

அமெரிக்காவின் கிராஸ்-லாண்ட்ஸ் மருத்துவமனை மற்றும் ப்ரூக்ளின் மருத்துவமனையில் கண்மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்ட பத்ரிநாத், அதிலும் சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்று, கண் மருத்துவத்தின் பெருமைமிக்க எஃப்.ஆர்.சி.எஸ்., மற்றும் அமெரிக்கன் போர்ட் ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றுத் தேர்ந்தார். அதனையடுத்து மிகவும் சிக்கலான, நுணுக்கமான விழித்திரை அறுவை சிகிச்சையில் தேர்ச்சிபெற விரும்பினார் டாக்டர் பத்ரிநாத். அதற்காக அமெரிக்காவின் தலைசிறந்த கண் மருத்துவரான பேராசிரியர் டாக்டர் சார்லஸ் ஸ்கெஃபின்ஸிடம் ஒருமுறை நேர்முகத் தேர்விற்குச் சென்றார்.
தன்னிடம் இணைவதற்கான காரணத்தைப் பேராசிரியர் கேட்டபோது, தனது தாய்நாட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க விரும்புவதாகத் தெரிவித்த பத்ரிநாத், அதேசமயம் பேராசிரியர் ஸ்கெஃபின்ஸ் போலவே தானும் பல மருத்துவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அவரது பதிலால் பெரிதும் ஈர்க்கப்பட்ட டாக்டர் ஸ்கெஃபின்ஸ் உடனடியாக பத்ரிநாத்தை தனது பயிற்சி மருத்துவராக சேர்த்துக் கொண்டார். இதனால் சிக்கலான vitreo-retinal surgeries எனும் விழித்திரை சிகிச்சைகளிலும் நிபுணத்துவம் பெற்றார் டாக்டர் பத்ரிநாத்.
தோள் கொடுத்த இணையர்: அதேநேரம் நியூயார்க் நகரில் டாக்டர் வசந்தி எனும் குழந்தைநல மருத்துவரைச் சந்தித்தார். இருவரும் 1967 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலேயே திருமணம் முடித்து, புதியதொரு வாழ்க்கையை அங்கு தொடங்கினர். தத்தம் பணிகளை சிறப்பாக செய்து வந்த தம்பதியினர் இருவரும் அடுத்தடுத்துப் பிறந்த இரு ஆண் குழந்தைகளையும் சிறப்பாகவும் வளர்த்தார்கள். இந்த சமயத்தில், தனது கணவரின் கனவுகளைப் பற்றிப் புரிந்துகொண்ட டாக்டர் வசந்தி அவருக்கு தோள் கொடுக்கவும் முடிவு செய்தார். மேற்படிப்பு பின்பு பணி என கிட்டத்தட்ட ஏழாண்டுகள் அமெரிக்காவில் வசித்துவந்த டாக்டர் பத்ரிநாத், தனது கனவான இந்திய மக்களுக்கு உதவும் எண்ணத்தை செயல்படுத்தும் முடிவோடு, 1970 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியாவிற்குத் திரும்பினார்.
அப்போது தங்கள் இருவரது ஏழு ஆண்டுகள் சம்பாத்தியத்தையும் செலவழித்து ஏழை எளிய மக்களுக்குக் கண்சிகிச்சைக்கான, பல உபகரணங்களையும் வாங்கித் தன்னுடன் கொண்டு வந்திருக்கிறார் டாக்டர் பத்ரிநாத். எவ்வளவு என்றால், சென்னை விமான நிலையத்தில் அந்த உபகரணங்களுக்கு அதிக சுங்க வரி விதிக்கப்பட, அதைக் கட்டக்கூட பணம் இல்லாத அளவுக்கு தனது கடைசி சேமிப்பு வரை செலவழித்திருந்து கடைசியில் அதைக்கூட தனது தமையனிடம் இருந்து வாங்கித்தான் கட்டினாராம் அவர். ஊருக்குத் திரும்பிய அவர் முதலில் தனக்கு ஏற்கெனவே பரிச்சயமான அடையார் வாலண்டரி ஹெல்த் சர்வீசஸில் பணிபுரிந்து, தொடர்ந்து விழித்திரை சிறப்பு நிபுணராக சென்னை விஜயா மருத்துவமனையில் பணிபுரிந்தார்.
அச்சமயத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் தலைவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை அவர் சந்தித்து, 1974 ஆம் ஆண்டு அவருக்கு சிக்கலான கண் அறுவை சிகிச்சையை செய்து, அவரதுபார்வையை மீட்டுத் தந்துள்ளார். கையில்பணமில்லை என்றாலும் மக்களுக்கு நன்மைசெய்ய வேண்டும் என்ற அவரது சேவை எண்ணத்தைப் புரிந்துகொண்ட காஞ்சி காமகோடி பீடத்தின் தலைவர்கள், பத்ரிநாத்துக்கு உதவ முன்வர, அவர்களிடமிருந்து பெற்ற நிதியுதவியுடன் சென்னையில் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அவரது கனவு மருத்துவமனை. லாப நோக்கற்ற அந்த மருத்துவமனைக்கு ‘சங்கர நேத்ராலயா' அதாவது 'கண்களுக்கான கோயில்' என்று பெயர் வைத்திருக்கிறார் அவர்.
அப்துல் கலாமுக்கும் ஒளி பாய்ச்சியவர்: அப்படி மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு மற்றும் சங்கர நேத்ராலயாவின் தலைவராகப் பொறுப்பேற்ற டாக்டர் பத்ரிநாத், அடுத்த 24 வருடங்களும் அங்கு தனது மூன்று குறிக்கோள்களை அன்றாடம் நிறைவேற்றி வந்துள்ளார். குறைந்த கட்டணத்தில் நிறைவான மருத்துவ சிகிச்சை, கண் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி, கண் மருத்துவத் துறையில் தொடர் ஆய்வுகள் ஆகிய அந்த மூன்று குறிக்கோள்களும் அவரது அயராத உழைப்பால் மட்டுமே நிறைவேறியது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். குறைந்தது ஒருநாளில் 1200 வெளிநோயாளிகள் பார்வை, நூற்றுக்கும் மேலான அறுவை சிகிச்சைகள், விழித்திரை, கண் நரம்பு, லேசர் சிகிச்சை உள்ளிட்ட புதிய சிறப்பு சிகிச்சைகள் என சங்கர நேத்ராலயாவில் தொடர்ந்து நடைபெற, எண்ணிலடங்கா மக்கள் பயனடைந்தனர்.
பார்வை அடைந்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி முன்னாள் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன், கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, பிரபல வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், என இவரது சிகிச்சையால் நலமடைந்த தலைவர்களின் பட்டியலும் பெரியதுதான். ஏறத்தாழ பத்தாயிரம் பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்த சங்கர நேத்ராலயா எனும் இலாபநோக்கற்ற நிறுவனத்தை நடத்த, அவர் ஒருமுறை கூட வங்கிக் கடன் எதுவும் பெற்றதில்லை. முழுக்க முழுக்க கொடையாளர்கள் அளித்த நிதியுதவியைக் கொண்டு மட்டுமே அதை சிறப்புற நடத்திய அவர், அதேபோல தனது பணி ஓய்வு காலம் வரை, தானும் சங்கர நேத்ராலயாவின் ஒரு மூத்த பணியாளராக மாத ஊதியம் மட்டுமே பெற்று பணிபுரிந்தார் அவர்.
(டாக்டர் பத்ரிநாத் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com