

கிராமப்புறங்களில் செல்லும்போது பிரமாண்டமான காற்றாடிகள் சுழன்றுகொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். அவற்றில் மோதும் காற்றைப் பயன்படுத்தி விசையாழியைச் சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சார உற்பத்தி முறையிலும் கார்பன் உமிழ்வு கிடையாது. ஆனால், காற்றாலை, சூரிய ஆற்றல் முறைகளில் வெறும் 7% மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. புதைபடிம எரிபொருள் அளவிலான மின்சாரம் நமக்குக் கிடைப்பதில்லை. காரணம், இந்தக் கட்டமைப்புகளை நிறுவுவதற்கு அதிக இடமும் நிதியும் தேவைப்படுகிறது. உதாரணமாக ஒரு சதுர கிலோமீட்டர் அளவில் அமைக்கப்படும் அனல்மின் நிலையத்திலிருந்து நாம் உற்பத்தி செய்யும் அதே அளவு மின்சாரத்தைக் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் நமக்குக் குறைந்தது 5000 சதுர கிலோ மீட்டர்கள் அளவிலான இடம் தேவைப்படும். இது சாத்தியமா?
அதேபோல அனல்மின் நிலைய மின்சார உற்பத்தியை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் சூரிய ஆற்றல், காற்றாலை மின்சாரத்தை கட்டுக்குள் வைக்க முடியாது. சூரிய ஒளி குறையும்போதும், காற்றின் வீச்சு குறையும்போது மின்சார உற்பத்தியும் குறையும். இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். உலகம் முழுவதும் சூரிய ஒளி விழுகிறது அல்லவா? அப்படியும் ஏன் வேண்டிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கிறது? அதுமட்டுமில்லாமல் சூரிய ஒளி இலவசமாக வேறு கிடைக்கிறது. இருப்பினும் அவற்றை மின்சாரமாக மாற்றுவதற்கு ஏன் அதிகம் செலவாகிறது? சூரிய ஒளி எல்லா இடங்களிலும் இலவசமாகக் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆ
னால் அவற்றைப் பெறுவதற்கு நாம் சூரிய தகடுகளையோ, சூரிய மின் நிலையத்தையோ எல்லா இடங்களிலும் அமைக்க முடியாது அல்லவா? நாம் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கும் இடத்தில் விழும் சூரிய ஒளியைப் பொறுத்துத்தான் மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். அதேபோல சூரிய ஒளி இலவசமாகக் கிடைத்தாலும் அவற்றை மின்சாரமாக மாற்றும் கருவிகளைத் தயாரிப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதிகம் செலவுபிடிக்கும். இதனால்தான் சூரியஆற்றல் வழி மின்சாரத்தையும், காற்றாலைகளையும் புதைபடிம எரிபொருளுக்கு மாற்றாக நம்மால் தேர்வு செய்ய முடியவில்லை. மின்சார உற்பத்தியில் வேறு சில கரிம நீக்க முறைகளும் செயல்பாட்டில் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு சூரிய, காற்றாலை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இருப்பினும் அவற்றையும் நாம் பயன்படுத்துவது குறைவாகவே இருக்கிறது. அவை என்னென்ன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com