நானும் கதாசிரியரே! - 27: வட்டார வழக்கு கதைகளும் கவனிக்க வேண்டியவையும்!

நானும் கதாசிரியரே! - 27: வட்டார வழக்கு கதைகளும் கவனிக்க வேண்டியவையும்!
Updated on
2 min read

வட்டார வழக்கு கதைகள் குறித்து சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். சிலர் நாமும் வட்டார வழக்கில் கதை எழுதினால் என்ன என்று நினைத்திருப்பீர்கள். அப்போதுதான் அந்த மக்களின் வாழ்க்கை அவர்களின் வார்த்தைகளிலேயே கதையில் வெளிப்படும் என்றும் கருதுவீர்கள். உங்கள் கருத்து சரியானதுதான். நமது முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் அப்படி கருதியதால்தான் வட்டார வழக்கு மொழிநடையில் கதைகளையும் கவிதைகளையும் எழுதினார்கள். நீங்கள் அப்படி எழுதும்போது அடிப்படையாகச் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பேச்சுத் தமிழில் எழுதுதல்: வட்டார வழக்கில் எழுதும்போது இரண்டு வகையான முறைகள் கையாளப்படுகின்றன. ஒன்று, எழுத்தாளர் சொல்வது பொதுநடையிலும் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது வட்டார வழக்கு மொழிநடையிலும் சிலர் எழுதுவார்கள். இன்னும் சிலர், ஒட்டுமொத்தமாக அனைத்தையுமே வட்டார வழக்கு மொழிநடையில் மட்டுமே எழுதுவார்கள். இதில் இன்னொரு வடிவமும் இருக்கிறது. அதாவது எழுத்தாளர் பகுதி என்று இல்லாமல் கதையின் அனைத்துப் பகுதிகளும் பேச்சுத் தமிழிலேயே இருப்பதுபோல எழுதப்படும். இந்த வகை கதைகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் படிப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது. அதாவது நெல்லை வட்டார வழக்கு மொழிநடையை திருநெல்வேலியும் அதை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது. ஆனால், அவற்றைத் தவிர்த்த மற்ற பகுதியினருக்கு நிச்சயம் எளிதில் புரியாது.

இதற்கு தீர்வாக பலரும் சொல்வது, புரியாத சொற்களுக்கு அடிக்குறிப்பு தந்து பொதுத் தமிழில் விளக்கம் தரலாம் என்பதுதான். இது நல்ல யோசனைதான். ஆனால், ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு சொற்கள் அப்படி இருந்தால் அடிக்குறிப்புகள் தரலாம்தான். ஆனால், முழுக்கதையும் வட்டார சொற்களாக அமைந்து இருக்கும்போது அப்படித் தருவது சாத்தியம்தானா? சில வட்டாரச் சொற்களுக்கு ஒரே சொல்லில் விளக்கம் கொடுக்கலாம். சில சொற்களுக்கு நீளமாக விளக்கி எழுத வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் கதையை விட அடிக்குறிப்புகளுக்கு அதிகப் பக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். பழந்தமிழ் சொற்கள் உள்ள செய்யுள் என்றால் விளக்கவுரை எழுதலாம் முழுக்கதைக்கும் அப்படி எழுத முடியாது அல்லவா?

என்ன செய்யலாம்? - வட்டார வழக்குச் சொற்களில்தான் கதை எழுதப்போகிறேன் என்று தீர்மானித்து விட்டால், முதலில் கதையின் அமைப்பில் பெரிய குழப்பம் ஏற்படாமல் எளிமையாக எழுதிப் பழக வேண்டும். ஏனெனில், குழப்பமான கதை, புரிபடாத மொழி நடை எனில் வாசகர்கள் திணறி போவார்கள். அடுத்து, கதையின் ஓட்டத்தில் பல சொற்களுக்கான பொருளை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். சில பக்கங்களுக்குக் கடினமாக இருந்தாலும் பக்கங்கள் செல்லச் செல்லப் பழகிவிடும். அப்படி இருந்தும், கதையில் இடம்பெறும் சொற்களில் வாசகர்கள் புரிந்துகொள்ளவே முடியாதவை என நீங்கள் கருதும் சொற்களைப் பட்டியலிட வேண்டும். அவற்றுக்கான விளக்கங்களை முன்கூட்டியோ, பின் இணைப்பாகவோ தந்துவிடுதல் நல்லது.

சில பகுதிகளில் பெரிய கதை ஒன்றை ஒரே சொற்றொடரில் பழமொழி போல சொல்லிவிடும் வழக்கம் இருக்கிறது. அப்படியான இடங்கள் உங்கள் கதையில் இடம்பெற்றால் அவை பற்றியும் தனிக் குறிப்புகள் கொடுப்பதே சிறந்தது. இல்லையெனில் வாசகர்கள் நடுக்கடலில் துடுப்பின்றி படகில் சிக்கிக்கொண்டவரைப் போலாகி விடுவார். வட்டார வழக்கு கதைகளை எழுதும்போது எழுத்தாளர் சிரத்தை எடுத்துக்கொள்வதுபோல, வாசகர்களும் தயாராக வேண்டும். கொங்கு, கரிசல் உள்ளிட்ட வட்டார வழக்கு சொல் அகராதிகளை எழுத்தாளர்களுக்கும் பேராசிரியர்களும் உருவாக்கி தந்துள்ளனர். கதையில் வாசகர்களுக்கு புரிந்துகொள்ளும் இடங்களைத் தெரிந்துகொள்ள அவற்றின் துணையை நாடலாம்.

- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in