலப்பதிகாரத்துலகூட இளங்கோவடிகள் கடவுள் வாழ்த்துக்குப் பதிலா இயற்கையைத்தான் வாழ்த்திப் பாடியிருக்காரு.
சுடர்: ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும்னு பாடினதச் சொல்றியா...
குழலி: அதே மாதிரி ‘உண்டாலம்ம'ன்னு தொடங்குற ஒரு புறநானூற்றுப் பாட்டு (பாடல் எண் 182) . கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதினது. இந்தப் பாட்டும் பொதுவியல் திணை, பொருண்மொழிக்காஞ்சித் துறையில அமைஞ்ச பாட்டுதான்.
சுடர்: நானும் படிச்சிருக்கேன். நல்ல பண்புடைய சான்றோர்கள், தேவர்களோட உணவான அமிர்தமே கிடைச்சாலும், அதைச் சாப்பிட்டா நீண்டநாள் வாழ முடியும்னு தெரிஞ்சும், மத்தவங்களுக்கும் கொடுத்துத்தான் சாப்பிடுவாங்களாம். யார் மேலயும் வெறுப்பில்லாம, அஞ்ச வேண்டிய பழிபாவங்களுக்கு அஞ்சித்தான் வாழ்வாங்களாம். ஒரு போதும் சோம்பலே இல்லாம உழைப்பாங்களாம். புகழ்தரக்கூடிய நல்ல காரியங்களா இருந்தா தங்களோட உயிரையும் கொடுத்து அந்த நல்லதைச் செய்வாங்களாம். பழி வரக் கூடிய காரியமா இருந்தா, இந்த உலகத்தையே கொடுக்கறதாச் சொன்னாலும், அந்தக் காரியத்தைச் செய்ய மாட்டாங்களாம். எப்பவும் தனக்காக மட்டும் வாழாமப் பிறருக்காவும் நன்மை செய்து வாழ்வாங்களாம். இவங்களப் போல சான்றோர்கள் இந்த உலகத்துல வாழ்றதுனால தான் இந்த உலகம் இன்னும் சுழலுதாம்.
குழலி: ரொம்பவே சரி. நம்மைப் பத்தி மட்டும் நினைக்காம மத்தவங்களுக்காகவும் சிந்திக்கிற பண்பை நம்மளப் போன்ற இளையவர்கள் கத்துக்கணும்...
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com