கதை கேளு கதை கேளு 52: ஜெமீமா வாத்து

கதை கேளு கதை கேளு 52: ஜெமீமா வாத்து
Updated on
2 min read

பெண் எழுத்தாளார் ப்யாட்ரிக்ஸ் பாட்டர் இயற்கை அறிவியலாளர், சூழலியலாளர், ஆங்கில மொழி குழந்தை எழுத்தாளர்.வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்வி கற்கும் வாய்ப்பை எளிதாக பெற்றவர். இவரின் முதல் நூல் 1902 களில் வெளிவந்தது. பீட்டர் முயல் அவருடைய முதல் நூல். பீட்டர் முயல் கதைகள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. அமேசான் தளத்தில் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் ஆங்கிலப் புத்தகங்கள் அனைத்துமே கிடைக்கின்றன. 1906 களில் ஆங்கில மொழியில் வெளிவந்த ஜெமீமா வாத்து புத்தகம், எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நீதி களையோ, அறிவுரைகளையோ சொல்லிக் கொண்டிருக்காமல் குழந்தைகள் இயல்புக் கேற்ற மகிழ்ச்சியான கதைகளை முயல், வாத்து, நரி, எலி, ஆந்தை போன்ற விலங் கினங்களை கதாபாத்திரமாக்கி சொல்லியுள்ளார் ப்யாட்ரிக்ஸ் பாட்டர்.

ஜெமீமா வாத்து: ஜெமீமா வாத்துக்கு ஒரு ஆசை. தன்னுடைய முட்டைகளை தானே அடைகாத்து குஞ்சு பொரிக்க வேண்டும் என்பதே அது. ஆனால் வாத்தின் உரிமையாளரோ ஜெமீமா இடும் முட்டைகளை,கோழியிடம் கொடுத்து அடைகாக்கச் சொல்வார். ஜெமீமா வாத்து தன் முட்டைகளை தானே அடைகாக்கும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, அருகிலுள்ள மலையின் மீதுள்ள, பாதுகாப்பான இருப் பிடத்தை உறுதிசெய்ய பயணம் செய்கிறது. மலைப் பகுதியில், பெரியவர் நரியாரை சந்திக்கிறது. நரியார் தன் வீடே பாதுகாப்பான தங்குமிடம் என்று கூறியதை அப்பாவி ஜெமீமா வாத்து நம்புகிறது.

நரியாரின் தந்திரம்: தினமும் வந்து முட்டையிடும் ஜெமீமாவையும், அதன் முட்டைகளையும் சேர்த்து வறுத்துத் தின்ன திட்டமிடும் நரியாரிடம் இருந்து ஜெமீமா தப்பித்ததா? யார் காப்பாற்றியது? அடுத்தடுத்த பக்கங் களை ஆவலாகத் திருப்பி வாசிக்க வைக்கும் ஜெமீமா வாத்து சிறுகதை.

பீட்டர் முயல் வீட்டில் அம்மா முயல்கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பீட்டர் முயல் மட்டும் காதிலேயே வாங்கிக் கொள்ளாது. பக்கத்து தோட் டத்தில் மட்டும் உணவு உட்கொள்ளச் செல்லாதே என்பார் அம்மா முயல். பீட்டர் முயல் நேராக திரு.மெக் க்ரேகரின் தோட்டத்திற்குதான் செல்லும். ஏற்கனவே மெக் க்ரேகரால்தான் பீட்டர் முயலின் அப்பா, கொத்துக்கறியானார். ஆனாலும் பீட்டர் முயல் க்ரேகரின் தோட்டத்திற்குச் சென்று, கேரட், வெங்காயம், முட்டைக்கோஸ் என வயிறு புடைக்கத் தின்னும். ஒருநாள் பீட்டர் முயல், திரு.மெக் க்ரேகரிடம் மாட்டிக்கொள்ளும். பீட்டர் முயல் தப்பிக்கச் செய்யும் முயற்சிகள், சாகசங்களாய் நம் கண் முன் விரியும். பீட்டர் முயலின் மாமன் மகன் பெஞ்சமின் முயல், இருவரும் திரு.மெக். க்ரேகரின் தோட்டத்தில் செய்யும் அட்டகாசங்கள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்.

சுத்தக்கார டிட்டில்: இந்த டிட்டில் எலியை நமக்கு மிகவும் பிடிக்கும். தனக்கென எலி வளையை கட்டிக்கொண்டு வாழும் டிட்டிலுக்கு எப்போதும் தன் வளையை சுத்தமாகப் பார்த்துக்கொள்ள பிடிக்கும். துடைப்பமும் கையுமாக டிட்டில் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும். ஸ்ஸ்ஸ்ஸ்டிஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்கவே, யாரென்று டிட்டில் தேடிச் செல்கிறது. வீட்டின் ஒரு மூலையில் சில வண்டுகள் இருக்கின்றன. சுத்தம் செய்ய துடைப்பத்தை எடுக்கும்போதுதான், தவளை நண்பன் ஜாக்சன் டிட்டிலுக்கு நினைவுக்கு வரும்.

ஆனால் ஜாக்சன் இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் என்று டிட்டில்நினைக்கும்போதே, வீட்டின் முன்னறை யில் ஜாக்சன் தன் அழுக்கு சட்டையுடன், எல்லா சாக்கடைகளிலும் நீந்திக் களைத்ததால், நாற்காலியில் வந்து அமர்ந்திருக்கும். டிட்டில் ஜாக்சனிடம் பேசும் உரையாடல்களை, குழந்தைகள் ரசிப்பர். ஜாக்சனின் தூய்மையில்லாத நடவடிக்கைகள் டிட்டிலுக்கு பிடிக்கவில்லையென்றாலும், ஜாக்சனிடம் மரியாதையாகவே பேசி அனுப்பிவைக்கும். அடுத்தடுத்த நாட்களில் டிட்டில் தன் வீட்டின் தூய்மையைப் பாதுகாக்க, வீட்டின் நுழைவுவாயிலை சிறியதாக்கி, ஜாக்சனை வீட்டிற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளும். ஆனாலும் ஜாக்சன் கோபித்துக் கொள்ளவில்லை. டிட்டில், ஜாக்சன் நட்பு தொடருகிறது.

செல்லப் பிராணிகள் மீது அன்பு: வசதியான குடும்பத்தில் பிறந்தவர் பாட்டர். மற்ற குழந்தைகளுடன் பழகுவதற்கு அனுமதிக்காத பெற்றோர். அதனால் வீட்டில் இருந்த வளர்ப்பு மிருகங்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். அதனால்தான் தன் கதைகளில் மனிதர்களைப் போன்றே விலங்குகளின் வாழ்க்கையை சுவாரசியமாக விவரிக்கிறார்.

- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in